ஆர்சனல் அணியிலிருந்து விலகுகினார் ஓசில்

147
Capture Courtesy - Getty Images

தற்போது ஆரம்பமாகியுள்ள வீரர்களை மாற்றும் காலப்பகுதியில், ஆர்சனல் அணியை சேர்ந்த முன்னாள் ஜெர்மனி அணியின் மத்திய கள வீரரான மெசூட் ஓசில்,  துருக்கி நாட்டை சேர்ந்த பேனர்பச்சே (Fenerbahçe) கழகத்துடன்  இணையப்போவதாக அந்த கழகம் அறிவித்துள்ளது. 

32 வயதான ஓசில், கடந்த ஞாற்றுக்கிழமை துருக்கி நாட்டுக்கு சென்று தன் ஒப்பந்தத்தை உறுதியாக்க முன்னர்  ஆர்சனல் அணியின் பயிற்சி மைதானத்திற்கு சென்று ஆர்சனல் வீரர்களிடம் பிரியாவிடை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.   

Read : பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை கால்பந்து குழாம்

கடந்த 2013ஆம் ஆண்டு ரியல் மட்ரிட் கழகத்திடமிருந்து 42.4 பௌண்ட்களுக்கு ஆர்சனல் அணியால் வாங்கப்பட்ட இவர், அவ்வணிக்காக 184 போட்டிகளில் 33 கோல்களை அடித்து, ஆர்சனல் அணி மூன்று முறை FA கிண்ணத்தினை கைப்பற்றுவதற்கும்  பலத்த உறுதுணையாக இருந்தார். 

ஓசிலினது ஆர்சனல் அணிக்காக விளையாடும் ஒப்பந்த காலம் இந்த வருட ஜூன் மாதம் வரை இருக்கின்ற நிலையில், அந்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் (ஓசிலும், ஆர்சனல் நிர்வாகமும்) முறித்துக் கொண்டே தற்போது ஓசில் பேனர்பச்சே கழகத்துடன் இணைய தயாராகிறார்.

துருக்கிய வம்சாவளியான இவர் 2014 ஆம் ஆண்டு ஜெர்மனி அணி உலகக் கிண்ணத்தை கைப்பற்ற காரணமாயிருந்த முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். இனவெறி கருத்துக்களை காரணம் காட்டி 2018 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓசில் ஓய்வு பெற்றார். 

2018 இல் ஆர்சனல் கழக வரலாற்றிலேயே அதிக சம்பளம் பெறும் வீரராக உயர்ந்த இவர், 2019 இல் மைக்கேல் அர்டேட்டா ஆர்சனலுக்கு முகாமையாளராக பொறுப்பேற்ற பின் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டார்.  இறுதியாக, 2020 மார்ச் 7 இல் ஆர்சனல் அணிக்காக களமிறங்கிய பின்னர் அவர் எந்த போட்டிகளிலும் ஆர்சனல் அணிக்காக விளையாடவில்லை. ஓசில் இல்லாமல் விளையாடிய ஆர்சனல் அணி தற்போது ப்ரீமியர் லீக் தரவரிசையில் 11ஆம் இடத்தில் இருக்கிறது. 

Also Read : 2020இல் விளையாட்டு ரசிகர்களுக்கு கிடைத்த மறக்கமுடியாத தருணங்கள்!

முன்னதாக, கடந்த வருட பிற்பகுதியில் மைக்கேல் அர்டேட்டாவின் ப்ரீமியர் லீக் மற்றும் ஐரோப்பா கிண்ண குழாம்களில் ஓசில் சேர்க்கப்படாததை அடுத்து தனது ஒப்பந்த காலம் முடியும் வரை ஆர்சனல் அணியுடனே இருப்பேன் என ஓசில் அறிவித்திருந்தார்.

தனது இந்த அணிமாற்றம் குறித்து கருத்து தெரிவித்த ஓசில், “நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன். நான் பேனர்பச்சே  கழகத்தின் ரசிகன். அதனாலேயே துருக்கியில் இந்த கழகத்துடன் இணைவதையொட்டி மகிழ்ச்சி அடைகிறேன். பேனர்பச்சே கழகமானது ஸ்பெயினில் ரியல் மட்ரிட்டை போன்றது. நான் அந்த சீருடையை மிகவும் பெருமையாக அணிவேன்”என தெரிவித்தார். 

பேனர்பச்சே கழகமானது தற்போது துருக்கிய லீக் தொடரில் இரண்டாமிடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<