ஆசிய கழக கரப்பந்தாட்ட தொடருக்காக மியன்மார் சென்றுள்ள இலங்கை அணி

94

இலங்கை இராணுவ வீரர் சாமர சம்பத் தலைமையிலான இலங்கை கழக கரப்பந்தாட்ட அணி மியன்மாரின் தை – பெய் – தோ நகரில் நடைபெறவுள்ள ஆடவருக்கான ஆசிய கழக கரப்பந்தாட்டப் போட்டிகளில் பங்ககேற்பதற்காக நேற்றுமுன்தினம் (26) மியன்மார் நோக்கி பயணமாகியது.

எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்முறைப் போட்டித் தொடரில் 16 ஆசிய நாடுகள் பங்குபற்றவுள்ளன.

20 வயதின் கீழ் ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

பஹ்ரெய்னின் மனாமா நகரில் நடைபெற்று வருகின்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான….

அத்துடன், அணிகள் ஏ, பி, சி, டி என 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெறவுள்ள இந்தத் தொடரில் குழு சி இல் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, அவுஸ்திரேலியா, ஹொங்கொங், தாய்லாந்து ஆகிய பிரபல நாடுகளுடன் போட்டியிடவுள்ளது. இதன் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுக்கொள்கின்ற அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும்.

இதன்படி, ஜுலை 30ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியையும், ஜுலை 31இல் ஹொங்கொங் அணியையும் சந்திக்கவுள்ள இலங்கை அணி, ஆகஸ்ட் முதலாம் திகதி தாய்லாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இதேநேரம், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்ட அணிகளில் இடம்பெற்ற வீரர்களுக்கு மாத்திரம் இப்போட்டித் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பினை வழங்க இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில், இலங்கை மின்சார சபை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் (5 வீரர்கள்) இடம்பெற்றுள்ள இலங்கை அணியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்களும், இலங்கை துறைமுக அதிகார சபையைச் சேர்ந்த 3 வீரர்களும், இலங்கை விமானப்படை அணியைச் சேர்ந்த 2 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இராணுவப்படை அணிக்கு மற்றுமொரு சம்பியன் பட்டம்

குருநாகல், வெலகதர அரங்கில் நடைபெற்ற, 2018 வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியின் திறந்த….

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டு வருகின்ற செர்பிய நாட்டைச் சேர்ந்த கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளரான டெஜான் டுலிசிவிக்கின் பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி களமிறங்கவுள்ள முதலாவது சர்வதேச கரப்பந்தாட்டப் போட்டித் தொடர் இதுவாகும்.

அதுமாத்திரமின்றி, இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை கரப்பந்தாட்ட குழாத்தில் இடம்பெற்றுள்ள பல வீரர்கள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, தற்போது பஹ்ரைனில் நடைபெற்று வருகின்ற 20 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஆசிய கரப்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடி வருகின்ற இரண்டு வீரர்களுக்கு ஆசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்குவதற்கு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற ஆடவருக்கான ஆசிய கழக கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் 13 நாடுகள் பங்குபற்றியிருந்ததுடன், இதில் இலங்கை அணிக்கு 11ஆவது இடத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இலங்கை கரப்பந்தாட்ட அணி விபரம்:

சாமர மிஹிரான் (தலைவர்), வசன்த லக்மால், சமில மலிந்த சில்வா (இலங்கை இராணுவம்), ஜனித் சுரத், நெத்மல் வசன்தப்பிரிய, ஷெனொன் விமுக்தி சாகர (இலங்கை துறைமுக அதிகார சபை), தீப்தி ரணவக, கயான் மதுஷங்க, டபிள்யு. லக்மால், அயேஷ் தில்ஹான் பெரேரா, கசுன் சதுரங்க பெர்னாண்டோ (இலங்கை மின்சார சபை), ரசன்த சுதசிங்க, தனுஷ்க தில்ஹான் பெர்னாண்டோ (இலங்கை விமானப்படை), மலித தினிது சாமர (சி.சி.எல்)

அதிகாரிகள் விபரம்

பிரதான பயிற்றுவிப்பாளர் – டெஜான் டுலிசிவிக், உதவிப் பயிற்றுவிப்பாளர் – சால்ஸ் திலகரத்ன, ஆலோசகர் – நளின் சம்பத் அபேசிங்க, முகாமையாளர் ரொஹான் பத்திரகே

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<