ஆஸியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு எழுவர் போட்டி

555
Getty images

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் கேப்டவுனில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்துவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டமை நிரூபணமாகியது.

இதனையடுத்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, அவ்வணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருட போட்டித் தடையும், போன்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் போட்டித் தடையும் விதித்து அதிரடித் தீர்ப்பை வெளியிட்டது.

கண்ணீருடன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வோர்னர்

கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால், ஒரு…..

அதனைத்தொடர்ந்து தென்னாபிரிக்காவுடனான 4ஆவது டெஸ்ட் போட்டியின் பிறகு அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டெரன் லீமனும் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் யார் என்பது தொடர்பில் பரவலாகப் பேசப்பட்டதுடன், அந்த பதவிக்காக 7 பேர் தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அவதானம் செலுத்தியுள்ளது.

எனினும், அவுஸ்திரேலிய அணி அடுத்து பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் இங்கிலாந்துடன் இடம்பெறவுள்ள நிலையில், உடனடியாகவே பயிற்சியாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. இதனால், அந்நாட்டு கிரிக்கெட் நோக்கில் புதிய பயிற்சியாளரை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான ஜஸ்டின் லாங்கர், ஜேஸன் கிளெஸ்பி, ரிக்கி பொண்டிங், பிரெட் ஹெடின், கிறிஸ் ரொஜர்ஸ், டேவிட் சாகர் மற்றும் ட்ரெவர் பெய்லிஸ் ஆகியோர் அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளனர்.

இதேவேளை, நாளை(20) ஒன்றுகூடவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ளும் எனவும், அடுத்த மாத ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் நியமனம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிரிக்கெட் நாடகமாக மாறியுள்ள ஆஸி வீரர்களின் சூழ்ச்சி

கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டு என்பதால் அதில் சில சம்பிரதாயங்களை …..

இதேநேரம், டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு வெவ்வேறான பயிற்சியாளர்களை நியமிக்கவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை அவதானம் செலுத்தவுள்ளது.

ஜஸ்டின் லாங்கர்

Getty images

தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டெரன் லீமனை, பிரதியீடு செய்பவர்களில் முதன்மையானவராக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் விளங்குகிறார்.

அனுபவமிக்க வீரரான ஜஸ்டின், கடும் போக்குத்தன்மை கொண்டவர் என அனைவராலும் சொல்லப்பட்டாலும், தற்போதுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணியை கட்டியெழுப்புகின்ற திறமை அவரிடம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2016ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தின் போது டெரன் லீமன் தனிப்பட்ட காரணங்களுக்காக அங்கு செல்லவில்லை. இதனால், அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் கடமையாற்றினார். இதேநேரம், 2012 முதல் மேற்கு அவுஸ்திரேலிய மாநில மற்றும் பேர்த் ஸ்கோச்சர்ஸ் அணிகளின் பயிற்றுவிப்பாளராகவும் அவர் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்.

ஜேஸன் கிளெஸ்பி

Getty images

அவுஸ்திரேலிய அணியின் முழு நேர பயிற்சியாளராக தெரிவாவதில் முன்னிலையில் உள்ளவர்களில் ஜேஸன் கிளெஸ்பியும் விளங்குகின்றார். இங்கிலாந்து கவுண்டி அணியான சசெக்ஸின் பயிற்சியாளராக தற்போது கடமையாற்றிக் கொண்டிருக்கும் கிளெஸ்பி, முன்னதாக யோர்க்ஷயார் அணியின் பயிற்சியாளராகவும் செயற்பட்டு அவ்வணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரான கிளெஸ்பி, முன்னதாக அவுஸ்திரேலிய T-20 அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டுள்ளார். எனினும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ட்ரெவர் பெய்லிஸுடன் போட்டியிட்ட ஜேஸன் கிளெஸ்பி, இறுதி நேரத்தில் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதால், அங்குள்ள நிலைமைகளை நன்கு அறிந்த கிளெஸ்பியை அவுஸ்திரேலியா தனது பயிற்சியாளராக நியமிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு வேறு பயிற்சியாளர் ஒருவரை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை நியமிப்பதாக இருந்தால், அதற்கு முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஜேஸன் கிலெஸ்பி நியமிக்கப்படுவதற்காக வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ரிக்கி பொண்டிங்

Getty images

அவுஸ்திரேலிய T-20 அணிக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த ரிக்கி பொண்டிங், அவுஸ்திரேலிய அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படலாம் என பலராலும் நம்பப்படுகின்றது.

ஆரம்பத்தில் முழு நேர பயிற்றுவிப்பாளராக செயற்படுவதற்கு மறுப்பு தெரிவித்து வந்த பொண்டிங், T-20 போட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக மாத்திரம் செயற்படுவதற்கு தனது விருப்பத்தை வெளியிட்டிருந்தார். அந்த வகையில் வீரர்களுடன் சகஜமாகப் பழகும் குணத்தைக் கொண்ட பொண்டிங், 2019 உலகக் கிண்ணம் மற்றும் 2020 T-20 உலகக் கிண்ணம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு பயிற்சியாளராக நியமிக்கப்படலாமென்று கூறப்படுகின்றது.

அவுஸ்திரேலிய அணிக்காக அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக உள்ள பொண்டிங், 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியினது பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட அதேவேளை, இவ்வருடம் டெல்லி டேயார்டெவில்ஸ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ட்ரெவர் பெய்லிஸ்

Getty images

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியை இறுதிப் போட்டிவரை கொண்டு சென்ற பெருமை ட்ரெவர் பெய்லிஸை சாரும்.

55 வயதான ட்ரெவர் பெய்லிஸ், 2015ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 4-0 என்ற ரீதியில் படுதோல்வியைத் தழுவியிருந்தாலும், ஒரு நாள் தொடரை 4-1 எனக் கைப்பற்றியது.

லங்கன் பிரீமியர் லீக் தொடரின் அவசியத்தை விளக்கும் ரசல் ஆர்னோல்ட்

கடந்த காலங்களில் திறமைமிக்க வெளிநாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்கும் உள்ளூர்………

எனினும், , அடுத்தாண்டு நடைபெறும் ஆஷஸ் தொடர் முடிவில் தனது ஒப்பந்தம் முடிவடையும்போது இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ட்ரெவர் பெய்லிஸ் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அவரை அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் நிவ் சவுத் வேல்ஸ் அணிக்காக முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், முன்னதாக நிவ் சவுத் வேல்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸ்ர்ஸ் அணிகளின் ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டேவிட் சாகர்

Getty images

தற்போது அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்ற டேவிட் சாகர், கடந்த ஆண்டு இந்தியாவில் மேற்கொண்ட ஒரு நாள் சுற்றுப்பயணத்தின் போது அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக செயற்பட்டார்.

2016 /17 பருவகாலத்தில் ஷெபீல்ட் சீல்ட் முதல்தர கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற விக்டோரியா அணியின் பயிற்சியாளராக செயற்பட்ட சாகரும் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார்.

எனினும், அவுஸ்திரேலியாவின் முதல்தரப் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள அவருக்கு போதியளவு சர்வதேச அனுபவம் இல்லாததால் பயிற்சியாளர் பதவி கிடைக்குமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரெட் ஹெடின்

Getty images

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரான பிரெட் ஹெடின், கடந்த 6 மாதங்களாக அவ்வணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.

எனினும், அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளராக தெரிவாவதற்கு குறைந்த பட்ச வாய்ப்பை கொண்டுள்ள 40 வயதான பிரெட் ஹெடின், முன்னதாக அவுஸ்திரேலிய ஏ மற்றும் நிவ் சவுத் வேல்ஸ் அணிகளின் உதவிப் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் ரொஜர்ஸ்

Getty images

அவுஸ்திரேலிய அணியின் மற்றொரு பயிற்சியாளர் வேட்பாளராக கிறிஸ் ரொஜர்ஸ் விளங்குகிறார்.

அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பு குழாத்தில் பந்துவீச்சுப் பிரிவில் இணைந்துகொண்டு வீரர்களை வழிநடத்தி வருகின்ற ரொஜர்ஸ், கடந்த 18 மாதங்களில், இங்கிலாந்தின் சமர்செட் மற்றும் க்ளுசெஸ்டர்ஷெயர் அணிகளுடனான சுற்றுப்பயணங்களில் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் குழாத்திலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் யார் அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளராக வரலாம்? உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க