தேசிய பளுதூக்கலில் தங்கப் பதக்கம் வென்றார் ஆஷிகா

National Weightlifting Championship 2023

294

பொலன்னறுவையில் நடைபெற்று வரும் சிரேஷ்ட வீரர்களுக்கான தேசியபளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 64 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்குகொண்ட வடக்கின் நட்சத்திர வீராங்கனை ஆஷிகா விஜயபாஸ்கர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 2023 ஆண்டுக்கான கனிஷ்ட, இளையோர் மற்றும் சிரேஷ்ட வீரர்களுக்கான தேசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் பொலன்னறுவையில் உள்ள கல்லேல்லவில் கடந்த 27ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் யாழ்ப்பாணம் பளுதூக்கல் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான 64 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்குகொண்ட ஆஷிகா, ஸ்னெச் முறையில் 65 கிலோ கிராம் எடையையும், க்ளீன் எண்ட் ஜேர்க் முறையில் (Clean & Jerk) முறையில் 80 கிலோ கிராம் எடையும் தூக்கி ஒட்டுமொத்தமாக 145 கிலோ கிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

2021ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டிகளில் 19 தடவைகள் தேசிய சாதணையை முறியடித்த ஆஷிகா, கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு தேசிய மட்டப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

விளையாட்டைப் போல கல்வியிலும் அதீத ஆர்வமும், திறமையும் கொண்ட ஆஷிகா, உயர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு தேசிய மட்டப் போட்டிகளிலும் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில், இம்முறை தேசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் முதல் தடவையாக களமிறங்கிய அவர், தங்கப் பதக்கத்துடன், தனது வெற்றிப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இதில் சிறப்பம்சம் என்னவெனில், பயிற்சிகள் எதுவுமின்றி கடுமையான போட்டிக்கு மத்தியிலும் அவர் தங்கப் பதக்கம் வென்றமை அவரது தன்னம்பிக்கையை பறைசாற்றியுள்ளது.

யாழ். சுண்டுக்குளி பெண்கள் கல்லூரியின் பழைய மாணவியான ஆஷிகா, பாடசாலைக் காலத்தில் இருந்தே பளுதூக்கலில் திறமைகளை வெளிப்படுத்தி தேசிய மட்ட நட்சத்திரமாக வலம் வந்தார்.

இதில் 2016இல் மலேஷியாவில் நடைபெற்ற பொதுநலவவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆஷிகா, இறுதியாக கடந்த 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, யாழ்ப்பாணம் பளுதூக்கல் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தேசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குகொண்ட மேலும் சில வீராங்கனைகள் பதக்கங்களை வென்றனர். பெண்களுக்கான 81+ A கிலோ எடைப் பிரிவில் ஏ.சானியா மற்றும் பெண்களுக்கான 71 கிலோ கிராம் எடைப் பிரிவில் வி. ஜெஸ்மினா தங்கப் பதக்கங்களை சுவீகரிக்க, பெண்களுக்கான 40 கிலோ கிராம் எடைப் பிரிவில் டி. நவநீதா வெள்ளி்ப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேவேளை, இம்முறை கனிஷ்ட, இளையோர் மற்றும் சிரேஷ்ட வீரர்களுக்கான தேசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த சில வீராங்கனைகளும் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

இதில் பெண்களுக்கான 87 கிலோ கிராம் எடைப் பிரிவில் (கனிஷ்ட பிரிவு) பங்குகொண்ட கே. ஜதுஷா தங்கப் பதக்கத்தையும், 71 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஆர். ஸ்ரீவித்தகி வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<