தனது வீரர்களின் சிறப்பான துடுப்பாட்ட உதவியுடன், இன்று ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியில், ஆப்கானிஸ்தான் கனிஷ்ட அணியினை 77 ஓட்டங்களால் தோல்வியடையச்செய்து இத்தொடரின், இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை இந்திய கனிஷ்ட அணி பெற்றுக்கொள்கின்றது.

இதன் காரணமாக இம்முறையும், நடைபெற்று முடிந்த ஏனைய ஆசிய கிண்ணத்ததொடர்கள் போன்று அரையிறுதி வரை வந்து, இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல், இத்தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் கனிஷ்ட அணி துரதிர்ஷ்டவசமாக வெளியேறுகின்றது.

முன்னதாக, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய கனிஷ்ட அணியின் தலைவர் அபிஷேக் சர்மா முதலில், துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி, ப்ரீத்வி சாவ், ஹிமான்சு ரானா ஆகியோருடன் களமிறங்கிய இந்திய கனிஷ்ட அணி கச்சிதமான பவுண்டரிகள் உடன் அதிரடியான ஒரு ஆரம்பத்தினை பெற்றது. இவ்வேளையில், ப்ரீத்வி சாவ் 22 ஓட்டங்களுடன், ஆப்கானிஸ்தான் அணியின் வபடாரின் பந்தில், இப்றாஹீம் சத்ரானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து சென்றார்.

இதனை, தொடர்ந்து புதிதாக வந்த வீரரான சுப்மன் கில் உடன் சேர்ந்து மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹிமான்சு ரனா இந்திய கனிஷ்ட அணிக்காக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினார். இவர்களின் இணைப்பாட்டம் காரணமாக இந்திய கனிஷ்ட அணி ஒரு வலுவான நிலையை நோக்கி நகர்ந்தது.

பின்னர், சுப்மன் கில்லின் விக்கெட்டினை தொடர்ந்து வந்த வீரர்களில் இந்திய கனிஷ்ட அணியின் தலைவர் அபிஷேக் சர்மாவினைத் தவிர, ஏனையோர் பெரிதாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமல், சொற்ப ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இருப்பினும், மறுகளத்தில் போராடிய ஹிமான்சு ரானா பெற்றுக்கொண்ட சதத்தின் உதவியுடன் இந்திய கனிஷ்ட அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில், இந்திய கனிஷ்ட அணி சார்பாக சதம் கடந்த ஹிமான்சு ரனா 123 பந்துகளில், இரண்டு சிக்ஸர்கள் பன்னிரண்டு பவுண்டரிகள் உள்ளடங்களாக 130 ஓட்டங்களை குவித்தார்.

இவருடன், கைகோர்த்திருந்த மற்றைய வீரரான சுப்மன் கில், 51 பந்துகளில் 45 ஓட்டங்களை அவரின் அணிக்காக பெற்றுத் தந்தார்.

பந்து வீச்சில், ஆப்கான் அணி சார்பாக அவ்வணியின் தலைவரும் வலது கை வேகப்பந்து வீச்சாளருமான நவீன் உல் ஹக் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து, கடின இலக்கான 295 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற ஆப்கானிஸ்தான் கனிஷ்ட அணி தயராகியது.

தனது ஆரம்ப வீரர்கள் இருவரினையும் சொற்ப ஓட்டங்களுடன், ஆப்கானிஸ்தான் இழந்தது. இதனையடுத்து தொடர்ச்சியாக வந்த வீரர்களும், ஆட்டமிழந்து செல்ல, ஒரு கட்டத்தில் 83-5 என்னும் இக்கட்டான நிலைக்கு ஆப்கானிஸ்தான் அணி சென்றது.

இந்த நிலையில், 6ஆவது விக்கெட்டுக்காக, ஜோடி சேர்ந்த நிஸார் வஹ்தட் மற்றும் சம்சூர் ரஹ்மான் ஆகியோர் 94 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை 200 வரை உயர்த்தினர். இதனை தொடர்ந்து, போட்டியை வெல்வதற்கு ஆப்கானிஸ்தான் கனிஷ்ட அணிக்கு போதிய ஓவர்கள் இல்லாத காரணத்தினால், 50 ஓவர்கள் நிறைவில் 7  விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்று, 77 ஓட்டங்களினால் தோல்வியினைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில், நிசார் வஹ்தட் 86 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் உள்ளடங்களாக 75 ஓட்டங்களையும் சம்சூர் ரஹ்மான் 49 ஓட்டங்களையும் ஆப்கானிஸ்தான் கனிஷ்ட அணி சார்பாக பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் இந்திய கனிஷ்ட அணி சார்பாக, கமலேஷ் நாகர்கோட்டி, யாஷ் தாகூர், ராகுல் சஹர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

இந்திய கனிஷ்ட அணி: 294 (49.1) – ஹிமான்சு ரானா 130(123), சுப்மன் கில் 45(51), அபிஷேக் சர்மா 31(50), நவீன் உல் ஹக் 80/5(10)

ஆப்கானிஸ்தான் கனிஷ்ட் அணி: 217/7 (50) – நிசார் வஹ்தட் 75(86), சம்சூர் ரஹ்மான் 49(70), இப்றாஹீம் சத்ரான் 33(77), ராகுல் சஹர் 33/2(10)

போட்டி முடிவு – இந்திய கனிஷ்ட அணி 77 ஓட்டங்களால் வெற்றி

நாளை 21 ஆம் திகதி நடைபெற இருக்கும் ஆசிய கிண்ணத்தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் கனிஷ்ட அணிகள் மோதுகின்றன.