நிர்மல்,டேனியல் ஜோடியின் உதவியுடன் இலங்கை இளைஞர் அணி முன்னிலையில்

169
sl v eng day 2

இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணிக்கும் இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட  இளைஞர் கிரிக்கட் அணிக்கும் இடையிலான 2ஆவது நான்கு நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 3ஆம் திகதி நோர்த்ஹாம்டனில் ஆரம்பமாகியது. இரண்டாம் நாளான ஆகஸ்ட் 4ஆம் திகதி இலங்கை இளைஞர் அணி 307 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. ஆட்ட நேர முடிவின் பொழுது இரண்டாம் இனிங்ஸைத் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து இளைஞர் அணி 24 ஓட்டங்களைப் பெற்று 1 விக்கட்டை இழந்து காணப்படுகிறது.

போட்டியின் முதல் நாளன்று இலங்கை வேக பந்து வீச்சாளரான லஹிரு குமாரவின் உதவியுடன் இங்கிலாந்து இளைஞர் அணியை 208 ஓட்டங்களுக்கு வீழ்த்தியது இலங்கை இளைஞர் அணி. தொடந்து முதல் இனிங்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை இளைஞர் அணி முதல் நாள் முடிவின் பொழுது 48 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டை இழந்து காணப்பட்டது.

இரண்டாம் நாள் முறையே 10 ஓட்டங்களுடனும், 20 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்த பெர்னாண்டோ மற்றும் சரித் அசலங்க ஜோடி மேலும் 25 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில், இலங்கை இளைஞர் அணி 73 ஓட்டங்களைப் பெற்று இருந்த பொழுது தலைவர் அசலங்க பனாயியின் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய சில்வாவும் பியர்டின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து 5 ஓட்டங்களுடன்  மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். மீண்டும் அசத்தலாகப் பந்து வீசிய பனாயி தனது மூன்றாவது விக்கட்டையும் கைப்பற்றினார். இம்முறை உப தலைவர் சம்மு அஷானை ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழக்கச் செய்து இலங்கை இளைஞர் அணியை இக்கட்டான நிலைக்குத் தள்ளினார்.

79 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் காணப்பட்ட இலங்கை இளைஞர் அணியை பெர்னாண்டோ மற்றும் பண்டார ஆகிய வீரர்கள் 51 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று கரையேற்றினர். எனினும் 135 பந்துகளில் 49 ஓட்டங்களை நிதானமாகப் பெற்று இருந்த வேளையில் பெர்னாண்டோ அரைச் சதத்தை பூர்த்தி செய்யாமலே ஆட்டமிழக்க இலங்கை இளைஞர் அணி மீண்டும் பின்  தள்ளப்பட்டது.

தொடந்து பண்டாரவும் பார்ன்ஸின் பந்து வீச்சில் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை இளைஞர் அணி 6 விக்கட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.

7ஆவது விக்கட்டுக்காக இணைந்த நிர்மல் மற்றும் டேனியல் ஜோடி 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று இலங்கை அணியின் இனிங்ஸிற்கு மீண்டும் உயிர் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய டேனியல் 125 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்று இலங்கை இளைஞர் அணி முதல் இனிங்ஸில் இங்கிலாந்து இளைஞர் அணியைப் பின்தள்ள கரம் கொடுத்தார்.

டேனியலைத் தொடர்ந்து பிரசான், நிர்மலுக்குத் துணையாக துடுப்பெடுத்தாடி 20 ஓட்டங்களைப் பெற்று ஹோல்டனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய நிர்மல் 207 பந்துகளுக்கு முகம் கொடுத்து 80 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை இளைஞர் அணி 307 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 99 ஓட்டங்களால் முதல் இனிங்ஸில் முன்னிலை அடைந்தனர்.

தனது இரண்டாம் இனிங்ஸைth துடுப்பெடுத்தாடk களமிறங்கிய இங்கிலாந்து இளைஞர் அணி சார்பாக கோல்டன் மற்றும் வெஸ்ட்பரி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். போட்டி மழையின் காரணமாக சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

முதலாம் நாளில் இலங்கை இளைஞர் அணியின் நாயகனான லஹிரு குமார, முதலாம் நாளில் சதம் அடித்த இங்கிலாந்து அணியின் நாயகனான ஹோல்டனை 1 ஓட்டத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றினார். ஆட்ட நேர முடிவின் பொழுது இங்கிலாந்து இளைஞர் அணி 24 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டை இழந்து காணப்படுகிறது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட அணி (முதல் இனிங்ஸ்) : 208(82.2) –

ஹோல்டன் 111*, வெஸ்ட்பரி 45

லஹிரு குமார 7/82

இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி (முதல் இனிங்ஸ்) : 307(84) –

நிர்மல் 80*, டேனியல்  52, பெர்னாண்டோ 49

பனாயி 3/51, பார்ன்ஸ் 3/38

இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட அணி (2ஆவது இனிங்ஸ்): 24/1(6) –

வெஸ்ட்பரி 18*

லஹிரு குமார 1/7