உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

Cricket World Cup 2023

585

இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை (26) இந்தியாவுக்கு புறப்படவுள்ள நிலையில், குழாம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

வீசா பிரச்சினை நிறைவு – இந்தியா பயணமாகும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

அணியின் முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட உபாதைகள் காரணமாக குழாம் இதுவரையில் அறிவிக்கப்படாமல் இருந்தது. எனினும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர இணைக்கப்படவில்லை. 

உபாதை காரணமாக உலகக்கிண்ணத்தை துஷ்மந்த சமீர தவறவிட்டுள்ளதுடன், உபாதைகளுக்கு மத்தியிலும் மூன்று வீரர்கள் அணியில் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளனர். முன்னணி சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகியோர்  குழாத்தில் இடங்களை தக்கவைத்துள்ள போதும், இவர்களுடைய உபாதைகள் தொடர்பில் கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் அதிகமான கேள்விகளை ஏற்படுத்தியிருந்த திமுத் கருணாரத்னவின் இடம் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் குழாத்தில் இடங்களை பிடிப்பர் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த போதும், திமுத் கருணாரத்ன அணியில் இடத்தை தக்கவைத்துள்ளார். 

துஷ்மந்த சமீர அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், வேகப்பந்துவீச்சாளராக டில்ஷான் மதுசங்கவுடன், கசுன் ராஜித, லஹிரு குமார மற்றும் மதீஷ பதிரண ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

அணியின் தலைவராக தசுன் ஷானக தொடர்ந்தும் செயற்படவுள்ளதுடன், உப தலைவராக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டிருக்கிறார். இவர்களுடன் குசல் பெரேரா, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, தனன்ஜய டி சில்வா, சதீர சமரவிக்ரம மற்றும் துனித் வெல்லாலகே ஆகிய முன்னணி வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். 

இதேவேளை உலகக்கிண்ணத்துக்கான மேலதிக வீரர்களாக சகலதுறை வீரர்களான துஷான் ஹேமந்த மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை குழாம் 

தசுன் ஷானக (தலைவர்), குசல் மெண்டிஸ் (உப தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, குசல் பெரேரா, திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, கசுன் ராஜித, லஹிரு குமார, டில்ஷான் மதுசங்க, மதீஷ பதிரண 

மேலதிக வீரர்கள் துஷான் ஹேமந்த, சாமிக்க கருணாரத்ன 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<