ஹொங்கொங்கிடம் படுதோல்வியடைந்த இலங்கை கனிஷ்ட ரக்பி அணி

165
Sri lanka vs Hong kong

19 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி சுற்றுத்தொடரில், இலங்கை அணி தனது இரண்டாவது போட்டியில் நடப்புச் சம்பியன் ஹொங்கொங் அணியை சந்தித்தது. இன்றைய தினம் மலேசியாவில் இடம்பெற்ற இப்போட்டியில், எதிரணியின் அபாரமான ஆட்டத்தை எதிர்கொள்ளத் திணறிய இலங்கை அணி 61-00 என்ற புள்ளி வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

மோசமான விளையாட்டுப் பாணியினாலும் போட்டிக் கட்டுப்பாடின்றி விளையாடியதாலும், ஒரு புள்ளியேனும் பெறாத நிலையில் இலங்கை அணி ஏமாற்றமளித்தது. ஹொங்கொங் வீரர்கள் போட்டியில் முழு ஆதிக்கத்தையும் நிலைநாட்டி சகல துறைகளிலும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.

19 வயதிற்குட்பட்ட ஆசிய ரக்பி போட்டிகளில் முதலாவது வெற்றியை இலங்கை அணி சுவீகரித்தது

19 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி போட்டிகளில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் மலேசிய அணியை சந்தித்தது.

முதல் நிமிடம் முதலே போட்டியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த ஹொங்கொங் அணி, பின்வரிசை வீரர் மெத்திவ் வோர்லி மூலம் தமது முதல் ட்ரையினை பெற்றுக் கொண்டது. ‘கன்வெர்ஷன்’ உதையையும் வோர்லி வெற்றிகரமாக உதைத்தார். (ஹொங்கொங் 07 – இலங்கை 00)

தொடர்ந்தும் தனது அணியின் புள்ளிகளை அதிகரித்த மெத்திவ் வோர்லி அடுத்தடுத்து இரண்டு பெனால்டி உதைகளை இலக்கு நோக்கி உதைத்தார். (ஹொங்கொங் 13 – இலங்கை 00)

முதல் பாதியில் இலங்கை அணிக்கு புள்ளிகளை பெற்றுக் கொள்ளக் கூடிய மூன்று இலகுவான வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும், மோசமான பந்து கையாளுதலினால் அவ்வாய்ப்புக்கள் கைநழுவின. இந்நிலையில் ரமேஷ் பெர்னாண்டோவிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதனால் இலங்கை அணிக்கு முதல் பாதியின் அடுத்த 10 நிமிடங்கள் 14 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட ஹொங்கொங் அணி அடுத்தடுத்து இரண்டு ட்ரைகள் வைத்து இலங்கையின் எதிர்பார்ப்புக்களை சிதறடித்தது. ஒலிவர் ஓவர்மன் முதல் ட்ரையை பெற்றுக் கொண்டதுடன், மெத்திவ் வோர்லியின் லாவகமாக உதையின் மூலம் ஜேம்ஸ் கார்ட்டன் இரண்டாவது ட்ரையை கம்பங்களுக்கடியில் வைத்தார். இரண்டு ‘கன்வெர்ஷன்’ உதைகளுமே குறிதவறவில்லை. (ஹொங்கொங் 27 – இலங்கை 00)

முதல் பாதி: ஹொங்கொங் 27 – இலங்கை 00

இரண்டாம் பாதியையும் அசத்தலாக ஆரம்பித்த ஹொங்கொங் வீரர்கள் முதல் நிமிடத்திலே ட்ரை வைத்தனர். இலங்கையின் தடுப்பாட்ட வீரர்களின் கவனயீனத்தை புள்ளிகளாக மாற்றிய ஒலிவர் ஓவர்மன், இப்போட்டியில் தனது இரண்டாவது ட்ரையை பெற்றுக் கொண்டார். இம்முறையும் வோர்லியின் உதை கம்பங்களை ஊடறுத்துச் சென்றது. (ஹொங்கொங் 34 – இலங்கை 00)

தொடர்ந்தும் இலங்கை அணியின் தடுப்பாட்டம் மோசமானதாக காணப்பட்டதால், இலகுவாக தடுப்பை ஊடுருவி முன்னேறிய கெமரூன் ஸ்மித் மற்றுமொரு ட்ரை வைத்தார். இம்முறை வோர்லி ‘கன்வெர்ஷன்’ உதையை தவறவிட்ட போதிலும், சில நிமிடங்களில் கிடைத்த பெனால்டி உதையை வெற்றிகரமாக உதைத்தார். (ஹொங்கொங் 42 – இலங்கை 00)

இறுதி இருபது நிமிடங்களில் மாற்று வீரர்களை களமிறக்கிய ஹொங்கொங் அணி தனது ட்ரை வேட்டையை தொடர்ந்தது. பின்வரிசை வீரரான மார்கஸ் ரமகே இரண்டு ட்ரைகளை பெற்றுக் கொண்டதுடன், மற்றுமொரு ட்ரையை வைய்த்த ஒலிவர் ஓவர்மன் இப்போட்டியில் மூன்று ட்ரைகளை வைத்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். (ஹொங்கொங் 61 – இலங்கை 00)

முழுநேரம்: ஹொங்கொங் 61 – இலங்கை 00

இலங்கை அணிக்கு முன்கள வீரர்களின் ஊடாக பல ட்ரை வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும், ஹொங்கொங் அணியின் சிறப்பான தடுப்பாட்டத்தினால் அவை தவறவிடப்பட்டன. இலங்கையின் பின்கள ‘த்ரீ குவார்ட்டர்’ வீரர்கள் மோசமான ஆட்டத்தையே இப்போட்டியில் வெளிப்படுத்தியிருந்தனர்.

ஹொங்கொங் வீரர் மெத்திவ் வோர்லி உதைத்தலிலும் தாக்குதல் நகர்வுகளிலும் அபாரமான திறமையை வெளிக்காட்டியிருந்தார். அவரை தவிர ஹெட்ரிக் ட்ரை சாதனை படைத்த ஒலிவர் ஓவர்மன், தாக்குதல் ஆட்டம் மற்றும் தடுப்பாட்டம் என இரண்டிலும் சிறப்பாக செயற்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

ThePapare.com இன் ஆட்ட நாயகன்: ஒலிவர் ஓவர்மன் (ஹொங்கொங்)

புள்ளிகளை பெற்றோர்

ஹொங்கொங் அணி

ட்ரை – ஒலிவர் ஓவர்மன் (3), மார்கஸ் ரமகே (2), கெமரூன் ஸ்மித், மெத்திவ் வோர்லி, ஜேம்ஸ் கார்ட்டன்

கன்வெர்ஷன் – மெத்திவ் வோர்லி (4), மார்க் கோபர்க் (2)

பெனால்டி – மெத்திவ் வோர்லி (3)