உலக கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 3ஆவதும் இறுதியுமான T-20 போட்டி நேற்றுமுன்தினம் (29) பாகிஸ்தானின் லாகூர் கடாபி மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதன்மூலம் சுமார் 8 வருடகால கிரிக்கெட் வரட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் வசந்தம் உதயமாகியது.

ஒரு புறத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அணியைச் சேர்ந்த அனுபவமிக்க வீரர்கள் அங்கு செல்ல மறுப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால், பாகிஸ்தான் செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அரச தலைவருக்கு வழங்கப்படுகின்ற அதியுச்ச பாதுகாப்பை வழங்குவதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும், அந்த நாட்டு அரசும் உத்தரவாதமளித்திருந்தன.

லாஹூரில் இலங்கை அணிக்கு அமோக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிளைக் கொண்ட டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை…

இதனையடுத்து இளம் வீரர்களைக் கொண்ட அணியொன்றை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் தெரிவுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும் அபுதாபியில் நடைபெற்ற முதலிரண்டு T-20 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவிய நிலையில், 3ஆவதும் இறுதியுமான T-20 போட்டிக்காக சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணியினர் நேற்றுமுன்தினம் அதிகாலை லாகூரின் அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தை அடைந்தனர்.

வீரர்கள் மாத்திரமன்றி, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால உள்ளிட்டோரும் அங்கு சென்றனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் லாகூருக்குச் சென்ற இலங்கை அணியினருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இலங்கை அணியினர், ஹோட்டலுக்கு குண்டு துளைக்காத பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை அணியினர் பயணித்த சுமார் 14 கிலோமீற்றர் தூரமான வீதிகள் மூடப்பட்டிருந்ததுடன், பொலிஸ் கொமாண்டோ வாகனங்கள் சூழ இலங்கை அணியினர் பயணித்தனர். ஓட்டுமொத்தத்தில் ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கு நிகரானதாக இலங்கை அணியினருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு இருந்தது.

அத்துடன், திஸர பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணிக்கு லாகூர் எங்கும் வரவேற்பு பதாதைகள், சிங்கள மொழியில் வரவேற்பு வாசகங்கள் தொங்கவிடப்பட்டு கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது. இலங்கை அணியின் வருகை லாகூர் நகரெங்கும் கோலாகல கொண்டாட்டமாக இடம்பெற்றது. அத்துடன் போட்டியைக் காணவந்த அனைத்து ரசிகர்களுக்கும் பூச் செண்டொன்றை கைகளில் வழங்கி அந்நாட்டு பொலிஸார் தமது சந்தோசத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

எட்டு வருடங்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியில் விளையாடியிருந்த வீரர்கள் தீவிரவாத தாக்குதலினால் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பாதுகாப்பாக பாகிஸ்தானை விட்டு வெளியேறியிருந்தனர். ஆனால் பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டை புதுப்பிக்கச் செய்யும் நோக்கில் எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமுறையினர் நேற்றுமுன்தினம் பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் விளையாடியிருந்தமை வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது.

பாகிஸ்தானால் T-20 தொடரிலும் வைட் வொஷ் செய்யப்பட்ட இலங்கை

இன்று (29) நடைபெற்று முடிந்திருக்கும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு …

எனினும், இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவி 3 போட்டிகளைக் கொண்ட T-20 தொடரையும் இழந்தாலும், 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாகிஸ்தான் ரசிகர்கள் கூடியிருந்த கடாபி மைதானத்தில் அந்நாட்டு ரசிகர்களினால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அத்துடன், பாகிஸ்தான் ரசிகர்கள் இலங்கை கொடியை ஏந்தியவாறு இலங்கை வீரர்களுக்கு தமது மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்திருந்தனர்.

1996 உலகக் கிண்ண இறுதிப் போட்டி கடாபி மைதானத்தில் நடைபெற்றபோது இலங்கை அணியின் வெற்றிக்காக ”ஸ்ரீலங்கா சின்தாபாத்” என மைதானம் முழுக்க பாகிஸ்தான் ரசிகர்கள் கோஷமிட்டனர். அதே உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை நடைபெற்றபோது இந்நாட்டில் நிலவிய தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இலங்கை வருவதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

எனினும், இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என்பதை நிரூபிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்வந்ததுடன், அப்போதைய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் அனா புன்சி ஹேவாவின் அழைப்பின் பேரில் இந்து – பாகிஸ்தான் ஒன்றிணைந்த அணியொன்று இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒரு சிறந்த கிரிக்கெட் நண்பனாக பாகிஸ்தானுக்கு கைகொடுத்து உதவிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு உலகின் நாலா புறங்களிலிருந்தும் கிரிக்கெட் வீரர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானை தனிமைப்படுத்த மாட்டோம் – திலங்க சுமதிபால

பாகிஸ்தானை இனிமேலும் தனிமைப்படுத்த மாட்டோம் எனவும், மிகவும் விரைவில் இலங்கை ஏ அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்கு எந்தவொரு நாடுகளும் முன்வரவில்லை. ஆனாலும் முன்னதாக ஜிம்பாப்வே மற்றும் உலக பதினொருவர் அணிகள் அங்கு சென்று விளையாடியிருந்த நிலையில், இலங்கை அணி முதற்தடவையாக பாகிஸ்தான் மண்ணில் விளையாடியிருந்தமை கவனிக்கத்தக்கது.

பாகிஸ்தானுக்கு செல்ல முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியளிக்கிறது. எம்மால் பாகிஸ்தானை ஒரு போதும் தனிமைப்படுத்த முடியாது. ஏனெனில் நாங்களும் சுமார் 30 வருடங்களாக தீவிரவாதத்தால் மோசமாக பாதிக்கப்பட்டோம் என திலங்க சுமதிபால தெரிவித்தார்.

பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிக்கின்றனர். எனவே கடந்த 8 வருடங்களாக பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. அதனால் நாம் எமது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் இந்தப் பயணம் இத்தோடு முடிந்துவிடாது. நாம் இலங்கை ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளை விரைவில் பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதேபோல, கிரிக்கெட் விளையாடுகின்ற ஏனைய ஆசிய நாடுகளும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறுவது மகிழ்ச்சி – குமார் சங்கக்கார

பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு இலங்கை அணிமீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின்போது இலங்கை அணியில் இடம்பெற்ற வீரர்களில் ஒருவராக சங்கக்காரவும் இருந்தார். இந்நிலையில் தற்பொழுது மீண்டும் இலங்கை அணி முதற்தடவையாக பாகிஸ்தான் சென்று விளையாடியமை தொடர்பில் சங்கா தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

எனினும், இவ்வருட முற்பகுதியில் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி பாகிஸ்தானில் இடம்பெற்றாலும், அதில் பங்கேற்பதற்கு சங்கக்கார எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் மீண்டும் விளையாட கிடைத்தமை பெருமையளிக்கிறது – திஸர பெரேரா

இலங்கை அணிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து திருப்தியடைகிறேன். எமது நாட்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்த காலத்திலும் பாகிஸ்தான் எமக்கு நிறையவே உதவி செய்திருந்தது. எனவே நாங்களும் அதற்கு நன்றிக் கடனாக பாகிஸ்தானுக்கு வந்து விளையாடினோம். குறிப்பாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால எமது வீரர்களுக்கு தையரியத்தை கொடுத்திருந்தார்.

கிரிக்கெட்டை நேசிக்கின்ற பாகிஸ்தான் ரசிகர்கள் முன்னிலையில் மீண்டுமொருமுறை விளையாடக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

இந்நிலையில் இலங்கை அணியின் அனுபவமிக்க கிரிக்கெட் வர்ணனையாளரான ரொஷான் அபேசிங்க, ”என்னுடைய முதல் வெளிநாட்டு வர்ணனையை ஆரம்பித்த (1996 உலக் கிண்ண இறுதிப் போட்டி) பாகிஸ்தானுக்கு மீண்டும் வரக் கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

லாகூர் சூழல் மிகவும் அற்புதமானது. 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் போட்டியைக் கண்டுகளிக்க வருகை தந்துள்ளனர். கிரிக்கெட் போட்டிகளுக்காக அவர்களிடம் உள்ள ஆர்வத்தை நன்கு புரிந்துகொள்ள முடிகின்றது என்றார்.

ஒரே போட்டியில் இரு உலக சாதனைகளைப் படைத்த கோஹ்லி

கிரிக்கெட் உலகில் அண்மைக்காலமாக சாதனைகளுக்கு மேல் …

பாகிஸ்தானின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவிய முன்னாள் பிரதமருக்கு நன்றி – மர்யம் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறுவதற்கு முக்கிய காரணமாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விளங்கினார். அதிலும் குறிப்பாக கடந்த மாதம் நடைபெற்ற உலக பதினொருவர் அணியின் பாகிஸ்தான் விஜயத்துக்கு பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் அதிக கவனத்தையும் அவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளான மர்யம் நவாஸ், இலங்கை அணியின் வருகை குறித்து கருத்து வெளியிடுகையில், ”சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் வந்து மீண்டும் விளையாடுவதற்கு முக்கிய காரணமாக இருந்த எனது தந்தைக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் சுமார் 5 வருடங்களாக கடாபி மைதானத்தில் இவ்வாறான ரசிகர்கள் கூட்டத்தை நாங்கள் கண்டிருக்கவில்லை. இன்று பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. எனவே, சமாதானத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய எனது தந்தை நவாஸ் ஷெரீப்புக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.

பாகிஸ்தான் வீரர்களின் வாழ்த்து

பாகிஸ்தான் ரசிகர்களின் நீண்டகால கனவை நனவாக்கிய இலங்கை அணிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

”பாகிஸ்தான் அணிக்கு சிறந்த வெற்றி. ஆனாலும் பாகிஸ்தானுக்கு வருகை தந்தமைக்காக இலங்கை அணிக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், நீங்கள் எமது மனதை வென்று விட்டீர்கள்” என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொஹைப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மற்றுமொரு அதிரடி வேகப்பந்து வீச்சாளரான வசீம் அக்ரம் தனது டுவிட்டர் வலைத்தளத்தில், பாகிஸ்தானுக்காக இலங்கை அணி மிகப் பெரிய அர்ப்பணிப்பு செய்துள்ள அதேநேரம், இரு நாடுகளுக்கிடையிலான நட்பு இதன்மூலம் பறைசாட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

மிகப் பெரிய வெற்றி! இலங்கை அணிக்கு மிகப் பெரிய நன்றி! என ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சொஹைப் மலிக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ரசிகர்களின் முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்திய இலங்கை அணிக்கு நன்றி! பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் பாராட்டுக்கள். மைதானம் முழுவதும் ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். பாகிஸ்தான் சின்தாபாத்! என அவ்வணியின் மற்றுமொரு சகலதுறை ஆட்டக்காரரான மொஹமட் ஹபீஸ் தெரிவித்தார்.

இந்த வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்ட இலங்கைக்கு நன்றி! உங்களுடைய உதவியை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். இங்கு கிரிக்கெட் தான் வெற்றி பெற்றது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சஹீட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்ற பாகிஸ்தான் வம்சாவளி குத்துச்சண்டை வீரரான அமீர் கான் இலங்கை அணியின் வருகை குறித்து தனது டுவிட்டரில் கருத்து வெளியிடுகையில், ”சர்வதேச போட்டிகளை நடாத்துவதற்கு பாகிஸ்தான் சிறந்த இடமாகும் என்பதை நான் முழு உலகிற்கும் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.