ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் IPL தொடர்?

Indian Premier League 2021

215
IPL 2020
IPLT20.COM

இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். (IPL, Indian Premier League) தொடரில், மைதானத்துக்குள் ரசிகர்கள் உள்வாங்கப்படுவதில் அதிகமான சிக்கல்கள் உள்ளதாக இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) அறிவித்திருந்தது. அதன்படி, தொடர் அடுத்த மாதம் 9ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

IPL தொடரின் போட்டி அட்டவணை வெளியானது!

தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்ட போது, இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா, இம்முறை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் பாதி போட்டிகள் மூடப்பட்ட மைதானங்களில் நடைபெறும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதி மூன்று டெஸ்ட் போட்டிகளில், 50 சதவீதம் ரசிகர்கள் மைதானத்துக்கு அழைக்கப்பட்டிருந்த போதும், ஐ.பி.எல். தொடரை இதுபோன்று நடத்தவதில் அதிகமான சிக்கல்கள் உள்ளது என்பதை சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

“ரசிகர்கள் தொடர்பில் இறுதியான முடிவு இல்லை. சூழ்நிலைக்கு ஏற்றவகையில் தீர்மானம் எடுக்கப்படும். ரசிகர்களை மைதானத்துக்கு அழைத்துவரும் போது, அணிகள் மைதானத்துக்குள் விளையாடும். ஏனைய சில அணிகள் மைதனத்துக்கு வெளியில் பயிற்சிகளில் ஈடுபடும். நாளாந்தம் பயிற்சிகள் நடைபெறும். எனவே, ரசிகர்கள் பயிற்சிகளில் ஈடுபடும் வீரர்களுக்கு அருகில் செல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இது ஆபத்தாக அமையலாம்” என்றார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இம்முறை இந்தியாவில் நடைபெறும் போதும், குறித்த சூழ்நிலைக்கு தங்களை மாறிக்கொள்ள முடியும் என கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

“டுபாயிலும் நாம் இதே சூழ்நிலையில் விளையாடினோம். நாம் ரசிகர்களின்றி போட்டிகளை ஆரம்பத்தில் நடத்தியதுடன், பின்னர் ரசிகர்களை அழைக்க திட்டமிட்டோம். ஆனால், பின்னர் நாம் நினைத்த விடயங்கள் இடம்பெற்றன. எனவே, நாம் ரசிகர்களை அழைத்து ஆபத்தை எதிர்நோக்க தயாராக இல்லை. பொருத்திருந்து பார்ப்போம்” என்றார்.

ஐ.பி.எல். தொடர் எதிர்வரும் 9ம் திகதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப்போட்டி மே மாதம் 30ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க