தெற்காசியாவின் அதிவேக வீரர் யுபுனுக்கு மற்றொரு சர்வதேசப் பதக்கம்

314
Yupun Abeykoon

தெற்காசியாவின் அதிவேக குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் ப்ரியதர்ஷன, சுவிட்சர்லாந்தில் நேற்று (15) நடைபெற்ற Galà dei Castelli  மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றரை 10.24 செக்கன்களில் ஓடிமுடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

>> தெற்காசியாவின் அதிவேக வீரரான யுபுன் ப்ரியதர்ஷன

இந்த வருடத்தில் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அதிவேக காலத்தைப் பதிவு செய்த உலகின் 2ஆவது வீரராக இடம்பிடித்த தென்னாபிரிக்கா நாட்டு வீரரான அகானி சிம்பைனி  (Akani Simbine) உள்ளிட்ட நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் யுபுன் ப்ரியதர்ஷன போட்டியிட்டார். 

இதன்படி, குறித்த போட்டியை 10.02 செக்கன்களில் நிறைவுசெய்த அகானி சிம்பைனி தங்கப் பதக்கத்தையும், இத்தாலியின் இளம் வீரரான பிலிப்போ டோர்டு 10.07 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர். 

இதனிடையே, குறித்த போட்டியில் கலந்துகொண்ட நெதர்லாந்தின் முன்னாள் 100 மீற்றர் சம்பியனும், 2012 ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீற்றரில் 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டவருமான சுரண்டி மார்டினாவினை (Churandy Martina) இலங்கை வீரர் யுபுன் ப்ரியதர்ஷன வீழ்த்தியிருந்தமை சிறப்பம்சமாகும்

முன்னதாக, ஜேர்மனியில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற என்ஹால்ட் ஜேர்மன் சர்வதேச மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றரை 10.16 செக்கன்களில் ஓடி முடித்து புதிய தெற்காசிய சாதனை படைத்த யுபுன் ப்ரியதர்ஷன, தனது தனிப்பட்ட அதிசிறந்த தூரத்தைப் பதிவு செய்து ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சாதனையையும் முறியடித்தார். 

அதன்போது, 2019ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் குழாத்துக்கான தகுதிகாண் போட்டியில் இலங்கை வீரரான ஹிமாஷ ஷான் 10.22 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டிய சாதனையையும் யுபுன் ப்ரியதர்ஷன முறியடித்திருந்தார்.

அதுமாத்திரமின்றி, இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டு வரலாற்றில் ஐரோப்பாவில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டித் தொடரொன்றில் பதக்கம் வென்ற முதவாவது வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.  

25 வயதுடைய யுபுன் ப்ரியதர்ஷன, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில் ஒன்றின் ஊடாக கடந்த ஐந்து வருடங்களாக இத்தாலியில் பயிற்சிகளைப் பெற்று வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<