இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் புதிய பயிற்சியாளராக சொமித்தா

210

இலங்கை வலைப்பந்தாட்ட தேசிய அணியின் புதிய பயிற்சியாளராக சொமித்த டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை வலைப்பந்தாட்ட சட்டத்துக்கு அமைய அவர் எதிர்வரும் ஒரு வருடத்திற்கு தேசிய வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராகச் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பிரதான பயிற்சியாளராகக் கடமையாற்றிய திலகா ஜினதாச தனது பதவியை அண்மையில் இராஜினாமாச் செய்தார். இதனையடுத்து புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டது.  

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் திலகா ஜினதாச இராஜினாமா

இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான திகதிகள் இரண்டு தடவைகள் நீடிக்கப்பட்ட போதிலும், மூன்று விண்ணப்பங்கள் மாத்திரமே கிடைக்கப் பெற்றன.

இதன்படி, குறித்த பதவிக்கு கொழும்பைச் சேர்ந்த சொமித்தா டி அல்விஸ், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனோன்மணி சின்னத்தம்பி மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த கணேஷ் தனுசன் ஆகிய மூவரும் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த மூவருக்குமான நேர்முகத் தேர்வு நேற்றுமுன்தினம் (06) டொரின்டனில் நடைபெற்றது. 

சி. ரத்னமுதலி தலைமையில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்தியர் லால் ஏக்கநாயக்க, யசா ராமசந்த்ர, யஸ்மின் தர்மரத்ன மற்றும் ஒலீவியா கமகே உள்ளிட்டோர் உறுப்பினர்களாக கலந்துகொண்டனர்

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 122

இதன்படி, இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சொமித்த டி அல்விஸ் தெரிவு செய்யப்பட்டதுடன், ஏனைய 2 பேரும் மாவட்ட ரீதியாக பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்கள் என இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. 

கடந்த 1995ஆம் ஆண்டில் இருந்து 2003ஆம் ஆண்டு வரை தேசிய வலைப்பந்தாட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய 51 வயதான சொமித்தா டி அல்விஸ், 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் உப தலைவியாக செயற்பட்டார்

அத்துடன், 2003இல் நடைபெற்ற மகளிருக்கான உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  

மேலும், 1997 மற்றும் 2001இல் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பயின்ஷிப் தொடரில் சம்பியாக மகுடம் சூடிய இலங்கை அணியின் உறுப்பினராகவும் அவர் இருந்தார்

2021இல் இலங்கை வலைப்பந்தாட்டத்துக்கு அதிக போட்டிகள்

அதுமாத்திரமின்றி, 2010இல் இலங்கை கனிஷ் வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக செயற்பட்ட அவர் 2000 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஹட்டன் நெஷனல் வங்கி வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராகவும் செயற்பட்டு, 13 தடவைகள் அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுக்கவும் காரணமாக இருந்தார்

அதன்பிறகு, இலங்கை கடற்படை வலைப்பந்தாட்ட அணியின் பிரதான பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அவர், அதே வருடம் நடைபெற்ற தேசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் அந்த அணிக்கு முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

புதிய பயிற்சியாளரை தேடும் இலங்கை வலைப்பந்து அணி

இந்த நிலையில், இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்மை தொடர்பில் சொமித்தா டி அல்விஸ் கருத்து வெளியிடுகையில்,

“எமது வீராங்கனைகள் ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரை இலக்காகக் கொண்டு பயிற்சிகளை முன்னெடுத்து வந்தனர்

எனினும், கொரோனா வைரஸ் காரணமாக பயிற்சிகள் அனைத்தும் இடைநடுவில் நிறுத்திவைக்கப்பட்டன. எனவே மீண்டும் எமது வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பது கட்டாயம் என நினைக்கிறேன்

இதுதொடர்பில் நான் இதுவரை இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் பேசவில்லை” என தெரிவித்தார்

இதனிடையே, இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவி விக்டோரியா க்ஷ்மி இது குறித்து கருத்து தெரிவிக்கையில்

“சொமித்தா டி அல்விஸின் நியமனமானது எமது வலைப்பந்தாட்ட அணியின் எதிர்காலத்துக்கு சிறந்த முதலீடாக இருக்கும் என நம்புகிறேன். வலைப்பந்தாட்ட சட்டத்துக்கு அமைவாக ஒரு வருடத்துக்கு மாத்திரமே பயிற்சியாளரை நியமிக்க முடியும். எனினும், அவருடைய திறமையை வைத்து பதவிக்காலத்தை நீட்டிக்க அவதானம் செலுத்தப்படும்

ஆசிய வலைப்பந்தாட்டத் தொடர் ஒத்திவைப்பு

மேலும், புதிய பயிற்சியாளரின் சம்பளம் தொடர்பில் அடுத்த முறை நடைபெறவுள்ள வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பேரவையில் தீர்மானிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்

இதேநேரம், இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் உப பயிற்சியளராக கடமையாற்றிய பி.டி.என் ப்ராசி, தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

1997இல் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியை வழிநடத்திய இவர், தற்போது கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய புதிய பயிற்சியாளரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை வலைப்பந்தாட்ட அணி வீராங்கனைகள் விரைவில் பயிற்சிகளை ஆரம்பிப்பார்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய உள்ளக மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டு விழா தான் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சொமித்த டி அல்விஸின் பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை வலைப்பந்தாட்ட அணி பங்குபற்றவுள்ள முதலாவது சர்வதேசப் போட்டியாகும்.

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முதலாவது தலைவி மரணம்

எனினும், அதற்குமுன் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடைந்தால், ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள அழைப்பு நாடுகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி பங்குபற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹொங்கொங் வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்தத் தொடரில் இலங்கையுடன், ப்ரூனை மற்றும் கென்யா ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளன. 

இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மாதம் தென்கொரியாவில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் இரத்துச் செய்யப்பட்டதுடன், அடுத்த ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் 2022இல் நடைபெறவுள்ளது

அந்தத் தொடர் 2023 உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடருக்கான தகுதிகாண் போட்டியாக அமையவுள்ளதால், அதற்கான இலங்கை அணியை தயார்படுத்துவது புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சொமித்த டி அல்விஸின் முக்கிய பொறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க