வீசா பிரச்சினை நிறைவு – இந்தியா பயணமாகும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

75
Pakistan's visa issues sorted

இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இருந்த விசா குளறுபடிகள் நிறைவுக்கு வந்ததனை அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு பயணமாக முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  

>> உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு உலகக் கிண்ணத் தொடருக்கு  முன்னர் பயணமாக திட்டமிடப்பட்டிருந்த போதும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் வீரர்கள் செல்ல வீசா வழங்கப்படாததன் காரணமாக அவர்கள் எதிர்பார்த்ததன் அடிப்படையில் இந்தியாவிற்கு செல்வது சிக்கலாகியிருந்தது. இதனால் அணி வீரர்களும் அசௌகரியத்தினை எதிர்கொண்டிருந்தனர் 

இந்த நிலையில் தற்போது வீசா பிரச்சினைகள் சரி செய்யப்பட்டதனை இந்திய அரசாங்கம் உறுதி செய்திருப்பதனை அடுத்து பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு பயணமாக முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது 

இந்தியாபாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடையில் அரசியல் குளறுபடிகள் தொடர்ந்து காணப்படுவதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும், சாதாரணமாகவே இந்தியாவிற்கான விசா பெறுவதில் நிர்வாக விடயங்கள் காரணமாக தாமதம் ஏற்படுவதாக செய்தி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன 

இதேநேரம் பாகிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கிண்ணத்தில் தமது முதல் போட்டியில் நெதர்லாந்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதோடு உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து (செப்டம்பர் 29), அவுஸ்திரேலியா (ஒக்டோபர் 03) ஆகிய நாடுகளுடன் பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<