முழு பலத்துடன் T20I உலகக் கிண்ணத்துக்கு தயாராகுமா இலங்கை?

109

கொவிட்-19 வைரஸ் (கொரோனா) தொற்று காரணமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடக்கம் சர்வதேச ரீதியிலான கிரிக்கெட் போட்டிகள் வரை திகதி அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டு வருகின்றன. 

ஒரு பக்கம் சர்வதேச ரீதியில் நடைபெறவுள்ள போட்டிகள் தடைப்பட்டு போக, ஒவ்வொரு தேசிய அணிகளும் தங்களுடைய அணிகளின் தயார்ப்படுத்தல்களில் அதிக சவால்களை எதிர்கொண்டுள்ளன. இதில், முக்கியமாக இவ்வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் T20I உலகக் கிண்ணம் தொடர்பான பார்வை மிக முக்கியமானதாக இருக்கிறது.  

இணையம் வழியாக கிரிக்கெட் சொல்லிக் கொடுக்கும் டோனி, அஸ்வின்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக….

சர்வதேச அணிகள் தங்களுடைய அணிகளை T20I உலகக் கிண்ணத்துக்கு தயார்ப்படுத்துவதற்கான முயற்சியினை மேற்கொண்டு வரும் நிலையில், இலங்கை அணியும் தங்களுடைய தயார்படுத்தல்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.  

இதன் முதற்கட்டமாக வீரர்களின் உடற்தகுதியில் கவனத்தை செலுத்தியுள்ள இலங்கை அணி, தனிப்பட்ட ஒவ்வொரு வீரருக்குமான உடற்பயிற்சிகளை வழங்கி அவர்களைக் கண்காணித்து வருகின்றது. ஆனால், உடற்தகுதியை தாண்டி போட்டிகளில் விளையாடும் பயிற்சி அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக அமைகின்றது. 

காரணம், இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் சற்று வளர்ச்சியைக் கண்டுள்ள போதும், T20I அணியை பொருத்தவரையில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகின்றது. அதேநேரம், அணிகளிலும் தொடர்ச்சியாக மாற்றங்களை ஏற்படுத்தி, சரியான பதினொருவரை தெரிவுசெய்வதிலும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றது.

ஏனைய அணிகள் தங்களுக்கான T20I உலகக் கிண்ணத்துக்கான குழாத்தை கிட்டத்தட்ட தெரிவுசெய்திருக்கும் நிலையில், இலங்கை அணியின் குழாம் உறுதியற்ற நிலையில் காணப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அணிக் குழாத்தில் மாத்திரமின்றி, அணித் தலைமையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இறுதியாக இலங்கை அணி விளையாடிய மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20I தொடர் உட்பட கடந்த 10 T20I தொடர்களில் இரண்டு தொடர்களில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. ஏனைய 8 தொடர்களிலும் இலங்கை அணி தோல்வியடைந்து T20I உலகக் கிண்ணத்துக்கான பாதையில் கடும் சவாலை எதிர்கொண்டிருக்கிறது.

முன்னணி வீரர்கள் இல்லாமல் பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி தசுன் ஷானக தலைமையில், தொடரை 3-0 என கைப்பற்றியதுடன், 2018ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு போட்டிக்கொண்ட தொடரை இலங்கை அணி மெதிவ்ஸ் தலைமையில் வெற்றிக்கொண்டது. இவையே, இலங்கை அணி பெற்ற இரண்டு தொடர் வெற்றிகளாக அமைகின்றன.

லசித் மாலிங்க அணியின் தலைமை பணியை ஏற்றதற்கு பின்னர், தொடர்ச்சியான தோல்விகளை தழுவிவரும் இலங்கை அணிக்கு, ஏமாற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுவரையில், மாலிங்கவின் தலைமையில் 24 T20I போட்டிகளில் இலங்கை அணி விளையாடி, 15  போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

தொடர் தோல்விகளுக்கு மத்தியில் அணியில் மாற்றங்களை ஏற்படுத்திவந்த இலங்கை அணி, இனிவரும் போட்டிகளில், வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, உலகக் கிண்ணத்துக்கான பலம் மிக்க அணியொன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. எனினும், அணித் தலைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.

அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட மிக்கி ஆர்தரும், உலகக் கிண்ணத்தை கருத்திற்கொண்டு, அதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும், எமது பலத்தை அறிந்து அதற்கு ஏற்ப அணியொன்றை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டிருந்தார். எனினும், தற்போது பரவிவரும் கொவிட்-19 வைரஸ் அணியின் தயார்படுத்தல்களுக்கு முட்டுக்கட்டையாகியுள்ளது. 

T20I உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் இலங்கை அணி, இந்தியா (3 போட்டிகள்), தென்னாபிரிக்கா (2 போட்டிகள்), பாகிஸ்தான் (2 போட்டிகள்) மற்றும் ஆசியக் கிண்ணத்துக்கான போட்டிகள் என பல T20I போட்டிகளில் விளையாடவிருந்தது. ஆனாலும், கொவிட்-19 காரணமாக இந்தப் போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வியெழுந்துள்ளது. 

உலகிற்கு மறைந்திருந்த சனத் மற்றும் டில்ஷான்

பந்துவீச்சாளர்களாக அறிமுகமாகி பின்னர்…….

இதற்கு மத்தியில் இம்முறை T20I உலகக் கிண்ணம் நடைபெற்றால், எந்ததெந்த வீரர்கள் அணிக்குள் நுழைவார்கள் என்ற எதிர்பார்ப்பை பலரிடத்திலும் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20I தொடரில் இலங்கை அணியில் பலம் மிக்க குழாம் ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த குழாத்திலிருந்து சில மாற்றங்கள் மாத்திரமே உலகக் கிண்ணத் தொடரில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. 

துடுப்பாட்டத்தை பொருத்தவரை, குசல் பெரேரா அணியின் துடுப்பாட்டத்தை தொடர்ந்து தாங்கிப்பிடித்து வரும் போதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் நினைத்த அளவிலான துடுப்பாட்டங்களை வெளிப்படுத்த தவறிவருகின்றனர். இளம் வீரர் அவிஷ்க பெர்னாண்டோ ஒருநாள் போட்டிகளில் பிரகாசித்து வரும் போதும், T20I போட்டிகளில் அவரது ஓட்ட சராசரி 13.92 ஆக குறைந்துள்ளமை அணியின் ஆரம்ப துடுப்பாட்டத்தை வலுவிழக்க செய்துள்ளது. எனினும், வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆஸி. ஆடுகளங்களில் இவரது பங்களிப்பு அணிக்கு முக்கியமானதொன்றாகும். 

இவர்களை தவிற இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுக்கான இடத்துக்கு, குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் உள்ளனர். ஆனால், குசல் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் T20I அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தொடர்ந்தும் செயற்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், ஓசத பெர்னாண்டோ, தனன்ஜய டி சில்வா மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் T20I போட்டிகளுக்கான மத்தியவரிசையில் விளையாடி வருகின்றனர். செஹான் ஜயசூரியவும் குழாத்தில் இடம்பெற்றாலும், எதிர்வரும் போட்டிகளில் இவர்களில் சிறப்பாக செயற்படும் வீரர்கள் உலகக் கிண்ணத்துக்கான குழாத்தில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

சகலதுறை வீரர்களை பார்க்கும் போது, புதிதாக அணிக்குள் அழைக்கப்பட்டுள்ள வனிந்து ஹசரங்க பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் பிரகாசித்து வருகின்றார். துடுப்பாட்டத்துக்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், இவரது மணிக்கட்டு சுழல் அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. 

இவருடன், சகலதுறை வீரர்கள் பட்டியலில், தசுன் ஷானக, திசர பெரேரா ஆகியோர் இணைந்துள்ளதுடன், அஞ்சலோ மெதிவ்ஸ் பந்துவீச ஆரம்பித்திருப்பது அணிக்கான மற்றுமொரு வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரருக்கான இடத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அதேநேரம், தனன்ஜய டி சில்வாவின் சுழலும் தேவையான நேரங்களில் அணிக்கு உதவுக்கூடியது.  

இலங்கை அணிக்கு மற்றுமொரு சிக்கலாக அமைந்துள்ள விடயம் சுழல் பந்துவீச்சு. அகில தனன்ஜயவின் தடைக்கு பின்னர், தற்போதைய நிலையில் லக்ஷான் சந்தகன் மாத்திரம் தொடர்ந்து விளையாடி வருகின்றார். ஆனால் சந்தகன் பந்துவீசும் விதம் அணிக்கு ஏமாற்றத்தை வழங்கி வருகின்றது. எனவே, மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளரை இலங்கை அணி தேடுமா? அல்லது சந்தகனுடன் உலகக் கிண்ணத்துக்கு செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேகப் பந்துவீச்சு துறையை பொருத்தவரை, அணித் தலைவர் லசித் மாலிங்கவுடன், அனுபவ பந்துவீச்சாளர் நுவான் பிரதீப் மற்றும் T20 போட்டிகளுக்கான விஷேட பந்துவீச்சாளராக மாறியுள்ள இசுரு உதான ஆகியோர் பந்துவீச்சை பலப்படுத்துவர். இவர்களுடன் இலங்கை அணியில் தற்போது அதிக வேகத்துடன் பந்துவீசும் லஹிரு குமாரவுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்பதுடன், கசுன் ராஜிதவுக்கும் வாய்ப்பை பெற முடியும்.

எனினும், நுவான் பிரதீப் மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு தொடர் உபாதைகள் ஏற்பட்டு வருவது மற்றுமொரு சிக்கலாக மாறியுள்ளது. எனவே, இவர்களின் உடற்தகுதி சரியான நிலையிலும், உபாதை இன்றியும் பயணித்தாலும் உலகக் கிண்ணத்துக்கான குழாத்தில் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. 

மக்களுக்கு உதவும் பணியில் இணைந்த குசல் பெரேரா

இலங்கை கிரிக்கெட் அணியின்……

இன்றைய நிலையில், இதுபோன்ற அணியொன்று T20I உலகக் கிண்ணத்துக்கான குழாத்துக்கான வாய்ப்பை பெற்றாலும், எதிர்வரும் போட்டிகள் ஒவ்வொரு வீரர்களுக்கும் முக்கியமானதாக அமையும். அதிலும் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தரின் கருத்தின் படி, அணியில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஆனாலும், எதிர்வரும் T20I தொடர்களில் வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். காரணம், கொவிட்-19 காரணமாக தயார்படுத்தல்களுக்கான காலம் குறைவடைந்துள்ளது. எனவே, புதிய வீரர்களை தற்போது அணியில் இணைப்பது, இலகுவான விடயமல்ல. எனவே, இனிவரும் போட்டிகளில் பிரகாசிக்கும் வீரர்களுக்கு T20I உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

இதனை கருத்திற்கொண்டு அணியில் தற்போதுள்ள வீரர்களை பலப்படுத்துவதுடன், அவர்களுக்கான தொடர்ச்சியான வாய்ப்பையும், அணியின் பலத்தையும் அறிந்து செயற்படும் பட்சத்தில், இலங்கை அணியால் எதிரணிகளுக்கு சவால் கொடுக்க முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<