இந்தூர் ஆடுகளம் தொடர்பில் ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Australia tour of India 2023

180
Indore pitch rated poor

இந்தியாவின் இந்தூரில் அமைந்துள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் ஐசிசியின் தரத்தை கொண்டிருக்கவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்திருந்தது.

>> டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான மோதலில் இலங்கை – இந்தியா!

இந்தப்போட்டி 2 நாட்கள் மற்றும் மூன்றாவது நாள் ஆட்டத்தின் மதியபோசன இடைவேளைக்கு முன்னர் நிறைவடைந்ததுடன், போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்திாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.

போட்டி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து ஆடுகளம் அதிகமான சுழல் தன்மையை கொண்டிருந்ததுடன், துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகச்சவாலான ஆடுகளமாக மாறியிருந்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் நாள் மதியபோசன இடைவேளைக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின்னர் அவுஸ்திரேலிய அணி களமிறங்க முதல் நாளில் மொத்தமாக 11 விக்கெட்டுகள் சரிக்கப்பட்டன. இரண்டாவது நாளில் 14 விக்கெட்டுகள் சரிக்கப்பட்டதுடன், அவுஸ்திரேலிய அணிக்கு இலகுவான வெற்றியிலக்காக 79 ஓட்டங்கள் மாத்திரமே நிர்ணயிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த ஆடுகளத்தில் இரண்டரை நாட்களுக்குள் 31 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இதில் சுழல் பந்துவீச்சாளர்கள் மாத்திரம் 26 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். அதுமாத்திரமின்றி ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான விடயங்கள் இல்லை என்பதுடன், கணிக்கமுடியாத பௌன்ஸ்கள் இருந்ததாக போட்டி மத்தியஸ்தர் கிரிஸ் புரோட் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே இந்த ஆடுகளம் ஐசிசியின் தரத்துக்கு ஏற்ப இல்லை என மதிப்பிட்டு, மைதான ஆடுகளத்துக்கு 3 தரக்குறைப்பு புள்ளிகள் ஐசிசியால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த இந்த குற்றச்சாட்டை மேன்முறையீடு செய்வதற்கு இந்திய கிரிக்கெட் சபைக்கு இரண்டு வாரங்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தூர் ஆடுகளத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் 3 தரக்குறைப்பு புள்ளிகள் எதிர்வரும் 5 வருடங்களுக்கு நீடிக்கும். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மொத்தமாக 5 இற்கு மேற்பட்ட தரக்குறைப்பு புள்ளிகளை ஆடுகளம் பெறுமானால் 12 மாதங்கள் சர்வதேச போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும். அதேநேரம் 10 இற்கும் அதிகமான தரக்குறைப்பு புள்ளிகளை பெரும் பட்சத்தில் 24 மாத காலத்துக்கு சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<