சர்வதேச மெய்வல்லுனர் சங்கத்தினால் இலங்கைக்கு நிதியுதவி

176
Sri Lanka Athletics

இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்காக 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு சர்வதேச மெய்வல்லுனர் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இதன்படி, ஆண்களுக்கான 400 மீற்றர் மற்றும் பெண்களுக்கான 3 ஆயிரம் மீற்றர் தடைதாண்டல் ஆகிய இரண்டு போட்டி நிகழ்ச்சிகளை இலக்காகக் கொண்டு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

>> கால மதிப்பீடு மெய்வல்லுனர் போட்டிகள் ஒத்திவைப்பு

முன்னதாக குறித்த இரண்டு போட்டி நிகழ்ச்சிகளிலும் இலங்கை வீரர்கள் அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகின்ற திறமைகளை உள்ளடக்கிய ஆய்வு அறிக்கையொன்று சர்வதேச மெய்வல்லுனர் சங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிபலனாகவே எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு குறித்த நிதியுதவி கிடைக்கப் பெற்றதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளன வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2018இல் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 4X400 மீற்றர் இலங்கை அஞ்சலோட்ட அணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.

அத்துடன், அதே வருடம் நடைபெற்ற உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் இலங்கை அஞ்சலோட்ட அணி தெரிவாகியிருந்தது.

Watch – முன்னணி வீரர்களின் வெளியேறல் LPL ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

மேலும், குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான 3 ஆயிரம் மீற்றர் தடைதாண்டலில் இலங்கை சார்பாக போட்டியிட்ட பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அதன்பிறகு ஆர்ஜென்டினாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அண்மைக்காலமாக ஆண்களுக்கான 400 மீற்றர் மற்றும் பெண்களுக்கான 3 ஆயிரம் மீற்றர் தடைதாண்டல் ஆகிய இரண்டு போட்டி நிகழ்ச்சிகளிலும் கனிஷ்ட வீரர்களைப் போல சிரேஷ்ட வீரர்களும் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனால், சர்வதேச மெய்வல்லுனர் சங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிதியினை குறித்த போட்டி நிகழ்ச்சிகளின் அபிவிருத்திக்காக பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 22 வீரர்களை உள்ளடக்கிய குழாமொன்றை அறிவிப்பதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

எதுஎவ்வாறாயினும், 2018இல் நடைபெற்ற கனிஷ்ட ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற அருண தர்ஷன, பசிந்து கொடிகார, டில்ஷி குமாரசிங்க, நவிஷ்க சந்தேஷ், பாரமி வந்தி மாரிஸ்டெல்லா, நதீஷா ராமநாயக்க உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் குறித்த குழாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

>> இராணுவ அரை மரதன் ஓட்டத்தில் சம்பியனாகிய சண்முகேஸ்வரன்

2022 ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் 2023இல் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர்களை இலக்காகக் கொண்டு இந்தக் குழாத்தின் பயிற்சிகள் முன்னெடுக்கப்படுதற்கும், தேர்வு செய்யப்படுகின்ற வீரர்களுக்கு மாதாந்தம் 75 அமெரிக்க டொலர்கள் வீதம் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈட்டி எறிதல் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கைக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியினை வழங்குவதற்கு சர்வதேச மெய்வல்லுனர் சங்கம் சம்மதம் தெரிவித்திருந்தது.

எனினும், இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் அப்போதைய நிர்வாகிகள் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் அலட்சியம் காண்பித்ததால் முதல் கட்டமாக 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களை மாத்திரம் வழங்கி, எஞ்சிய நிதியை இரத்து செய்வதற்கு சர்வதேச மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<