இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு 6 மில்லியன்களை வழங்கும் SLC

The 5th edition of the Blind T20 World Cup

39
The 5th edition of the Blind T20 World Cup

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் லிளையாடி வரும் இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் சபை 60 இலட்சம் ரூபா (6 மில்லியன்) நிதியை அனுசரணையாக வழங்கியுள்ளது. 

ஆறு நாடுகளின் பங்கேற்புடன் பார்வையற்றோருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நவம்பர் 23ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது 

இந்த நிலையில், குறித்த தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வீரர்கள் உள்ளிட்ட 21 உறுப்பினர்களுக்கு விமான டிக்கெட் மற்றும் வீசா பெறுவதற்கு இந்த அனுசரணையை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

பாகிஸ்தானில் நடைபெறும் பார்வையற்றோருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்த இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த நிதியை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. 

இதனிடையே பார்வையற்றோருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சிகளை மேற்கொள்ள மைதான வசதிகள், வலைப்பயிற்சிக்கான ஆடுகளங்கள் மற்றும் பயிற்சிக்குத் தேவையான கிரிக்கெட் உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கவும் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது 

இலங்கை கிரிக்கெட் சபை 2014ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு அனுசரணை மற்றும் கிரிக்கெட் உபகரணங்களையும் வழங்கியுள்ளது. 2014 இல் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம், 2016 ஆசியக் கிண்ணம், 2017 பார்வையற்றோருக்கான T20 உலகக் கிண்ணம், 2018 பார்வையற்றோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணம், 2019 பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மற்றும் 2022 இல் இந்தியாவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான T20 உலகக் கிண்ணம் ஆகியவற்றுக்கு இவ்வாறு இலங்கை கிரிக்கெட் சபை அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், இம்முறை பார்வையற்றோருக்கான T20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்றுள்ள இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கான 60 இலட்சம் ரூபா நிதிக்கான காசோலையை இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சுதேஷ் தரங்கவிடம் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்.     

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<