இங்கிலாந்தில் சாதிக்க புறப்பட்ட இலங்கை வளர்ந்துவரும் அணி

Sri Lanka Emerging team tour of England 2022

159

இங்கிலாந்து வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடருக்கான 18 பேர்கொண்ட இலங்கை குழாம் நேற்றைய தினம் (01) இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

புறப்பட்டுள்ள இலங்கை அணியின் நான்கு நாட்கள் கொண்ட போட்டித்தொடரின் தலைவராக நிபுன் தனன்ஜய செயற்படவுள்ளதுடன், தனன்ஜய லக்ஷான் T20I போட்டிகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

>>டெர்பிஷயார் அணிக்காக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுரங்க லக்மால்

இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் போட்டித்தொடர்களான தேசிய சுபர் லீக் மற்றும் மேஜர் கழக வளர்ந்துவரும் தொடர்களில் பிரகாசித்த வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் இந்த தொடரில் வழங்கப்பட்டுள்ளன.

பல புதிய வீரர்களுடன் இங்கிலாந்து செல்லும் இலங்கை இளம் அணிக்கு குறித்த இந்த தொடர் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்ப்பதாக நான்கு நாட்கள் கொண்ட போட்டித்தொடருக்கான தலைவர் நிபுன் தனன்ஜய தெரிவித்துள்ளார்.

இளம் வீரர்கள் என்ற ரீதியில் எம் அனைவருக்கும் இதுவொரு சிறப்பான வாய்ப்பாகும். தேசிய சுப்பர் லீக்கில் பிரகாசித்த வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் கிரிக்கெட் விளையாட எதிர்பார்க்கும் வீரர்களுக்கு இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளமை சிறப்பம்சமாகும். அணித்தலைவர் என்ற ரீதியில் இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணம் மற்றும் அணி வீரர்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

இதேவேளை, இலங்கை வளர்ந்துவரும் அணிக்காக நியமிக்கப்பட்ட T20I அணியின் தலைவர் தனன்ஜய லக்ஷான் இங்கிலாந்து தொடர் குறித்து கருத்து வெளியிடுகையில்,

உண்மையில் இளம் அணி என்ற ரீதியில் சிறந்த அனுபவத்தை கொடுக்கக்கூடிய தொடர். இதற்காக பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அங்கு சென்றும் பயிற்சிகளை மேற்கொண்டு நல்லதொரு போட்டியை கொடுக்க எதிர்பார்க்கிறோம்.

அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களும் உள்ளனர். அங்குள்ள ஆடுகளம் வித்தியாசமானது. குறித்த ஆடுகளம் மற்றும் காலநிலைக்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும் என்றார்.

அதேநேரம், நான்கு நாட்கள் கொண்ட போட்டித்தொடருக்கு பின்னர் T20 போட்டிகள் நடைபெறவுள்ளதால், T20 போட்டிகளில் பிரகாசிப்பதற்கு இலகுவாக இருக்கும் எனவும் தனன்ஜய லக்ஷான் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கை வளர்ந்துவரும் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ருவான் கல்பகே இங்கிலாந்து சுற்றுப்பயணம் தொடர்பில் குறிப்பிடுகையில், ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து ஒரு அணியாக ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டோம். இங்கிலாந்தில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்துவதற்கு வீரர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இறுதியாக நடைபெற்றுமுடிந்த தேசிய சுபர் லீக் மற்றும் மேஜர் கழக வளர்ந்துவரும் தொடர் போன்றவற்றில் வீரர்கள் அனைவரும் சிறந்த பிரகாசிப்புகளை வழங்கியுள்ளமை அணிக்கு மிகவும் நேர்மறையான விடயமாகும் என்றார்.

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை வளர்ந்துவரும் குழாம்

நிபுன் தனன்ஜய (நான்கு நாள் போட்டித்தொடருக்கான தலைவர்), தனன்ஜய லக்ஷான் (T20 தலைவர்), லசித் குரூஸ்புள்ளே, அவிஷ்க பெரேரா, சந்துஷ் குணதிலக்க, அவிஷ்க தரிந்து, நுவனிந்து பெர்னாண்டோ, நிஷான் மதுஷ்க, அஷேன் பண்டார, துனித் வெல்லாலகே, டிலும் சுதீர, அஷைன் டேனியல், நிபுன் மாலிங்க, நிபுன் ரன்சிக, மானெல்கர் டி சில்வா, யசிரு ரொட்ரிகோ, உதித் மதுஷான், அம்ஷி டி சில்வா

போட்டி அட்டவணை

திகதி போட்டி மைதானம்
மே 6 முதல் 9 முதல் 4 நாள் போட்டி கெண்டபெரி– கெண்ட்
மே 13 முதல் 16 2வது நான்கு நாள் போட்டி ஏஜஸ் போவ்ல் – ஹெம்ஷையர்
மே 20 முதல் 23 3வது நான்கு நாள் போட்டி கில்பர்ட் சிசி – சர்ரே
     
மே 25 முதல் T20 கியா ஓவல் – சர்ரே
மே 27 2வது T20 தி கூபர் ஏசிஜி – சமரெஸ்ட்
மே 29 3வது T20 பிரிஸ்டோல் கௌண்டி மைதானம் – குளோசெஸ்டர்ஷைர்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<