ஜோ ரூட்டின் உலக சாதனை வீண்; இங்கிலாந்திற்கு அதிர்ச்சியளித்த மேற்கிந்திய தீவுகள்

1113
Image Courtesy - Getty Image

இங்கிலாந்து  மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் லீட்ஸ்  நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி நாளான (29) நேற்று வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 322 ஓட்டங்களை பெற  இரண்டாம் இன்னிங்சில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியினர் இலக்கினை வெற்றிகரமான முறையில் அடைந்து 17 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் வெற்றியொன்றினை பதிவு செய்தனர்.

சனத் உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு ராஜினாமா

தற்போது நடைபெற்றுவரும் இந்தியாவுடனான தொடரை அடுத்து தமது பதிவியில்…

கடந்த வெள்ளிக்கிழமை (25) ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த இங்கிலாந்து, அணித் தலைவர் ஜோ ரூட்டின் சாதனை அரைச் சதத்துடனும், பென் ஸ்டோக்சின் சதத்துடனும் முதல் இன்னிங்சில் 258 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.   

இதில் சகலதுறை ஆட்டக்காரரான ஸ்டோக்ஸ் மொத்தமாக 124 பந்துகளில் 100 ஓட்டங்களினையும், ரூட் 98 பந்துகளில் 58 ஓட்டங்களினையும் பதிவு செய்திருந்தனர். ரூட் இந்த இன்னிங்சில் பெற்ற அரைச் சதம் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக  12 இன்னிங்சுகளில் 50 இற்கு மேலான ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்னும் உலக சாதனையை தென்னாபிரிக்க வீரரான ஏ.பி.டி. வில்லியர்சுடன் பகிர்ந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் சார்பாக வேகப்பந்து வீச்சாளர்களான கேமர் ரோச் மற்றும் சன்னோன் கேப்ரியல் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் இந்த இன்னிங்சில் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணியினர், தொடக்க வீரர் கிரேக் ப்ராத்வைட் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் நான்காவது விக்கெட்டுக்காக பகிர்ந்துகொண்ட அதிவலுவான இணைப்பாட்டமான 246 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்சிற்காக 427 ஓட்டங்களை குவித்துக் கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்சில், கிரேக் ப்ரத்வைட் மற்றும் சாய் ஹோப் ஆகிய இருவரும் சதம் கடந்திருந்தனர். இதில் ஹோப் 147 ஓட்டங்களினையும், ப்ரத்வைட் 134 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர். இந்த இன்னிங்சில் இங்கிலாந்து அணி சார்பாக வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அன்டர்சன் 5 விக்கெட்டுக்களைப் பதம் பார்த்திருந்தார்.

மீண்டும், தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, பின்வரிசையில் சிறப்பாக செயற்பட்ட மொயின் அலி மற்றும் கிரிஸ் வோக்ஸ் ஆகியோரின் இணைப்பாட்டத்துடன் (117), போட்டியின் நான்காம் நாளில் 8 விக்கெட்டுக்களை இழந்து 490 ஓட்டங்களினை பெற்றிருந்தபோது தமது இரண்டாம் இன்னிங்சினை நிறுத்திக் கொண்டது.

சிறப்பாக செயற்பட்டிருந்த மொயின் அலி 93 பந்துகளிற்கு 84 ஓட்டங்களினையும் வோக்ஸ் 61 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார். இங்கிலாந்தின் அணித் தலைவர் ஜோ ரூட் இந்த இன்னிங்சிலும் 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் டி வில்லியசின் சாதனையைக் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.

போட்டியின் நான்காம் நாளில் இங்கிலாந்து அணியினால் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 322 ஓட்டங்களை பெறுவதற்கு பதிலுக்கு ஆடிய, மேற்கிந்திய தீவுகள் நான்காம் நாள் நிறைவில் விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 5 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது.  

கொல்கட்டா முதல் பல்லேகல வரை வெறுப்புக்கு பதில் அன்பை வெளிக்காட்டுவோம்

1996, மார்ச் 13: ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா- இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கவலைக்குரிய…

போட்டியின் இறுதி நாளில், வெற்றி இலக்கினை அடைவதற்காக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியினரால், ஆரம்பத்தில் எதிரணிக்கு வழங்கப்பட்ட பிடியெடுப்புக்கள் மூலம் சில தவறுகள் விடப்பட்டிருந்தன. எனினும், இந்த வாய்ப்புக்களை இங்கிலாந்து உபயோகிக்கத் தவறியிருந்தது.

இதனால், போட்டியின் மூன்றாம் விக்கெட்டிற்காக (மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்ஸ் போன்று) மீண்டும் ஜோடி சேர்ந்த கிரேக் ப்ரத்வைட் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் இணைப்பாட்டமாக 144 ஓட்டங்களினைப்
பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்ட உதவி காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணி ஐந்தாம் நாளின் இன்னிங்ஸ் நிறைவுறும் தருணத்தில், வெற்றி இலக்கினை 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது.

மேற்கிந்திய தீவுகளின் இரண்டாம் இன்னிங்சில், ப்ரத்வைட் 95 ஓட்டங்களுடன் சதம் பெறத் தவறியிருந்தார். அதேவேளை, இந்த இன்னிங்சிலும் சிறப்பாக செயற்பட்ட சாய் ஹோப் சதம் கடந்து மொத்தமாக 211 பந்துகளிற்கு 118 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியினை வெற்றிப்பாதையில் வழிநடாத்தியிருந்தார்.  

இந்த இன்னிங்சிலும் சதம் குவித்த ஹோப் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார். கிட்டத்தட்ட 118 வருடகால டெஸ்ட் வரலாற்றினை கொண்டிருக்கும் லீட்ஸ் (ஹெடிங்லி) மைதானத்தில் முதல்தரப் போட்டியொன்றில் இரண்டு இன்னிங்சிகளிலும் சதம் குவித்த முதலாவது வீரராகவும் ஹோப் பதிவாகியிருந்தார்.

இந்த தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் இடம்பெறும் முதலாவது பகல்- இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றிருந்தது. அப்போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி, இப்போட்டியின் வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரினை 1-1 என சமன் செய்துள்ளது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகின்றது.