‘வெற்றியுடன் நாடு திரும்ப நாங்கள் தயார்’ – நவீட் நவாஸ்

Sri Lanka Tour of Bangladesh 2022

208

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கை ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதற்கு பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வெல்வது முக்கிய காரணியாக இருக்கும் என இலங்கை அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நவீட் நவாஸ் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சிகள் மற்றும் பயிற்சி முகாம்கள் நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக பாதிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வீரர்களும் தங்களால் இயன்றவரை பயிற்சி செய்து வருவதாக நவீட் நவாஸ் மேலும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் Cricbuzz இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அணியில் இடம்பிடித்துள்ள பல வீரர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் தங்கள் பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். அவர்கள் ஏற்கனவே 2 மாதங்களுக்கும் கூடுதலாக இந்த சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருகின்றனர். இலங்கையில் தற்போது நேர்மறையாகப் பார்க்கக்கூடிய சில விடயங்கள் உள்ளன. ஆனால் இந்த டெஸ்ட் தொடரை சிறப்பாக முடித்து வெற்றியுடன் இலங்கைக்குத் திரும்புவோம்” என்று நம்புகிறோம் என்றார்.

இதனிடையே, பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் இலங்கையின் பந்துவீச்சு வரிசை குறித்து கருத்து தெரிவித்த நவாஸ், எமது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு அதிகளவு சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாவிட்டாலும், பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்களுக்கு எந்த நேரத்திலும் சவால் கொடுக்கின்ற திறமையான பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பதாக குறிப்பிட்டார்.

இரு அணிகளின் பந்துவீச்சு வரிசையை ஒப்பிட்டுப் பார்த்தால், எமது பந்துவீச்சாளர்களுக்கு சர்வதேச அனுபவம் குறைவாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை இரு அணிகளும் வலுவான நிலையில் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரானது, கூர்மையான மற்றும் சூடான முடிவுகள் நிறைந்த ஒரு மறக்க முடியாத தொடராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதேபோல இந்த டெஸ்ட்

தொடரானது இலங்கை அணிக்கு நினைப்பது போல் இலகுவானதாக இருக்காது.

ஆனால், நாங்கள் எப்பொழுதும் நம்பிக்கையுடனும், எல்லாவற்றையும் பற்றி திறந்த மனதுடனும் எதிர்கொள்ள முயற்சி செய்கிறோம். அதிலும், பங்களாதேஷில் உள்ள ஆடுகளங்கள் மற்றும் காலநிலைகளுக்கு விரைவாக மாறுவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். குறிப்பாக நாங்கள் விளையாடும் சிட்டகாங் மைதானத்தில் உள்ள ஆடுகளங்களுக்கு விரைவாக மாறினால், பெரிய ஓட்டங்களை இலக்காகக் கொண்டு எதிரணிக்கு அதிக அழுத்தத்தை கொடுக்க முடியும்” என அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக நவீட் நவாஸ் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு, அவர் பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றியதுடன், அந்த அணிக்கு 2020இல் இளையோர் உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பதற்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

அந்த காலகட்டத்தில் தன்னால் பயிற்றுவிக்கப்பட்ட மஹ்முதுல் ஹசன் மற்றும் ஷரிபுல் இஸ்லாம் போன்ற வீரர்கள் தற்போது பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருப்பது பற்றி கருத்து தெரிவித்த நவீட் நவாஸ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பங்களாதேஷ் கிரிக்கெட்டின் நாமத்தை மேலும் அதிகரிப்பதற்கு திறமையான வீரர்கள் இருப்பதாகக் கூறினார்.

அவர்கள் இருவரும் மிகவும் திறமையான வீரர்கள். ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு மிகச் சிறந்த பங்களிப்பினை வழங்குகின்ற வீரர்களாக மாறுவார்கள். நான் அவர்களை நீண்ட நாட்களாக சந்திக்கவில்லை. அவர்கள் என்னை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று நம்புகிறேன் அவர் குறிப்பிட்டார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<