முதல் போட்டியில் பங்களாதேஷிடம் வீழ்ந்த இலங்கை

Under 20 SAFF Championship

350

20 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தமது முதல் போட்டியில் இலங்கை அணி 1-0 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வி கண்டுள்ளது.

போட்டியை நடத்தும் இந்தியாவுடன் இலங்கை, மாலைதீவுகள், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்கும் இம்முறை 20 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் போட்டித் தொடர் திங்கட்கிழமை (25) ஆரம்பமானது.

இதில் தமது முதல் போட்டியை பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலங்கை விளையாடிது. இந்தியாவின் புவனேஷ்வரில் உள்ள காலிங்க அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் எந்தவித கோல்களையும் பெற முடியவில்லை.

எனினும், இரண்டாம் பாதியில் ஆட்டத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பங்களாதேஷ் வீரர்கள் தொடர்ந்து கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதன் பலனாக, அவ்வணிக்கு மாற்று வீரராக வந்த மிராஜுல் இஸ்லாம் போட்டியின் 71ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

அதன் பின்னரும் தொடர்ந்து கோல் முயற்சிகளை மேற்கொண்ட பங்களாதேஷ் வீரர்களுக்கு மேலதிக கோல்கள் எதுவும் கிடைக்கப் பெறாமையினால் போட்டி நிறைவில் 1-0 என்று வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது.

முழு நேரம்: இலங்கை 0 – 1 பங்களாதேஷ்

கோல் பெற்றவர்கள்

பங்களாதேஷ் – மிராஜுல் இஸ்லாம் 71’

இலங்கை அணி தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் புதன்கிழமை (27) நேபாளம் அணியை சந்திக்கவுள்ளது.

இதேவேளை, போட்டித் தொடரின் ஆரம்ப போட்டியாக இடம்பெற்ற மாலைதீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4-0 என்ற கோல்கள் கணக்கில் நேபாளம் அணி வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<