பங்களாதேஷிடம் தோல்வியடைந்த இலங்கை இளையோர் கால்பந்து அணி

73

நேபாளத்தில் இடம்பெறும் 18 வயதுக்கு உட்பட்ட தெற்காசிய கால்பந்து  சம்மேளன கிண்ண தொடரில்  (SAFF சம்பியன்ஷிப்) இலங்கை அணி இன்று (21) தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் இளையோர் அணியிடம் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

மூன்றாவது முறையாக இடம்பெறும் 18 வயதுக்கு உட்பட்ட தெற்காசிய கால்பந்து  சம்மேளன கிண்ண தொடரில்  இணைவதன்மூலம் இலங்கை அணி முதல் முறையாக இந்த தொடரில் பங்கேற்கின்றது.

கத்மண்டு, ஏ.பீ.எப். அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில், போட்டி ஆரம்பித்த விரைவிலேயே பங்களாதேஷ் அணி கோல் ஒன்றை புகுத்தி இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்ததோடு இரண்டாவது பாதியின் கடைசி நிமிடங்களில் பங்களாதேஷ் மத்தியகள வீரர் பாஹிம் மொர்ஷத் மற்றும் அஹமட் பாஹிம் ஆகியோர் கோல் புகுத்தினார்.

முதல் முறை SAFF U18 போட்டிகளுக்காக நேபாளம் சென்றுள்ள இலங்கை அணி

நேபாளத்தில் நாளை (20) ஆரம்பமாகவுள்ள 18 வயதுக்குட்பட்ட…

நேபாளத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இலங்கை B குழுவில் ஆடுவதோடு இலங்கை தனது இந்த முதல் போட்டியில் தோற்ற நிலையில் அரையிறுதிக்கு முன்னேற போராட வேண்டி உள்ளது. இந்த தொடரின் குழுநிலையில் ஓர் அணிக்கு இரண்டு போட்டிகளே உள்ள நிலையில் இலங்கை அடுத்து வரும் புதன்கிழமை (25) இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இன்றைய போட்டி ஆரம்பித்த முதல் நிமிடத்திலேயே இலங்கை வீரர் விட்டுக்கொடுத்த கோனர் கிக் வாய்ப்பு பங்களாதேஷ் அணிக்கு கோல் வாய்ப்பாக மாறியது. அந்த கோனர் கிக்கை பங்களாதேஷ் வீரர் தன்பிர் ஹொஸைன் உயரப் பாய்ந்து தலையால் முட்டி கோல் ஒன்றை பெற அந்த அணி போட்டியின் ஒருசில வினாடிகளிலேயே முன்னிலை பெற்றது.

எனினும் இதனைத் தொடர்ந்து இலங்கை வீரர்கள் கட்டுப்பாட்டுடன் ஆடி சரிசமமாக சவால் கொடுத்தனர். இந்நிலை 12, 25 மற்றும் 47 ஆவது நிமிடங்களில் இலங்கை அணி ப்ரீ கிக் வாய்ப்புகளை பெற்றபோதும் அதனை கோலாக மாற்ற முடியாமல் போனது.

மறுபுறம் பங்களாதேஷ் அணி முதல் பாதியில் கோல் வாய்ப்புகளை பெற்றபோதும் இலங்கை வீரர்களால் அவைகளை தடுக்க முடிந்தது. குறிப்பாக 39 ஆவது நிமித்தில் பங்களாதேஷ் பெற்ற ப்ரீ கிக்கின்போது பந்து தாழ்வாக கோல்கம்பத்திற்கு அருகால் வெளியேறியது.

முதல் பாதி: பங்களாதேஷ் 1 – 0 இலங்கை

இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்தில் இலங்கை வீரர்கள் பங்களாதேஷ் பின்களத்திற்கு நெருக்கடி கொடுத்தனர். 48 ஆவது நிமிடத்தில் ஷெனால் சந்தேஷ் எதிரணி கோல் கம்பத்திற்கு பந்தை வேகமாக கடத்திச் சென்ற நிலையில் பெனால்டி பெட்டிக்குள் வைத்து தடுக்கி விழுந்ததால் கோல் வாய்ப்பு ஒன்று பறிபோனது. இதனைத் தொடர்ந்து இலங்கை அடுத்தடுத்து இரண்டு முறை கோல் முயற்சியில் ஈடுபட்டபோதும் அந்த வாய்ப்புகள் தவறிப்போயின.

இந்நிலையில் இலங்கை பின்கள வீரர்கள் விட்டுக்கொடுத்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட பங்களாதேஷ் முன்கள வீரர் வேகமாக கோலை நோக்கி உதைத்தபோது அதனை இலங்கை கோல் காப்பாளர் எம். முர்ஷித் உயரப் பாய்ந்து அபாரமாக தடுத்தார்.

தொடர்ந்து 70 ஆவது நிமிடத்தில் இலங்கைக்கு கோனர் கிக் ஒன்று கிடைத்தபோது அது கோல் போடுவதற்கு பொன்னான சந்தர்ப்பமாக இருந்தது.

அப்போது பந்து கோலை நோக்கி உதைக்கப்பட்டபோது பங்களாதேஷ் கோல் காப்பாளர் அந்தப் பந்தை பாய்ந்து தடுக்க அவரிடம்பட்டு இலங்கை வீரர் கால்களுக்கு அந்த பந்து வந்த நிலையில் அவர் நெருக்கமான தூரத்தில் இருந்து இலக்குத் தவறி வெளியே உதைத்தார்.

2020 SAFF சம்பியன்ஷிப் பங்களாதேஷில்: தொடர்ந்து புறக்கணிக்கும் இலங்கை

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன…

எவ்வாறாயினும் 77 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோனர் கிக்கை பயன்படுத்தி பங்களாதேஷ் வீரர் பாஹிம் மொர்ஷத் பந்தை வலைக்குள் புகுத்தினார். இதன் மூலம் 2-0 என முன்னிலை பெற்ற பங்களாதேஷ் கடைசி நிமிடங்களில் இலங்கை கோல் கம்பத்தை அடிக்கடி ஆக்கிரமிப்பதை காணமுடிந்தது.

இதற்கு 86 ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. பங்காதேஷ் முன்கள வீரர் அஹமட் பாஹிம் எந்த நெருக்கடியும் இன்றி இலங்கை பெனால்டி பெட்டிக்குள் பந்தை கடத்தி வந்து வலைக்குள் செலுத்தி பங்களாதேஷ் அணியை 3-0 என முன்னிலை பெறச் செய்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் கடைசி நிமிடங்களில் இலங்கை அணியால் எதிரணி பக்கத்தை நோக்கி பந்தை கடத்திச் செல்ல முடியாத நிலையில் அந்த அணியால் ஆறுதல் கோல் ஒன்றைக் கூட போட முடியாமல்போனது.

முழு நேரம்: பங்களாதேஷ் 3 – 0 இலங்கை  

கோல் பெற்றவர்கள்

பங்களாதேஷ் தன்பிர் ஹொஸைன் 1’, பாஹிம் மொர்ஷத் 77’, அஹமட் பாஹிம் 86’

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க