19 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி போட்டிகளில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் மலேசிய அணியை சந்தித்தது. விறுவிறுப்பான போட்டியின் பின்னர் தனுஜ மதுரங்கவின் இறுதி நிமிட ட்ரையின் மூலம் 27-21 என்று மலேசிய அணியை இலங்கை அணி வென்றது.

போட்டியின் முன்னர் பெய்த மழையினால் மைதானம் ஈரமாகக் காணப்பட்டாலும், இரு அணிகளும் பந்தை நன்றாக பரிமாறி விளையாடின. வழக்கம் போல் மலேசிய அணியானது தமது பலம் மிக்க முன் வரிசை வீரர்களைக் கொண்டு இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. மலேசிய அணியின் ப்ளை ஹாப் நிலை வீரரான சுல்பிகார் ரசாலி  தனது உதைகளின் மூலம் பந்தை இலங்கை அணியின் எல்லைக்குள் உதைத்து இலங்கை அணி பின் வரிசை வீரர்களுக்கு சோதனை அளித்தார். இருந்தாலும் இலங்கை அணியின் பின் வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடி பந்தை வேகமாக நகர்த்திய பொழுதும் ஒரு சில தவறுகளினால் புள்ளிகளைத் தவறவிட்டனர். இதனால் இரு அணிகளும் புள்ளிகள் எதனையும் பெறவில்லை.

Photos: Sri Lanka v Malaysia – Asia U19 Rugby Championship 2016

Photos of the Sri Lanka v Malaysia – Asia U19 Rugby Championship 2016

15 நிமிடங்களின் பின்னர் இலங்கை அணியின் பின் வரிசை வீரரான கயான் விக்ரமரத்ன இலங்கை அணிக்கு முதல் புள்ளியை பெற்றுக்கொடுத்தார். 25 மீட்டர் தூரத்தில் கிடைத்த இலகுவான பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி கம்பங்களின் நடுவே உதைத்து 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். 19 ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு முறை கயான் விக்ரமரத்ன இலங்கை அணி சார்ர்பாக புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். இம்முறை ரொமேஷ் ப்ரியங்கர மலேசிய அணி வீரர்களைக் கடந்து பரிமாறிய பந்தினை பெற்றுக்கொண்ட கயான் இலங்கை அணி சார்பாக மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தார்.  இலங்கை அணி கடினமான உதையை தவறவிட்ட பொழுதும் 8 – 0 என முன்னிலை வகித்தது.

அனால் அதன் பின்னர் போட்டி மலேசிய அணியின் வசம் திரும்பியது. அதிரடியாக இலங்கை அணியின் கோட்டைக்குள் நுழைந்த மலேசிய அணியானது இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இலங்கை அணியின் கோட்டைக்குள் மலேசிய அணி அழுத்தத்தின் மேல் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக, இலங்கை அணியின் ஷாலிந்த்ர அலஹகோன் தவறு செய்தமையால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு 10 நிமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டார். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட மலேசிய அணி தமது அணியின் ப்ரொப் நிலை வீரரான அகீல் ஸகரிய்யா மூலமாக கம்பத்தின் அருகே ட்ரை வைத்தது. சுல்பிகார் ரசாலி உதையையும் வெற்றிகரமாக உதைந்து புள்ளி வித்தியாசத்தை 1 புள்ளியாகக் குறைத்தார்.

மலேசிய அணியானது தொடர்ந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. 32 ஆவது நிமிடத்தில் மலேசிய அணியின் முன் வரிசை வீரர் மேலும் ஒரு ட்ரை வைத்து மலேசிய அணியை போட்டியில் முதன் முறையாக முன்னிலை அடையச் செய்தார். சுல்பிகார் இம்முறையும் உதையை தவறவிடவில்லை.

முதற் பாதியின் முடிவின் பொழுது இலங்கை அணியானது 6 புள்ளிகள் பின்னடைவாகக் காணப்பட்டது.

முதற் பாதி : இலங்கை அணி 08 – மலேசிய அணி 14

இரண்டாம் பாதியின் ஆரம்பம் முதல் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தியது. எதிரணியின் கோட்டையினுள் இலங்கை அணி நுழைந்தது. இலங்கை அணியின் ஹுகர் நிலை வீரர் சயான் ஸாபர் ட்ரை வைப்பதற்கான அற்புதமான வாய்ப்பை கை நழுவவிட்டார். இலங்கை அணி முன் வரிசை வீரர்கள் ரோலிங் மோல் மூலமாக ட்ரை வைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தும் அது வீணானது. எனினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியானது எதிரணிக்கு தொடர்ந்து சவால் விடுத்தது. தலைவர் நிகில் குணதீர 54 ஆவது நிமிடத்தில் மலேசிய அணி வீரர்கள் சிலரைக் கடந்து சென்று ட்ரை வைத்தார். விக்ரமரத்ன உதையை வெற்றிகரமாக உதைந்து இலங்கை அணியை மீண்டும் ஒரு முறை 1 புள்ளியால் முன்னிலை அடைய செய்தார். (மலேசிய 14 – இலங்கை 15)

இரண்டு அணிகளும் வெற்றிபெறும் நோக்கில் சிறப்பான போட்டியை வெளிக்காட்டியது. இலங்கை அணியின் உபதலைவர் குஷான் இந்துனில் 64 ஆவது நிமிடத்தில் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் 3 புள்ளிகளைப் பெற மலேசிய அணி முயற்சி செய்த பொழுதும் மொஹமட் நஸீரின் உதை கம்பங்களுக்கு வெளியே சென்றதால் புள்ளிகளைப் பெறத்தவறியது. எனினும் விட்டுக்கொடுக்காத மலேசிய அணியானது 66 ஆவது நிமிடத்தில் 8ஆம் இலக்க நிலை வீரரின் மூலமாக ட்ரை வைத்தது. நசீர் இம்முறை உதையை தவறவிடவில்லை. (மலேசிய 21 – இலங்கை 15)

வெற்றிபெறும் நோக்குடன் இலங்கை அணியானது மலேசிய அணிக்கு கடும் அழுத்தத்தைக் கொடுத்தது. சில கட்டங்களின் பின்னர் அதீஷ வீரதுங்க மலேசிய வீரர்களைக் கடந்து இலங்கை அணி சார்பாக முக்கியமான ட்ரை வைத்தார். எனினும் சந்தேஷ் ஜெயவிக்ரம தீர்மானம் மிக்க உதையை தவறவிட்டார். (மலேசிய 21 – இலங்கை 20)

இறுதி நிமிடம் நெருங்கிக்கொண்டிருக்க இரு அணிகளும் போட்டியில் வெற்றிபெறுவதற்காக தம்மால் முடியுமானவற்றை செய்தன. எனினும் மாற்று வீரராக களத்தினுள் நுழைந்த தனுஜ மதுரங்க இலங்கை அணியின் பக்கம் இறுதி நிமிடத்தில் போட்டியை திருப்பினார். கயான் மற்றும் ரமேஷ் பெர்னாண்டோ இணைந்து எதிரணியின் 22 மீட்டர் எல்லையினுள் பந்தை கொண்டுவந்தனர். இரண்டு கட்டங்களிற்கு பிறகு பந்தை பெற்றுக்கொண்ட தனுஜ இலங்கை அணி சார்பாக வெற்றி ட்ரையை வைத்தார். சந்தேஷ் ஜெயவிக்ரம உதையை உதைக்க முன்னரே இலங்கை அணியின் வெற்றி தீர்மானிக்கப்பட்ட பொழுதும் சந்தேஷ் உதையை வெற்றிகரமாக உதைந்தார் .

முழு நேரம் : இலங்கை அணி 27 – மலேசிய அணி 21

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் : அகீல் ஸகரிய்யா (மலேசியா)

புள்ளிகள் பெற்றோர்

இலங்கை அணி
ட்ரை – கயான் விக்ரமரத்ன, நிகில் குணதீர, அதிஷ வீரதுங்க, தனுஜ மதுரங்க
கொன்வெர்சன் – கயான் விக்ரமரத்ன (2), சந்தேஷ் ஜெயவிக்ரம (1)
பெனால்டி – கயான் விக்ரமரத்ன (1)

மலேசிய அணி
ட்ரை – அகீல் சக்கரியா, 2ஆம் இலக்க வீரர், 8ஆம் இலக்க வீரர்
கொன்வெர்சன் – சுல்பிகார் ரசாலி (2), நசீர் (1)