சுபர் சன்னை வீழ்த்திய செரண்டிப்; இறுதி நேரத்தில் வெற்றியை இழந்த பெலிகன்ஸ்

Champions League 2022

320

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஆறாவது வாரத்திற்காக ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற ஒரு போட்டியில் சுபர் சன் அணியை செரண்டிப் வீரர்கள் வெற்றி கொள்ள, இலங்கை பொலிஸ் மற்றும் பெலிகன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையடைந்தது.

இதேவேளை, கண்டி போகம்பரை விளையாட்டரங்கில் இடம்பெற இருந்த கிறிஸ்டல் பெலஸ் மற்றும் மொறகஸ்முல்ல அணிகளுக்கு இடையிலான போட்டி, மைதானம் சிறந்த நிலையில் இல்லாமையினால் பிற்போடப்பட்டுள்ளது.

செரண்டிப் கா.க எதிர் சுபர் சன் வி.க

மாலிகாபிடிய மைதானத்தில் இந்தப் போட்டி ஆரம்பமாகி 5 நிமிடங்களில் மத்திய களத்தில் இருந்து வழங்கப்பட்ட பந்துப் பரிமாற்றத்தின்மூலம் மொஹமட் இஸ்ஸடீன் செரண்டிப் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

எனினும், அடுத்த 7 நிமிடங்களில் சுபன் சன் அணிக்கான கோலை மொஹமட் சஜான் பெற, முதல் பாதி தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் நிறைவுற்றது.

எனினும் இரண்டாம் பாதியின் 62ஆவது நிமிடத்தில் செரண்டிப் வீரர் கொட்ரி பிரின்ஸ் போட்டியின் வெற்றி கோலைப் பெற, போட்டி நிறைவில் செரண்டிப் வீரர்கள் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று, தொடரில் தமது ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்தனர்.

முழு நேரம்: செரண்டிப் கா.க 2 – 1 சுபர் சன் வி.க

இலங்கை பொலிஸ் வி.க எதிர் பெலிகன்ஸ் வி.க

கொழும்பு சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 19ஆவது நிமிடத்தில் பொலிஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மொஹமட் சாஜித் கோலாக்க, அதுவே முதல் பாதியில் பெறப்பட்ட கோலாக இருந்தது.

எனினும் இரண்டாம் பாதி ஆரம்பமாகி சில நிமிடங்களில் பொலிஸ் மத்திய கள வீரர் தமிழ் செல்வன் மூலம் ஓன் கோல் முறையில் பெலிகன்ஸ் தமக்கான முதல் கோலைப் பெற்றது.

தொடர்ந்து 79ஆவது நிமிடத்தில் நப்ஷான் பெலிகன்ஸ் அணிக்கான அடுத்த கோலையும் போட்டு போட்டியில் முன்னிலைப் படுத்தினார். எனினும், 90 நிமிடங்கள் கடந்த நிலையில் மதுக சிறிவர்தன பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கான இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்து போட்டியை தலா இரண்டு கோல்களுடன் சமநிலைப்படுத்தினார்.

முழு நேரம்: இலங்கை பொலிஸ் வி.க 2 – 2 பெலிகன்ஸ் வி.க

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<