இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மோதல் எவ்வாறு அமையும்?

1137

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு பின்னர், தற்போது அணிகள் யாவும்  ஒருநாள் போட்டிகளில் தங்களை மீளக் கட்டமைத்து அடுத்த உலகக் கிண்ணத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள இப்போதிருந்தே தயாார்படுத்தல்களை ஆரம்பித்துவிட்டன.

அதன்படி, அடுத்த சில மாதங்களுக்குள் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ள எதிர்பார்க்கப்படும் இலங்கை அணியும், பங்களாதேஷ் அணியும் உலகக் கிண்ணத் தொடருக்கு அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு ஒருநாள் தொடரில் மோதவிருக்கின்றன. 

தசுன் ஷானகவின் போராட்டம் வீணாக பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர்……

இந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் இம்மாதம் 26ஆம், 28ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறுகின்றன. 

கடந்தகாலம்

பிரிஸ்டல் நகரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவேண்டிய உலகக் கிண்ண குழுநிலை போட்டி மழையினால் கைவிடப்பட்டிருந்தது. இந்த உலகக் கிண்ண மோதல் தவிர்த்து இரண்டு அணிகளும் இதுவரையில் 45 ஒருநாள் போட்டிகளில் மோதியிருக்கின்றன. அதில், இலங்கை அணி 36 வெற்றிகளையும், பங்களாதேஷ் அணி 7 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், 2 போட்டிகள் முடிவுகள் ஏதுமின்றி கைவிடப்பட்டுள்ளது. 

இலங்கை மண்ணில் இரண்டு அணிகளும் ஆடிய ஒருநாள் போட்டிகளை எடுத்து நோக்கும் போது 19 போட்டிகளில் இலங்கை அணி 15 வெற்றிகளை பெற்றுள்ளது. மறுமுனையில் பங்களாதேஷ் அணி 2 வெற்றிகளை பெற்றுள்ளதோடு, இரண்டு அணிகளுக்கும் இடையிலான முடிவுகளற்ற 2 ஒருநாள் போட்டிகளும் இலங்கை மண்ணிலேயே இடம்பெற்றிருந்தன.

கடைசியாக, 2017ஆம் ஆண்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இலங்கை வந்த பங்களாதேஷ் அணி குறித்த தொடரை, 1-1 என சமநிலை செய்திருந்தது. 

ஆனால், இலங்கை அணியினை இதுவரை ஒருநாள் தொடரொன்றில் தோற்கடிக்காத பங்களாதேஷ் அணி சிறந்த பதிவு ஒன்றை இம்முறை மேற்கொள்ள எதிர்பார்க்கும். 

இலங்கை அணி 

இந்த ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியினை கவனிக்க முன்னர், பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் முதல் போட்டியோடு இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான லசித்  மாலிங்க ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தரும் விடயமாக அமைந்திருக்கின்றது. 

பங்களாதேஷுடனான ஒருநாள் தொடரின்பின் இலங்கையின் தரவரிசையில் ஏற்படும் மாற்றங்கள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு……

இதேவேளை, லசித் மாலிங்க ஓய்வு பெற்றுக் கொள்வதால் பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணிக்கு பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. 

பங்களாதேஷ் அணியுடனான இந்த ஒருநாள் தொடருக்கு 22 பேர் அடங்கிய இலங்கை வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது அது 16 பேராக குறைக்கப்பட்டிருக்கின்றது. 

தற்போதைய வீரர்கள் குழாத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் அதன் தலைவர் திமுத் கருணாரத்ன, குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாந்து ஆகியோரினால் பலப்படுத்தப்படுகின்றது. இவர்களில் குசல் ஜனித் பெரேரா இந்த ஆண்டு இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (463) பெற்ற வீரராக காணப்படுகின்றார். 

இதேவேளை சிரேஷ்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு திரிமான்ன ஆகியோரிடம் இருந்தும் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறை இந்த ஒருநாள் தொடரில் சிறந்த பங்களிப்பினை எதிர்பார்க்கின்றது. இதில் திரிமான்ன கடைசியாக விளையாடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணியின் மத்திய வரிசையினை பலப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் அஞ்செலோ மெதிவ்ஸ் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 54.75 என்ற துடுப்பாட்ட சராசரியினை கொண்டிருக்கின்றார். 

அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிகளில் ஜொலிக்கத் தவறிவரும் குசல் மெண்டிஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோர், பங்களாதேஷ் அணியுடனான தொடரில் தமது வழமையான துடுப்பாட்ட பாணிக்கு திரும்புவார்கள் என நம்பப்படுகின்றது. மேலும், பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் தனது அதிரடி துடுப்பாட்ட திறமையை நிரூபித்த தசுன் சானக்க குழாமில் இருப்பது இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் இன்னும் வலுச் சேர்க்கின்றது. எனினும், சானக்கவுக்கு பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் மாத்திரமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மஹேல, சங்காவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

இலங்கை முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார்……

இதேநேரம் தனன்ஞய டி சில்வா பகுதிநேர சுழல் பந்துவீச்சாளரகவும், துடுப்பாட்ட வீரராகவும்  இலங்கை அணிக்கு பங்களிப்பு வழங்க காத்திருக்கின்றார். அதேநேரம், நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் ஒருநாள் அணியில் இணைந்திருக்கும் அகில தனன்ஞய இலங்கைத் தரப்பிற்கு தனது மாய சுழல் மூலம் நம்பிக்கை தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

லசித் மாலிங்க இந்த ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடுவதனால் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் நுவன் பிரதீப்பை தமது பிரதான வேகப் பந்துவீச்சாளராக நம்பியிருக்கின்றது. நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்காக சிறப்பாக பந்துவீசிய நுவன் பிரதீப் கசுன் ராஜித, இசுரு உதான மற்றும் லஹிரு குமார ஆகியோருடன் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுத்துறைக்கு பலம் சேர்க்கவுள்ளார். 

இலங்கை அணி – திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாந்து, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு திரிமான்ன, ஷெஹான் ஜயசூரிய, தனன்ஜய டி சில்வா, அகில தனன்ஜய, வனிது ஹசரங்க, திசர பெரேரா, இசுரு உதான, கசுன் ராஜித, லஹிரு குமார, நுவன் பிரதீப், லசித் மாலிங்க (முதல் போட்டிக்கு மட்டும்),  தசுன் சானக்க (இந்த ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கு மட்டும்)

பங்களாதேஷ் அணி 

பல இளம் வீரர்களுடன் இலங்கை வந்திருக்கும் பங்களாதேஷ் அணி, இந்த ஒருநாள் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை அணிக்கு சவால் கொடுக்கும் நிலையிலேயே காணப்படுகின்றது. 

எனினும், பங்களாதேஷ் அணியில் அதனது மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமை பாரிய இழப்பாகும். அதில், முதன்மையானவராக சகீப் அல் ஹஸன் காணப்படுகின்றார்  சகீப் அல் ஹஸன் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரில் 606 ஓட்டங்கள் குவித்தும் 11 விக்கெட்டுக்கள் கைப்பற்றியும் சகலதுறை வீரராக புதியதொரு சாதனையினை நிலைநாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், பங்களாதேஷின் நம்பிக்கைக்குரிய ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மாறியிருக்கும் லிடன் தாஸூம் இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. இவர்களோடு இந்த ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணியின் தலைவராக செயற்படவிருந்த மஷ்ரபி மொர்தஸாவும் காயம் காரணமாக விலகியிருக்கின்றார். மஷ்ரபி மொர்தஸா இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 26 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுக்களை சாய்த்த பங்களாதேஷ் வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணியின் தலைவராக தமிம் இக்பால் செயற்படவுள்ளார். அணித்தலைவரான தமிம் இக்பால் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் முக்கிய துடுப்பாட்ட வீரராகவும் இருக்கின்றார். ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் (645) பெற்ற பங்களாதேஷ் வீரராகவும் தமிம் இக்பால் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை தொடரில் அணித் தலைவரை இழந்தது பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்டஷா தொடை……

தமிம் இக்பாலுடன் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்துறை முஷ்பிகுர் ரஹீம், அனாமுல் ஹக், சௌம்யா சர்க்கார், மொஹமட் மிதுன் மற்றும் மஹ்மதுல்லா ஆகியோரினால் பலம் பெறுகின்றது. 

இதேவேளை பங்களாதேஷ் அணிக்கு சுழல்பந்து சகலதுறை வீரர்களாக மெஹிதி ஹஸன், சப்பீர் ரஹ்மான் மற்றும் மொசாதிக் ஹொஸைன் ஆகியோர் வலுச்சேர்க்கின்றனர். 

பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சுத்துறைக்கு பெறுமதி சேர்க்க முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அஹமட், ருபெல் ஹொசைன் மற்றும் பர்ஹாட் ரெசா ஆகியோர் காணப்படுகின்றனர். அதில் முஸ்தபிசுர் ரஹ்மான் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரில் 20 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். அதேவேளை பர்ஹாட் ரெசா 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் பங்களாதேஷ் அணிக்காக ஒருநாள் போட்டி ஒன்றில் ஆடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலமே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

பங்களாதேஷ் குழாம் – தமிம் இக்பால் (தலைவர்), சௌம்யா சர்க்கார், அனாமுல் ஹக், மொஹமட் மிதுன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லாஹ், மொஸாதிக் ஹொஸைன், சப்பீர் ரஹ்மான், மெஹிதி ஹஸன், தைஜூல் இஸ்லாம், ருபெல் ஹொசைன், தஸ்கின் அஹமட், முஸ்தபிசுர் ரஹ்மான், பர்ஹாட் ரெசா

மைதான நிலைமைகள் குறித்து

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளன. போட்டி நடைபெறும் இந்த மைதானத்தில் அதிக புற்கள் காணப்படுவதால் வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த ஒருநாள் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<