கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மும்பை

241
IPL

ஐ.பி.எல். குவாலிபையர்-2 (Qualifier-2) போட்டி நேற்றைய தினம் பெங்களூரு சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் குவாலிபையர் 1 இல் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடாத்தின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி கொல்கத்தா அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர்.

ஆடுகளம் பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்ததால், கொல்கத்தா அணியின் துடுப்பாட்ட வீரர்கள் கடுமையாகத் திணறினர்.

ஜஸ்ப்ரிட் பும்ப்ரா, கரண் ஷர்மா ஆகியோர் அபாரமாக பந்து வீசினார்கள். ஆட்டத்தின் 2ஆவது ஓவரில் கிறிஸ் லின் 4 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஜஸ்ப்ரிட் பும்ப்ராவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். சுனில் நரைன் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கரண் ஷர்மாவின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த ரொபின் உத்தப்பா 1 ஓட்டங்களிலும், கௌதம் கம்பீர் 12 ஓட்டங்களிலும் கிராண்ட்ஹோம் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழக்க, 31 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து கொல்கத்தா அணி தத்தளித்தது.

6ஆவது விக்கெட்டுக்கு ஜக்கி உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஓட்ட எண்ணிக்கை 87 ஆக இருக்கும்போது ஜக்கி 28 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.

அதன்பின் வந்த சாவ்லா 2 ஓட்டங்களிலும், கவுல்டர்-நைல் 6 ஓட்டங்களிலும் வெளியேறினர். சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி விக்கெட்டாக ராஜ்புத், லசித் மலிங்கவின் பந்தில் ஸ்டம்பை பறிகொடுக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் கரண் ஷர்மா 4 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரிட் பும்ப்ரா 3 விக்கெட்டுகளையும், மிச்சல் ஜொன்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் 108 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுவான இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சிம்சன் மற்றும் பார்திவ் படேல் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீச சிம்சன் 3 ஓட்டங்களிலும், பார்திவ் படேல் 14 ஓட்டங்களிலும் வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கிய இளம் வீரர் ராயுடுவும் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மும்பை அணி 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் களமிறங்கிய அணித்தலைவர் ரோகித் ஷர்மா சற்று நேரம் நிலைத்து நின்று ஆடி சிறிது சிறிதாக ஓட்டங்களை சேர்த்தார்.

அவருடன் ஜோடி சேர்ந்த கருணல் பாண்டியா அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சிதறடித்தார்.

இதன் காரணமாக 14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி வெற்றி இலக்கான 111 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து, நாளைய தினம் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ரைசிங் புனே சுபர்ஜயண்ட் அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது.

போட்டியின் சுருக்கம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 107 (18.5) – சூர்யகுமார் யாதவ் 31(25), கரண் ஷர்மா 16/4(4), ஜஸ்ப்ரிட் பும்ப்ரா 7/3(3),  மிச்சல் ஜொன்சன் 28/2(4)

மும்பை இந்தியன்ஸ் – 111/4 (14.3) – கருணல் பாண்டியா 45(30)