இலங்கை 20 வயதின்கீழ் அணியின் பயிற்றுனர் குழாம் அறிவிப்பு

234
Sri Lanka U20 coaching staff for SAFF U20 Championship 2022; Devasagayam Head Coach

இலங்கை 20 வயதின்கீழ் தேசிய கால்பந்து அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளராக ராஜமணி தேவசகாயத்தையும், உதவி பயிற்றுனராக ஒகஸ்டின் ஜோர்ஜ்ஜையும், கோல் காப்பு பயிற்றுனராக சமன் தயாவன்சவையும் இலங்கை கால்பந்து சம்மேளனம் நியமித்துள்ளது.

இலங்கை 20 வயதின்கீழ் அணியினர்,  இவ்வருடம் இடம்பெறவுள்ள 20 வயதிற்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடரிலும், அடுத்த வருடம் இடம்பெறவுள்ள 20 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண தகுதிகாண் தொடரிலும் பங்கேற்கவுள்ளனர்.

தெற்காசிய 20 வயதிற்குட்பட்டோருக்கான சம்பியன்ஷிப் தொடர் இந்தியாவில் ஜூலை 25 தொடக்கம் ஆகஸ்ட் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அதில் இலங்கை அணி இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவுகள் மற்றும் நேபாளம் அணிகளை எதிர்த்தாடவுள்ளது.  தொடர்ந்து 2023 இல் இடம்பெறும் 20 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண தகுதிகாண் தொடர் செப்டம்பர் 14 தொடக்கம் 18 ஆம் திகதி வரை இடம்பெறும். இதில் குழு E இல் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, போட்டியை நடத்தும் நாடான மொங்கோலியாவுடன் தென் கொரியா மற்றும் மலேசியா அணிகளுக்கு எதிராக விளையாடும்.

மேற்கூறிய தொடர்களில் விளையாடுவதற்காக, தேசிய அணியின் பயிற்றுனர்களான அண்ட்ரூ மொரிசன் மற்றும் கீத் ஸ்டீவன்சன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழும், பிபா உலகக் கிண்ணத்தில் விளையாடிய வீரரான டிம் காஹில் இன் மேற்பார்வையின் கீழும் இலங்கை கால்பந்து சம்மேளனம் இந்த புதிய பயிற்றுனர் குழாத்தை நியமித்துள்ளது.

ராஜமணி தேவசகாயம் AFC ‘B’ பயிற்றுனர் சான்றிதழை வைத்துள்ளார். மத்யம லங்காவில் ஒரு வீரராக தொழில் முறை கால்பந்தை ஆரம்பித்த அவர், தொடர்ந்து ரினோன் கழகத்திற்காக விளையாடி, பின்னர் 1990-2009 வரை விமானப்படை அணிக்காக விளயாடினார். 2013 தொடக்கம் 2015 வரை அப் கன்ட்ரி லயன்ஸ் அணியின் பயிற்றுனராக தனது பயிற்றுனர் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

கம்பளை கிறிஸ்டல் பலஸ் அணியை, தான் பயிற்றுவித்த ஒரே ஒரு பருவகாலத்தில் (2015-16), சம்பியன்ஸ் லீக்கின் சுபர் 8 சுற்றில் 4ஆம் இடத்தில் நிறைவடைய வைத்தார்.

இவர் 2016-17 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இலங்கை ஆண்கள் தேசிய அணியின் உதவி பயிற்றுனராக சேவை ஆற்றினார். அத்தோடு 2022 இல் முதன் முறையாக இடம்பெற்ற சுபர் லீக் தொடரில் புளூ ஸ்டார் அணியை சம்பியன்ஷிப்பை வெல்ல வைத்தார்.

ஒகஸ்டின் ஜோர்ஜ்ஜும்  AFC ‘B’ பயிற்றுனர் சான்றிதழை வைத்துள்ளார். அவர் ரினோன் (1990-95), ஓல்ட் பென்ஸ் (1995-2000) மற்றும் ஜாவா லேன் (2000-2010) கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார்.  ஒகஸ்டின் 1993 இல் இலங்கை 19 வயதின்கீழ் அணியின் தலைவராக செயல்பட்டு, 2000 தொடக்கம் 2003 வரை இலங்கை தேசிய அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

2012 இலிருந்து 2015 வரை ஜாவா லேன் அணியின் பயிற்றுனராக இருந்த அவர், மீண்டும் தற்பொழுது அக்கழகத்தின் பயிற்றுனராக உள்ளார். இவரின் கீழ் ஜாவா லேன் அணி 2013 இல் டிவிசன் 1 சம்பியன் கிண்ணம் வென்றார்கள். அத்தோடு சிட்டி லீக் ஒழுங்கு செய்து விளையாடிய 19 வயதின்கீழ் எக்ஸ்போ லங்கா தொடரிலும் வெற்றி பெற்றார்கள்.

சமன் தயாவன்ச,  AFC ‘B’ பயிற்றுனர் சான்றிதழையும், முதலாம் நிலை AFC கோல்காப்பாளர் பயிற்றுனர் சான்றிதழையும் பெற்றுள்ளார்.  ஒரு வீரராக 1995 தொடக்கம் 2009 வரை விமானப் படை அணிக்காக விளையாடிய அவர், ஜாவா லேன் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இவர் 2004 இலிருந்து 2005 வரை இலங்கை தேசிய அணிக்காக விளையாடியுள்ளார்.

தயாவன்ச கோல்காப்பு பயிற்றுனராக விமானப் படை அணியில் 2010 தொடக்கம் 2016 வரை பணியாற்றினார். பின்னர்  ரினோன் கழகத்திற்காக 2018 தொடக்கம் 2020 வரை கோல்காப்பு பயிற்றுனராக இருந்தார். இவர் 2017 இல் நிகம்பூ யூத் கழகத்தின் தலைமை பயிற்றுனராக கடமையாற்றினார். தயாவன்ச, 2022 இல் நடைபெற்ற சிலோன் மாகாண அணிகளுக்கு இடையிலான தொடரில் சம்பியனான வட மாகாண அணிக்கு  கோல்காப்பு பயிற்றுனராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் இலங்கை ஆண்கள் தேசிய அணியின் கோல்காப்பு பயிற்றுனராகவும் (2022), இலங்கை பெண்கள் அணியின் கோல்காப்பு பயிற்றுனராகவும் (2013-14), இலங்கை 19 வயதின்கீழ் அணியின் கோல்காப்பு பயிற்றுனராகவும் (2019), இலங்கை 23 வயதின்கீழ் அணியின் கோல்காப்பு பயிற்றுனராகவும் (2021) செயல்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

                                       >> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<