துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ

423
Sri Lanka tour of New Zealand 2023

இலங்கை மற்றும் நியூசிலாந்து பதினொருவர் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியானது சமநிலை அடைந்திருக்கின்றது.

>> சிராஸின் 5 விக்கெட் குவியல்; வெற்றியை நெருங்கும் தம்புள்ள அணி

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கே ஐ.சி.சி. இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது.

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்து பதினொருவர் அணியுடன் பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடும் நிலையில் குறித்த பயிற்சிப் போட்டியானது நேற்று (04) லின்கன் நகரில் ஆரம்பமாகியிருந்தது.

நாணய சுழற்சி எதுவும் இன்றி நடைபெற்ற இந்தப் பயிற்சிப் போட்டியில் முதலில் இலங்கை கிரிக்கெட் அணி துடுப்பாடியதோடு, முதலில் துடுப்பாடிய இலங்கை அணிக்காக ஒசத பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அரைச்சதம் விளாசியிருந்தனர்.

இதில் ஓசத பெர்னாண்டோ ஒரு சிக்ஸர் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 111 பந்துகளில் 78 ஓட்டங்கள் எடுக்க, குசல் மெண்டிஸ் 87 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 16 பௌண்டரிகள் அடங்கலாக 95 ஓட்டங்கள் பெற்று சதத்தினை வெறும் 05 ஓட்டத்தினால் தவறவிட்டிருந்தார்.

இதன் பின்னர் இலங்கை அணி 57.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 276 ஓட்டங்கள் பெற்ற போது தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை இடைநிறுத்தியது.

மறுமுனையில் நியூசிலாந்து பதினொருவர் அணியின் பந்துவீச்சிற்காக ஜேம்ஸ் ஹார்ட்ஹோன், சோன் டேவி, ரொஸ் டெர் ப்ராக் மற்றும் தியோ வான் வியர்க்கோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த நியூசிலாந்து பதினொருவர் அணி போட்டியின் ஆட்டநேரம் நிறைவுக்கு வரும் சந்தர்ப்பத்தில் 38 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து 141 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தது.

>> இந்தூர் ஆடுகளம் தொடர்பில் ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு

நியூசிலாந்து பதினொருவர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவரான ஜேக் போய்ல் 73 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார். இதேநேரம் ஜகோப் பூலா 37 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து பதினொருவர் அணியில் பறிபோன விக்கெட்டினை இலங்கை சார்பில் லஹிரு குமார சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 276/4d (57.3) குசல் மெண்டிஸ் 95, ஒசத பெர்னாண்டோ 78, ஜேம்ஸ் ஹார்ட்ஹோன் 41/1(12.3)

நியூசிலாந்து பதினொருவர் – 141/1 (38) ஜேக் போய்ல் 73*, லஹிரு குமார 16/1(5)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<