கால மதிப்பீடு மெய்வல்லுனர் போட்டிகள் ஒத்திவைப்பு

127

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுப்பர் மற்றும் தேசிய ஆகிய இரண்டு குழாங்களிலும் உள்ள தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு மாத்திரம் நடத்தப்படும் விசேட கால மதிப்பீடு மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் 24ஆம், 25ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், நாட்டில் தற்போது வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக குறித்த தகுதிகாண் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைப்பதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் இன்று (22) அறிவித்தது.

முன்னதாக குறித்த தினங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளை கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைப்பதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், சுப்பர் மற்றும் தேசிய குழாங்களில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் வேண்டுகொளை கருத்திற் கொண்டு, குறித்த இரண்டு குழாம்களிலும் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு மாத்திரம் உள்ளடக்கியதாக தகுதிகாண் போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்திருந்தது. 

>> கொரோனாவினால் தேசிய விளையாட்டு விழா மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவிருந்த இந்த தகுதிகாண் போட்டிகள் மெய்வல்லுனர் தொடர்பில் தேர்வுக் குழுவின் உறுப்பினர் சமன் குமார குணவர்தன கருத்து தெரிவிக்கையில்,

“இந்த தகுதிகாண் போட்டிகள் சுப்பர் மற்றும் தேசிய மெய்வல்லுனர் குழாம்களில் இடம்பெற்றுள்ள வீரர்களின் தனிப்பட்ட திறமைகளை பரீட்சார்த்திப்பதற்காக மாத்திரம் நடைபெறவுள்ளது.

இதில் எந்தவொரு சாதனைகளும் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது. குறிப்பாக, தற்போதுள்ள தேசிய அல்லது மற்றைய எந்தவொரு சாதனையாவாது வீரரொருவரினால் முறியடிக்கப்பட்டால் அது இலங்கை சாதனையாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 

உண்மையில் சுப்பர் மற்றும் தேசிய மெய்வல்லுனர் குழாம்களில் இடம்பெற்றுள்ள வீரர்களின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே நாங்கள் இந்த தகுதிகாண் போட்டிகளை நடத்தவுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

>> Video – LPL ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்..! முழுமையான பார்வை | Sports Round-up – Epi 136

இதன்படி, இந்த வார இறுதியில் நடைபெறவிருந்த குறித்த தகுதிகாண் போட்டிகள் குறிப்பிட்ட சில மணித்தயாலங்களுக்கு மாத்திரம் தான் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

அதிலும் குறிப்பாக, சகல மெய்வல்லுனர் விளையாட்டுகளும் இதில் இடம்பெற மாட்டாது. ஆனால் சுப்பர் குழாத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் மாத்திரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இருபாலாருக்குமான 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர், 800 மீற்றர், 1500 மீற்றர், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல் மற்றும் ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அத்துடன், 3000 மீற்றர் தடைதாண்டல் மற்றும் 100 மீற்றர் சட்டவேலி ஓட்டம் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளும் இதில் உள்ளடங்கும்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுப்பர் மற்றும் தேசிய குழாம்களில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கான மாற்றங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 98ஆவது தேசிய சம்பியன்ஷpப் தொடரின் பிறகு இடம்பெறும் என இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுப்பர் குழாத்தில் 26 வீரர்களும், தேசிய குழாத்தில் 66 வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

>> தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வீரர்களுக்கு கட்டுப்பாடு

இதில் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற குறுந்தூர ஓட்ட வீராங்கனையான ருமேஷிகா ரத்னாயக்க, இளையோர் ஒலிம்பிக்கில் பங்குகொண்ட nஷலிண்;டா ஜென்சன் மற்றும் ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட 2018 ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய காலிங்க குமாரகே உள்ளிட்ட மூவருக்கும் தகுதிகாண் போட்டியில் பங்குபற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<