ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளருக்கு கொரோனா

246
IPL

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு இராச்சியத்தில்  நடைபெற உள்ளது. போட்டிகள் அபுதாபி, டுபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் 53 நாட்ளுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், அனைத்து ஐ.பி.எல் அணிகளும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்குப் பிறகு டுபாய் நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளன. அதற்கு முன் அனைத்து அணிகளும் தங்கள் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்ய ஆரம்பித்துள்ளன.

>>IPL அணிகளில் இடம்பெறவுள்ள 50 இளம் வலைப் பந்துவீச்சாளர்கள்

இதனிடையே, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அடுத்த வாரம் மும்பையில் ஒன்று கூடி அங்கிருந்து தனி விமானத்தில் ஐக்கிய அரபு இராச்சியம் செல்ல இருந்தது. அந்த அணி வீரர்கள் ஆறு நாட்கள் மும்பையில் தனிமைப்படுத்திக் கொண்டு மூன்று தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, மும்பையில் ஒன்று சேர்வதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ளும்படி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்வாகம் தங்கள் வீரர்கள், பயிற்சியாளர்கள் குழுவிற்கு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக்கிற்கு கொவிட் – 19 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவரே உறுதிப்படுத்தி இருக்கிறார்.

>>Video – LPL இல் களமிறங்கும் நட்சத்திரங்கள்|Sports RoundUp – Epi 127

இது குறித்து திஷாந்த் யாக்னிக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தனக்கு கொவிட் – 19 வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், தன்னுடன் கடந்த 10 நாட்களில் தொடர்பில் இருந்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ளுமாறும், 14 நாட்கள் தனிமைக்கு பின் இரண்டு முறை பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவு கிடைத்தால் தான் அணியுடன் இணையலாம் எனவும் கூறியுள்ளார்.

>Dishant Yagnik @Dishantyagnik77

இதேநேரம், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 14 நாட்களுக்கு பிறகு பிசிசிஐ விதிமுறைப்படி திஷாந்த் யாக்னிக் இரண்டு தடவைகள் பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்வார்.

இரண்டு முறை கொவிட் – 19 வைரஸ்  தொற்று இல்லை என முடிவு வந்த உடன் மீண்டும் 6 நாட்கள் தனிமையில் இருந்து மூன்று தடவைகள் வைரஸ் தொற்று இல்லை என முடிவு வந்தால் அவர் அணியுடன் இணைவார் என கூறியுள்ளது.

மேலும், அவருடன் எந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரரும் கடந்த பத்து நாட்களில் நேரடி தொடர்பு கொள்ளவில்லை என அந்த அணி நிர்வாகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அவர் விரைவாக குணமடைய வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டுள்ளது.

திஷாந்த் யாக்னிக் ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பளராக விளையாடியவர். ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிலும் விளையாடி உள்ளார்.

தற்போது தன் சொந்த ஊரான உதய்பூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில்,  கொவிட் – 19 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மருத்துவமனையில் 14 நாட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<