சம்பியன்ஸ் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு

Champions League 2022

223

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்து தொடரின் ஆறாவது வாரத்திற்கான போட்டிகள் அனைத்தையும் ஒத்திவைப்பதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) அறிவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான சம்பியன்ஸ் லீக் தொடரின் 5 வாரங்களுக்கான போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆறாவது வாரத்திற்கான போட்டிகள் கடந்த வாரம் இடம்பெற இருந்தன. எனினும், நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இரண்டு முறை போட்டிகள் பிற்போடப்பட்டன.

இதன்படி, ஆறாவது வாரத்திற்கான போட்டிகள் ஜூலை மாதம் 15ஆம், 16ஆம், 17ஆம் திகதிகளில் இடம்பெறும் என இலங்கை கால்பந்து சம்மேளனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இவ்வாறான ஒரு நிலையிலேயே குறித்த போட்டிகள் மீண்டும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கால்பந்து சம்மேளனம் விடுத்துள்ள ஊடக அறிவிப்பில், ”இன்று (2022.07.14) நன்பகல் முதல் நாளை (2022.07.15) வரை அரசாங்கத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலைமை காரணமாக இந்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே வீரர்கள், போட்டி அதிகாரிகள், நடுவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இலங்கை கால்பந்து சம்மேளனமானது 15ஆம், 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த சம்பியன்ஸ் லீக் போட்டிகளை மறு அறிவித்தல் வரும்வரை ஒத்திவைத்துள்ளது என்பதை அறியத் தருகின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<