பல மாற்றங்களுடன் இலங்கையை எதிர்கொள்ளும் இந்திய அணி

Sri Lanka Tour of India 2022

1487
BCCI

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக அனுபவ ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்ததையடுத்து விராட் கோஹ்லி தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இதனையடுத்து அடுத்த மாதம் இலங்கை அணிக்கெதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில், ரோஹித் சர்மாவை இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக பிசிசிஐ இன்று (19) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிகளுக்கும் தலைவராக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அவுஸ்திரேலிய T20i தொடர் நிறைவடைந்த பிறகு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, மூன்று T20i மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் T20i போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி லக்னோவில் ஆரம்பமாகவுள்ளது. 2ஆவது மற்றும் 3ஆவது T20i போட்டிகள் எதிர்வரும் 26ஆம், 27ஆம் திகதிகளில் தர்மசாலாவிலும் நடைபெறவுள்ளது

இதனைத் தொடர்ந்து மார்ச் 4 ஆம் திகதி இலங்கைக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியிலும், 2ஆவது டெஸ்ட் போட்டி 12ஆம் திகதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இலங்கை அணிக்கெதிரான T20i மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (19) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் மற்றும் T20i அணிகளின் உதவி தலைவராக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, முழங்கால் காயத்தில் இருந்து மீண்ட சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் இந்திய டெஸ்ட் மற்றும் T20i அணியில் இடம்பிடித்துள்ளார்.

இதனிடையே, டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அண்மைக்காலமாக பிரகாசித் தவறிய புஜாரா, அஜிங்கியா ரஹானே ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக அறிமுக வீரர் பிரியங் பஞ்சல் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல சிரேஷ்ட வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, விக்கெட் காப்பாளர் விருதிமன் சஹாவுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இதேவேளை, இலங்கை அணியுடனான T20i தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பான்ட், விராட் கோஹ்லி ஆகிய இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, நீண்டகாலமாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வரும் சஞ்சு சாம்சனுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், டெஸ்ட் மற்றும் T20i ஆகிய இரண்டு தொடர்களிலும் சகலதுறை வீரர் ஷர்துல் தாக்கூருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணி  

ரோஹித் சர்மா (தலைவர்), ஜஸ்பிரித் பும்ரா (உதவி தலைவர்), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சல், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷாப் பான்ட் (விக்கெட் காப்பாளர்), கே.எஸ் பரத் (விக்கெட் காப்பாளர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ், உமேஷ் யாதவ், சௌரப் குமார்.

இந்திய T20i அணி

ரோஹித் சர்மா (தலைவர்), ஜஸ்பிரித் பும்ரா (உதவி தலைவர்), ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், தீபக் சஹார், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், மொஹமட் சிராஜ், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷ்னொய், குல்தீப் யாதவ், அவேஷ் கான்

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<