ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர்

142

ஆப்கான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இங்கிலாந்தினைச் சேர்ந்த கிரஹம் தோர்பே நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

>> இங்கிலாந்தின் கௌண்டி அணியுடன் இணையும் திமுத் கருணாரத்ன!

ஆப்கான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த லேன்ஸ் க்ளூஸ்னரின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி நிறைவுக்கு வந்ததனை அடுத்து, ஸ்டுவர்ட் லோ அந்நாட்டு கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக செயற்பட்டு வந்திருந்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக செயற்பட்டு பின்னர் ஆஷஸ் டெஸ்ட் தொடர் தோல்வி காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட கிரஹம் தோர்பே, தற்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) மூலம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 100 டெஸ்ட் மற்றும் 82 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் தோர்பே, தனது ஆளுகையில் ஆப்கான் அணி வந்ததன் பின்னர் விளையாடும் முதல் தொடராக ஆப்கான் – அயர்லாந்து அணிகள் இடையிலான சுற்றுத்தொடர் அமைகின்றது. ஜூலை மாதம் நடைபெறவுள்ள இந்த சுற்றுத்தொடரில் ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20i போட்டிகள் அடங்குகின்றன.

>> பாகிஸ்தான் செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

இந்த இருதரப்பு சுற்றுத்தொடரின் பின்னர் ஆப்கான் அணி T20i போட்டிகளாக இலங்கையில் இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணி தற்போது ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கில் 9 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகள் பெற்று 70 புள்ளிகளுடன் காணப்படுவதோடு, ஐ.சி.சி. இன் T20i அணிகளுக்கான தரவரிசையில் 232 புள்ளிகளுடன் 8ஆம் இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<