இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையில் 4 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியைக் கொண்ட தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரின் இலங்கை மகளிர் அணியின் தலைவியாக அனுபவம் வாய்ந்த வீராங்கனை சமரி அதபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மகளிர் அணியின் தலைவி சசிகலா சிறிவர்தன உபாதைக்கு உள்ளாகி உள்ளார். இதனால் இந்த தொடரின் தலைவியாக சமரி அதபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இலங்கை மகளிர் அணியை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வழிநடத்தி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று முடிவடைந்த மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளின் போதும் சசிகலா சிறிவர்தன உபாதை காரணமாக இலங்கை அணியில் இடம்பெற்று இருக்கவில்லை. உலகக் கிண்ணப் போட்டிகளின் போதும் இலங்கை அணியை சமரி அதபத்து தலைமை வகித்திருந்தார்.

டி20 உலகக் கிண்ணப் போட்டிகளின் போது இலங்கை அணி தென் ஆபிரிக்க மகளிர் அணியோடு வெற்றி பெற்று இருந்ததோடு அவர்களது குழுவில் 3ஆம் இடத்தை பிடித்திருந்தது. கடைசியாக இலங்கை மகளிர் அணி அவுஸ்திரேலிய மகளிர் அணியை டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சந்தித்தது. இப்போட்டியில் இலங்கை இறுதிவரை போராடினாலும் போட்டியை வெல்ல முடியாமல் சென்று இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

26 வயது நிரம்பிய இடதுகை துடுப்பாட்ட வீராங்கனையான சமரி அதபத்து மொத்தமாக 54 டி20 போட்டிகளில் விளையாடி 18.00 என்ற துடுப்பாட்ட சராசரியில் 918 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதி கூடிய ஓட்டம் 52 ஓட்டங்களாகும்.

அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இலங்கை மகளிர் குழாம்

  1. சமரி அதப்பத்து (தலைவி)
  2. பிரசாதனி வீரக்கொடி (உப தலைவி)
  3. சமரி பொல்கம்பல
  4. திலனி மனோதர  
  5. நிபுணி ஹன்சிகா
  6. எஷானி லொகுசூரிய  
  7. அம காஞ்சனா
  8. உதேஷிகா பிரபோதினி  
  9. இனோகா ரணவீர
  10. இனோஷி பெர்னாண்டோ
  11. அச்சினி குலசூரிய
  12. சுகந்தி தசநாயக்க
  13. இமல்கா மென்டிஸ்
  14. ஹர்சித மாதவி