உலகின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு விளையாட்டுத்துறையும் விதிவிலக்கு அல்ல. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தமட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கும், பின்னர் டி20 போட்டிகளுக்கும், அதனையடுத்து பகலிரவு டெஸ்ட், தற்போது டி10 போட்டிகள் என மாற்றம் பெற்ற கிரிக்கெட், தற்போது நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசெபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

வானவேடிக்கை நிகழ்த்திய ரோஹித் சர்மாவின் உலக சாதனைகள்

140 வருடங்கள் பழைமை கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆரம்பத்தில் 3 நாட்கள் மற்றும் 4 நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்று வந்தன. இதில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அனுமதியுடன் கடந்த 2005 ஆம் ஆண்டு உலக பதினொருவர் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஆறு நாட்களைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி ஒன்றும் நடைபெற்றது. எனினும், அந்தப் போட்டி நான்கு நாட்களில் நிறைவுக்கு வந்தது.

உலக பதினொருவர் அணியில் இடம்பெற்ற வீரர்கள்

ஆனால், டெஸ்ட் போட்டிகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற்று வருகின்றதால் ரசிகர்களின் வருகை நாளுக்கு நாள் குறைவடையத் தொடங்கியதுடன், அதற்கான வரவேற்பும் இல்லாமல் போனது. இதனை அடுத்து கடந்த 2 வருடங்களுக்கு முன் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் ஐ.சி.சி இனால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கு கிரிக்கெட் உலகில் அதிக செல்வாக்கைக் கொண்ட நாடாக விளங்குகின்ற இந்தியா எதிர்பார்த்த அளவு ஆதரவை தெரிவிக்கவில்லை என்பதுடன், இதுவரை எந்தவொரு பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் அவ்வணி விளையாடவில்லை.

Generated by IJG JPEG Library

இவ்வாறான சூழ்நிலையில், கடந்த சில வருடங்களாக நான்கு நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டியை நடத்தினால் வீரர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என்பதுடன், ரசிகர்களுக்கு விறுவிறுப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என பலரும் பரிந்துரை செய்திருந்ததுடன், அதற்கான கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

ஆனால் கடந்த காலங்களில் நடைபெற்ற ஐ.சி.சி இன் கூட்டங்களில் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பைக் கொண்ட நாடுகளான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பிரபல அணிகள் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு வந்தாலும், இலங்கை, பங்களாதேஷ் போன்ற அணிகள் ஆதரவளித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள்

எனினும், டெஸ்ட் அரங்கில் அண்மைக்காலமாக பலம் மிக்க அணியாகவும், முதல் நிலை அணியாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்ற தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிக்கு ஆரம்பம் முதல் தமது விருப்பத்தை வெளியிட்டு வந்த நிலையில், இதன் முதல் முயற்சியாக பொக்சிங் டே (Boxing Day) என அழைக்கப்படும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி அங்குரார்ப்பண நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ளது. இதன்படி, சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு ஜிம்பாப்வே அணி தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குரார்ப்பண நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் வரை நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கு ஐ.சி.சி அனுமதி அளித்துள்ள நிலையில், இப்போட்டிக்கான ஐ.சி.சி இன் புதிய விதிமுறைகளும் இன்று முதல் அமுலுக்கு வந்தன. எனினும், இப்போட்டிகளில் அனைத்து டெஸ்ட் நாடுகளும் விளையாட வேண்டும் என்பது அவசியமில்லை என்பதுடன், தரப்படுத்தலில் பின்தங்கிய நிலையில் உள்ள அணிகளுக்கு இப்புதிய டெஸ்ட் தொடரானது பயனளிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பகலிரவு டெஸ்ட் போட்டிகளைப் போல மதிய நேர இடைவேளையின் பிறகு ஆரம்பமாகவுள்ள முதலாவது 4 நாள் டெஸ்ட் போட்டியானது இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளதுடன், இளஞ்சிவப்பு நிறப் பந்தில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் முதல் பகுதி நேர ஆட்டம் பிற்பகல் 1.30 முதல் பிற்பகல் 3.45 வரை நடைபெறும், அதன்பிறகு தேநீர் இடைவேளை வழங்கப்படும். மாலை 4.05 முதல் ஆரம்பமாகவுள்ள 2ஆவது பகுதி நேர ஆட்டமானது மாலை 6.20 வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து இரவு நேர உணவு இடைவேளை வழங்கப்படவுள்ளதுடன், இரவு 7 மணி முதல் 9 மணி வரை அன்றை நாளின் இறுதி நேர ஆட்டங்கள் இடம்பெறும். பொதுவாக 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியொன்று 6 மணித்தியாலங்கள் 3 பிரிவுகளாக நடைபெறும். எனினும், நான்கு நாள் டெஸ்ட் போட்டியானது ஆறரை மணித்தியாலங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமநிலையில் முடிந்த சென் ஜோன்ஸ் – புனித தோமியார் இடையிலான மோதல்

முதலாவது 4 நாள் டெஸ்ட் போட்டிக்கான நேர அட்டவணை

முதலாவது அமர்வு ஆட்டம் பி.ப 1.30 – பி.ப 3.45 மணி வரை
தேநீர் இடைவேளை பி.ப 3.45 – மாலை 4.05 மணி வரை
இரண்டாவது அமர்வு ஆட்டம் மாலை 4.05 – மாலை 6.20 மணி வரை
இரவு நேர உணவு இடைவேளை மாலை 6.20 – இரவு 7.00 மணி வரை
மூன்றாவது அமர்வு ஆட்டம் இரவு 7.00 – இரவு 9.00 மணி வரை

இதன்படி, ஒவ்வொரு அமர்வுகளும் குறைந்தளவு 2 மணித்தியாலங்களும், அதிகபட்சம் இரண்டரை மணித்தியாலங்களும் நடைபெற வேண்டியது நிபந்தனையாகும். எனினும், காலநிலை மற்றும் போட்டியின் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு போட்டியை நடாத்துகின்ற அணியானது, ஒவ்வொரு அமர்வுகளுக்குமான நேரத்தை தீர்மானிக்க முடியும் என ஐ.சி.சி இனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐந்து நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் நாளொன்றுக்கு 90 ஓவர்கள் பந்துவீசப்படுகின்றன. எனினும், நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் மேலதிகமாக 8 ஓவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு நாளைக்கு 98 ஓவர்கள் பந்துவீச வேண்டும். அத்துடன், களத்தடுப்பில் ஈடுபடுகின்ற அணிக்கு அன்றைய நாளின் அனைத்து ஓவர்களையும் வீசி முடிப்பதற்கு மேலதிகமாக 30 நிமிடங்களும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, குறித்த நாளில் பந்துவீச முடியாமல் போன மேலதிகமான ஓவர்களை அடுத்த நாளில் தொடர முடியாது. எனினும், பொதுவான இடைவேளையைத் தவிர சீரற்ற காலநிலை அல்லது தவிர்க்க முடியாத காரணங்கள் இதற்கு விதிவிலக்காகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அரங்கில் கால்பதிக்கும் ஆப்கானிஸ்தான் முதலில் சந்திக்கும் அணி இந்தியா!

அதேபோன்று பொலோ – ஒன் (Follow on) ஏற்படுவதற்கு ஒரு அணி குறைந்தது 200 ஓட்டங்கள் முன்னிலை பெறவேண்டும் என்பது கட்டாயமில்லை. இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணி 150 ஓட்டங்கள் பின்தங்கியிருந்தால் அந்த அணி பொலோ – ஒன் பெற்றதாக கருதப்படும். போட்டியில் முடிவு எட்டப்படவேண்டும் என்பதற்காக இந்த விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் பொலோ – ஒன் விதிமுறைகளானது பொதுவாக நடைபெறுகின்ற 4 நாள் முதற்தர போட்டிகளில் கடைப்பிடிக்கின்ற விதிமுறைகளை ஒத்ததாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 5 நாள் டெஸ்ட் போட்டியின் இறுதிநாளில் 75 ஓவர்கள் மாத்திரமே பந்துவீசப்படும். எனவே 4 நாள் டெஸ்ட் போட்டியில் அது 83 ஓவர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும், போட்டியின் இறுதி நாளின் கடைசி ஒரு மணித்தியாலமும், சாதாரண டெஸ்ட் போட்டியைப் போன்று நேரக் கணிப்பீட்டைக் கொண்டு போட்டியின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் எனவும் ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.