பங்களாதேஷை வீழ்த்தி சுபர் 12இன் முதல் வெற்றியை பெறுமா இலங்கை?

ICC Men’s T20 World Cup 2021

120

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெற்றுவரும் ஐசிசி T20 உலகக்கிண்ணத்தில், தங்களுடைய சுபர் 12 சுற்றுக்கான முதல் மோதலில், பங்களாதேஷ் அணியை, நாளைய தினம் (23) இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது.

இரண்டு அணிகளும், முதல் சுற்றில் வெற்றிகளை பெற்று, சுபர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், சுப்பர் 12 சுற்றில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்த காத்திருக்கின்றன.

சுபர் 12 சுற்று குழு 1 அணிகளின் நிலை எவ்வாறு உள்ளன?

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் 2018ம் ஆண்டுக்கு பின்னர், T20I தொடர்களில் விளையாடியிருக்கவில்லை. இதற்கு முன்னர், விளையாடிய 11 போட்டிகளில் இலங்கை அணி 7 போட்டிகளிலும், பங்களாதேஷ் அணி 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

ஒட்டுமொத்த வெற்றிகளின் அடிப்படையில் இலங்கை அணி முன்னிலை பிடித்திருந்தாலும், இறுதியாக விளையாடிய T20I போட்டிகளில் பங்களாதேஷ் அணி முன்னிலையை பெற்றிருக்கின்றது. இறுதியாக, கடந்த 2018ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற நிதஹாஸ் கிண்ண தொடரில், இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும், பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றிருந்தது.

இதன் பின்னர், இரண்டு அணிகளுக்கும் இடையில் T20I போட்டிகள் நடைபெறாவிட்டாலும், உலகக்கிண்ணத்துக்கான பயிற்சிப்போட்டிகளில் மோதியிருந்தன. இந்தப்போட்டியில், இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்திருந்தது.

அதேநேரம், இந்த இரண்டு அணிகளும், 2007ம் ஆண்டுக்கு பின்னர், முதன்முறையாக T20 உலகக்கிண்ணத்தில் நேரடியாக மோதுகின்றன. 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் T20 உலகக்கிண்ணத்தில், இரண்டு அணிகளும் மோதியிருந்த நிலையில், குறித்த போட்டியில் இலங்கை அணி, 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இதன் பின்னர், முதன்முறையாக இரண்டு அணிகளும், T20 உலகக்கிண்ணத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இலங்கை அணி

இம்முறை T20 உலகக்கிண்ணத்துக்கு, பாரிய எதிர்பார்ப்புகள் இன்றி இலங்கை அணி சென்றிருந்தாலும், முதல் சுற்றில் விளையாடிய விதம் அணியின் மீதான நம்பிக்கையை அதிகமாக்கியுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான T20I தொடரை 3-0 என இழந்த நிலையில், ஓமானுக்கு புறப்பட்ட இலங்கை அணி, தொடர்ச்சியாக ஓமான் தொடர், பயிற்சிப்போட்டிகள் மற்றும் முதல் சுற்று போட்டிகள் என 7 போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்து, சுப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

நமீபியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக மிகச்சிறப்பான வெற்றிகளை இலங்கை அணி பதிவுசெய்துள்ளது. குறிப்பாக, இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் மிக அபார திறமை வெளிப்பட்டுள்ளதுடன், மூன்று போட்டிகளிலும், அதிகமாக எதிரணிக்கு 101 ஓட்டங்கள் மாத்திரமே விட்டுக்கொடுக்கப்பட்டன.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களான துஷ்மந்த சமீர, லஹிரு குமார, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் மிகச்சிறந்த பிரகாசிப்புகளை வழங்கியதுடன், இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பந்துவீச்சு குழாமாக இலங்கையின் பந்துவீச்சு குழாம் மாறியுள்ளது.

பந்துவீச்சு பக்கம் இலங்கை அணியிடம், குறைபாடுகளை கண்டறிய முடியாவிட்டாலும், அணியின் துடுப்பாட்டம் சில கேள்விகளை வைத்திருக்கின்றன. முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களில், அனைவரும் ஒன்றிணைந்து ஓட்டங்களை பெறத்தவறிவருகின்றனர். குறிப்பாக, குசல் பெரேரா, நெதர்லாந்து அணிக்கு எதிராகவும், பெதும் நிஸ்ஸங்க அயர்லாந்து அணிக்கு எதிராகவும் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தனர்.

ஆனாலும், ஆரம்ப விக்கெட்டுக்கான சிறந்த இணைப்பாட்டம் இதுவரை, அணிக்கு கிடைக்கவில்லை. அதேநேரம், மூன்றாவது இலக்க துடுப்பாட்ட வீரர் யாராக இருப்பார் என்ற கேள்வி சுப்பர் 12 சுற்றுவரையும் அணியுடன் தொடர்கிறது. தினேஷ் சந்திமால் முதலிரண்டு போட்டிகளிலும் சோபிக்கவில்லை. சரித் அசலங்க அணியில் இணைக்கப்பட்டும் அவரும் பிரகாசிக்கவில்லை.

இந்தநிலையில், பங்களாதேஷ் அணியுடனான போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாலும், மேலதிக சுழல் பந்துவீச்சாளர் என கருத்திற்கொண்டு தனன்ஜய டி சில்வா அணியில் இடம்பெறலாம். அணியின் முதன்மை சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன உபாதை காரணமாக, இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்பதால், அவரின் இடத்தை நிரப்புவதற்கு, மேலதிக சுழல் பந்துவீச்சாளர் ஒருவரின் தேவை ஏற்பட்டுள்ளது.

இலங்கை குழாம்

தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, அகில தனன்ஜய, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார

எதிர்பார்ப்பு வீரர்

இந்த T20 உலகக்கிண்ணத்தில், இலங்கை அணிக்காக அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர் வனிந்து ஹஸரங்க. சகலதுறை வீரராக பிரகாசித்துவரும் இவர், கடந்த சில போட்டிகளில் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிவந்தார்.

எனினும், அயர்லாந்து அணிக்கு எதிராக முக்கியமான தருணத்தில் மிகச்சிறந்த முறையில், 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, துடுப்பாட்டத்திலும் சோபிக்க ஆரம்பித்துள்ளார். இவரின் மணிக்கட்டு சுழல், குறிப்பாக கூக்லி பந்துகள் எதிரணிக்கு மிகவும் சவால் மிக்கது.

T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றில் விளையாடிய இவர், மூன்று போட்டிகளில், 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், ஒரு இன்னிங்ஸில் 71 ஓட்டங்களை பெற்றுள்ளார். எனவே, சுப்பர் 12 சுற்றின் முதல் போட்டிக்கு இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் அணியை பொருத்தவரை, T20 உலகக்கிண்ணங்களில் மிகச்சிறந்த பிரகாசிப்புகளை வழங்கியிருக்கவில்லை. இதுவரை 25 போட்டிகளில் விளையாடி 19 தோல்விகளையும், 5 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

ஆனால், பங்களாதேஷ் அணியின் கடந்தகால வெற்றிகள், அவர்களின் நம்பிக்கை மட்டத்தை உயர்த்துவதாக அமைந்துள்ளன. குறிப்பாக, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளை தங்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்தியிருந்தது.

குறிப்பிட்ட வெற்றிகளுடன், பலமான அணியாக, உலகக்கிண்ணத்துக்கு நுழைந்த போதும், சில சறுக்கல்களை முதல் சுற்றில் எதிர்கொண்டிருந்தது. குறிப்பாக ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்து, சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறுமா? என்ற கேள்வி எழுந்திருந்தது. எனினும், திறமையான அணியென்பதை பப்புவா நியூகினியா மற்றும் ஓமான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் நிரூபித்து, சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

குறிப்பாக அந்த அணியின் அனுபவ சகலதுறை வீரர் சகீப் அல் ஹஸன், அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாகியுள்ளதுடன், அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் முக்கியமான துறுப்புச்சீட்டாக மாறியுள்ளனர். வேகப்பந்துவீச்சில் முஷ்பிகூர் ரஹ்மான், டஸ்கின் அஹ்மட் மற்றும் மொஹமட் சய்புதீன் ஆகியோர் பிரகாசித்து வருவதுடன், துடுப்பாட்டத்தில் மொஹ்மதுல்லாஹ், சகீப் அல் ஹஸன் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் நயீம் ஆகியோர் ஓட்டங்களை குவித்துள்ளனர். எனவே, சிறந்த சகலதுறை பிரகாசிப்புகளுடன், பலமான அணியாக பங்களாதேஷ் அணி மீண்டிருக்கிறது.

பங்களாதேஷ் குழாம்

மொஹ்மதுல்லாஹ் (தலைவர்), அபிப் ஹுசைன், லிடன் டாஸ், மெஹிதி ஹாஸன், மொஹமட் நயீம், மொஹமட் சய்புதீன், முஷ்பிகூர் ரஹீம், முஷ்தபிசூர் ரஹ்மான், நசூம் அஹ்மட், நூருல் ஹாஸன், சகீப் அல் ஹஸன், ஷமிம் ஹுசைன், ஷொரிபுல் இஸ்லாம், சௌமிய சர்கார், டஸ்கின் அஹ்மட்

எதிர்பார்ப்பு வீரர்

பங்களாதேஷ் அணியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக சகீப் அல் ஹஸன் உள்ளார். இவர் அனுபவம், பந்துவீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு என அனைத்து விடயங்களிலும் பங்களாதேஷின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றார்.

குறிப்பாக முதல் சுற்றின் மூன்று போட்டிகளில் 108 ஓட்டங்களை குவித்துள்ள இவர், பந்துவீச்சில் முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார். இவர், மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், சுப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியின் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார்.

இறுதியாக…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளை எடுத்துக்கொண்டால், தற்போதைய நிலையில், இரண்டு அணிகளும் சம பலத்தை கொண்டுள்ளன. குறிப்பாக ஷார்ஜா ஆடுகளம், சுழல் பந்துவீச்சுக்கு அதிகம் சாதகமான ஒன்றாக உள்ளது. இரண்டு அணிகளிலும் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

எனவே, இரண்டு அணிகளும் தங்களுடைய துடுப்பாட்டத்தில் அதிகமான கவனங்களை செலுத்தி வருகின்றன. நாளைய போட்டியை பொருத்தவரை, துடுப்பாட்டத்தில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். அதனால், சுப்பர் 12 சுற்றில் இரண்டு அணிகளும் தங்களுடைய துடுப்பாட்ட பலத்தை வெளிப்படுத்தி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொள்ளும் முகமாக நாளைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<