பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Sri Lanka tour of Bangladesh 2022

286
Sri Lanka vs Bangaldesh

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (4) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் கடைசியாக நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்திலிருந்து 7 மாற்றங்கள் மெற்கொள்ளப்பட்டுள்ளன.

>> பஞ்சாப் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த பானுக ராஜபக்ஷ

குறிப்பாக உபாதைக்கு உள்ளாகியுள்ள பெதும் நிஸ்ஸங்க அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், லஹிரு திரிமான்ன, ஓய்வுபெற்ற வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்தால், சரித் அசலங்க, ஜெப்ரி வெண்டர்சே, லஹிரு குமார மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள T20I உலகக்கிண்ணத்தை கவனத்திற்கொண்டு துஷ்மந்த சமீர டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இவர் விளையாடமாட்டார் என்பதுடன், லஹிரு குமாரவுக்கு இந்திய தொடரில் உபாதை ஏற்பட்டிருந்தது. எனவே, இவரும் அணியில் இணைக்கப்படவில்லை.

வெளியேற்றப்பட்டுள்ள வீரர்களுக்கு பதிலாக, நடைபெற்றுமுடிந்த தேசிய சுபர் லீக்கில் அதீகூடிய ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கமிந்து மெண்டிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இவருடன் கமில் மிஷார மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை குழாத்தில் ஏற்கனவே ரொஷேன் சில்வா இணைக்கப்பட்டிருந்த போதும், அவர் அணியில் இணையவில்லை என்பதால், கமிந்து மெண்டிஸிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், உபாதைக்கு முகங்கொடுத்திருந்த ரமேஷ் மெண்டிஸ் குணமடைந்து மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இவருடன் சுழல் பந்துவீச்சாளராக, புதுமுக இடதுகை சுழல் பந்துவீச்சாளர் சுமிந்த லக்ஷான் டெஸ்ட் குழாத்தில் இடம்பிடித்துள்ளார். முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்கவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டில்ஷான் மதுசங்கவுடன், கசுன் ராஜித மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான மாற்றங்களுடன் திமுத் கருணாரத்ன தலைமையில் களமிறங்கவுள்ள இலங்கை அணியில், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரும் குழாத்தில் இடம்பிடித்துள்ளனர். அத்துடன், மேற்குறித்த வீரர்களை தவிர்த்து இந்திய தொடரில் இணைக்கப்பட்டிருந்த ஏனைய வீரர்களும் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர்.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணி எதிர்வரும் 8ம் திகதி புறப்படவுள்ளதுடன், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் 2 நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியொன்றில் விளையாடவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 15ம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 23ம் திகதியும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), கமில் மிஷார, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், ரமேஷ் மெண்டிஸ்,

சாமிக்க கருணாரத்ன, சுமிந்த லக்ஷான், கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க, பிரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<