வீதி பாதுகாப்பு உலக T20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ்

259

வீதி பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் வீதி பாதுகாப்பு உலக T20 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இலங்கை லெஜன்ட்ஸ் அணி தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணிக்கு எதிராக 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்து தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது அணியாக மாறியிருக்கின்றது.  

வீதி பாதுகாப்பு உலக T20 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இந்திய லெஜன்ட்ஸ் அணியுடன் மோதுகின்ற  மற்றைய அணியினை தீர்மானிக்கும் வகையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (19) ராய்பூர் நகரில் இடம்பெற்றது. 

அவிஷ்கவின் அரைச்சதத்தால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த SSC

தொடர்ந்து, போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் தலைவர் திலகரட்ன டில்ஷான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணிக்கு வழங்கியிருந்தார். 

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் நுவான் குலசேகரவின் அதிரடி பந்துவீச்சு காரணமாக அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 125 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். 

தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் பூர்த்தி செய்த விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் வேன் விக் 47 பந்துகளில் 8 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக நுவான் குலசேகர வெறும் 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்திருக்க சனத் ஜயசூரிய, பர்வீஸ் மஹரூப் மற்றும் கௌசல்ய வீரரட்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 126 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை லெஜன்ட்ஸ் குறித்த வெற்றி இலக்கினை 17.2 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 129 ஓட்டங்களுடன் அடைந்தது. 

பயிற்சிப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய தனன்ஜய, எம்புல்தெனிய

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த வீரர்களில் ஒருவரான சின்தக்க ஜயசிங்க வெறும் 25 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 47 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில், உபுல் தரங்கவும் அணியின் வெற்றிக்கு 39 ஓட்டங்களுக்கு பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் அல்வைரோ பீடர்சன் மற்றும் மக்கயா ன்டினி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது. 

இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை லெஜன்ட்ஸ் அணி, வீதி பாதுகாப்பு உலக T20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய லெஜன்ட்ஸ் அணியினை எதிர்வரும் திங்கட்கிழமை (21) எதிர்கொள்கின்றது. 

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் – 125 (20) வேன் விக் 57, அல்வைரோ பீடர்சன் 27, நுவான் குலசேகர 25/5

இலங்கை லெஜன்ட்ஸ் – 129/2 (17.2) சின்தக்க ஜயசிங்க 47*, உபுல் தரங்க 39*, அல்வைரோ பீடர்சன் 15/1

முடிவு – இலங்கை லெஜன்ட்ஸ் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…