ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) 16 வயதுக்கு உட்பட்ட சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டிகளில் சோபிக்கத் தவறிய 16 வயதுக்கு உட்பட்ட இலங்கை தேசிய கால்பந்து அணி நாடு திரும்பியது. இந்த தொடரில் இலங்கை இளம் வீரர்கள் 4 போட்டிகளில் 20 கோல்களை விட்டுக்கொடுத்ததோடு, அவர்களால் ஒரு கோலைக் கூட புகுத்த முடியாமல்போனது.
பங்களாதேஷிடம் தோல்வியடைந்த இலங்கை இளையோர் கால்பந்து அணி
நேபாளத்தில் இடம்பெறும் 18 வயதுக்கு…..
15 வயதுக்கு உட்பட்ட SAFF சம்பியன்ஷிப் தொடரில் 4 போட்டிகளில் 3 இல் தோற்ற நிலையிலேயே 23 வீரர்கள் கொண்ட இலங்கை இளையோர் அணி அந்த தொடர் முடிவுற்ற விரைவிலேயே ஜோர்தானுக்கு பயணித்தது. SAFF தொடரில் இலங்கை அணி பூட்டானுக்கு எதிராக 2-0 என பின்னடைவு பெற்றிருந்த நிலையில் போட்டி நிறைவில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சிறந்த ஆரம்பத்தைப் பெற்றது.
எனினும், இலங்கையின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பங்களாதேஷ், நேபாளம் மற்றும் தொடரின் சம்பியனான இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் முறையே 7-1, 2-0 மற்றும் 5-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. SAFF தொடரில் ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 16 கோல்களை விட்டுக்கொடுத்ததோடு 4 கோல்களை மாத்திரமே பெற்றது.
இந்நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட AFC சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளுக்காக தலைமை பயிற்சியாளர் அருன சம்பத்துடன் எந்த மாற்றமும் செய்யப்படாத பயிற்றுவிப்பாளர் குழாம் ஒன்று பங்கேற்றது. SAFF சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற வீரர்களில் 18 பேர் உட்பட 23 வீரர்களை கொண்ட குழாம் இந்த தொடரில் பங்கேற்றது. எனினும் SAFF தொடரில் எந்த போட்டியும் வழங்கப்படாத சயான் டானி (மன்னார், புனித லூசியஸ்) மற்றும் நஸீர் பாஹிம் (ஊவா கல்லூரி) ஆகிய இருவரும் அடுத்த தொடரில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். AFC சம்பியன்ஷிப் தகுதிகாண் தொடருக்காக ஜோர்தானுக்கு புறப்படுவதற்கு ஒருசில தினங்கள் இருக்கும்போது 5 புதிய வீரர்கள் இறுதிக் குழாத்தில் சேர்க்கப்பட்டனர்.
இதில், முதலாவது போட்டி 16 வயதுக்கு உட்பட்ட குவைட் அணிக்கு எதிராக இடம்பெற்றதோடு அந்தப் போட்டியில் இலங்கை அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த இரு கோல்களும் முதல் பாதியில் பெறப்பட்டன. குவைட் வீரர்களின் வேகம் குறைந்த நிலையில் இரண்டாவது பாதியில் எதிரணிக்கு எந்த கோலையும் விட்டுக்கொடுக்காமல் இருக்க இலங்கை அணியால் முடிந்தது. போட்டி முழுவதிலும் குவைட்டின் பின்கள வீரர்களுக்கு இலங்கை அணியால் சவால் கொடுக்க முடியாமல் போனது.
தஜிகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டி இலகுவாக இருக்கவில்லை. வலுவிழந்த இலங்கை அணிக்கு எதிராக அந்த அணி 8 கோல்களை புகுத்தியது. முதல் பாதியில் 5-0 என தஜிகிஸ்தான் முன்னிலை பெற்றது. இந்நிலையில் முழுமையாக தற்காப்பு ஆட்டம் ஒன்றை ஆடிய இலங்கை இரண்டாவது பாதியில் 3 கோல்களுடன் தப்பித்தது.
மூன்றாவது போட்டி தொடரை நடத்திய ஜோர்தானுக்கு எதிராக இருந்தது. வலுவான அந்த அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர்கள் முதல் பாதியில் சிறப்பாக ஆடி குறித்த பாதியை கோல்கள் ஏதுமின்றி முடித்தனர்.
2020 SAFF சம்பியன்ஷிப் பங்களாதேஷில்: தொடர்ந்து புறக்கணிக்கும் இலங்கை
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள….
எனினும் இரண்டாவது பாதியில் கோல் மழை பொழிந்த ஜோர்தான் மொத்தம் 7 கோல்களை புகுத்தியது. முந்தைய போட்டியில் 8 கோல்களை விட்டுக்கொடுத்த கோல் காப்பாளரை பயிற்சியாளர் பயன்படுத்தியது அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
நேபாளத்திற்கு எதிரான இறுதிக் குழுநிலை போட்டியில் நோபள அணி 3-0 என வெற்றி பெற்றது. 15 வயதுக்கு உட்பட்ட SAFF சம்பியன்ஷிப் தொடரில் ஆடிய அதே இலங்கை அணியையே நேபாள அணியால் வீழ்த்த முடிந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டியில் கோல்காப்பாளர் தரூஷ ருஷ்மிக்க இடம்பெறவில்லை. அவருக்கு பதில் மொஹமட் ஹபீல் கோல்காப்பாளராக அனுப்பப்பட்டது ஆறுதலாக இருந்தது.
நேபாள அணி 36 ஆவது நிமிடத்தில் முதல் கோலை புகுத்தியதோடு இரண்டாவது பாதியில் மேலும் இரண்டு கோல்களை பெற்றது.
இலங்கை அணி 4 போட்டிகளில் 20 கோல்களை விட்டுக்கொடுத்த நிலையில் இந்தத் தொடரை முடித்துக்கொண்டது. சொந்தமாக ஒரு கோலை கூட புகுத்த இலங்கை இளம் வீரர்களால் முடியாமல்போனது. இளையோர் மட்ட கால்பந்து விளையாட்டு நாட்டில் பேசுபொருளாக மாறி இருப்பதோடு அந்த அணிகளை உயர் மட்டத்திற்கு தரமுயர்த்துவதற்கு நிர்வாகம் சிறந்த வழியை காண வேண்டும்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<