இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் திலகா ஜினதாச இராஜினாமா

2

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாச தனது பதவியை இராஜினமாச் செய்வதாக அறிவித்துள்ளார்.  

தனது இராஜினாமாக் கடிதத்தை இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்துக்கு தயாராகும் இலங்கை

இலங்கை வலைப்பந்தாட்ட அணி, கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய..

இந்த நிலையில், தனது இராஜினாமா குறித்து திலகா ஜினதாச கருத்து தெரிவிக்கையில், இந்த முடிவு திடீரென எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. எவ்வாறாயினும், இவ்வருடம் நடைபெறவிருந்த ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்குப் பிறகு எனது ஒப்பந்தக் காலம் நிறைவுக்கு வருகின்றது.  

அத்துடன், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

குறிப்பாக அடுத்த வருடம் 3 முக்கிய வலைப்பந்தாட்டத் தொடர்கள் நடைபெறவுள்ளன. அதனால் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் அடுத்த வருடமும் நடைபெறுவது சந்தேகம் தான்

எனவே, தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பதற்கு எனக்கு விருப்பம் கிடையாது. அதனால் பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்தேன். குறிப்பாக, வலைப்பந்தாட்ட நிர்வாகத்துக்கும், எனக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடுகளும் இந்த முடிவுக்கு காரணமாக இருந்தத” என அவர் தெரிவித்தார்

ஆசியாவில் சம்பியனாகும் கனவுடனே களமிறங்கினோம் – திலகா ஜினதாச

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை…

இந்த நிலையில், தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து பேசிய அவர், புரூனை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்குமாறு எனக்கு மீண்டும் அழைப்பு கிடைத்தது. எனினும், எனது வீட்டு வேலைகளுடன் அதை செய்வதற்கு கடினம்

அதேநேரம், கேட்வே சர்வதேசப் பாடசாலையின் வலைப்பந்தாட்ட பயிற்சியாளராக கடமையாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதை நான் ஏற்றுக்கொண்டேன். அதேபோல, கேட்வே சர்வதேச பாடசாலையினால் முன்னெடுக்கப்படவுள்ள விளையாட்டு வேலைத்திட்டத்தின் தலைவியாகவும் என்னை நியமித்துள்ளார்கள்

எனவே, இந்தப் பாடசாலைக்கும், நாட்டுக்கும் எனது சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு தயாராக உள்ளேன். அத்துடன், பயிற்சியாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தாலும், தேசிய வலைப்பந்தாட்ட அணிக்காக தொடர்ந்து தனது பங்களிப்பினை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன்” எனவும் அவர் தெரிவித்தார்.  

இதனிடையே, இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளன நிர்வாகத்தினால் தனக்கு இதுவரை எந்தவொரு மரியாதையும் கிடைக்கவில்லை என தெரிவித்த திலகா ஜினதாச, வீராங்கனைகளுடன் இதுவரை வந்த பயணம் குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.   

இதேவேளை, திலகா ஜினதாசவின் இராஜினாமா கடிதம் தனக்கு கிடைத்ததாகத் தெரிவித்துள்ள இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவி விக்டோரியா லக்ஷ்மி, புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கான வேலைகள் நாட்டின் தற்போதைய நிலைமை சுமுகமான பிறகு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.  

தொடர் தோல்விகள், பின்னடைவுகள் மற்றும் நிர்வாக சிக்கல்களுக்கு மத்தியில் இளம் வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணியை கட்டியெழுப்புவதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான தயாசிறி ஜயசேகரவின் வேண்டுகோளுக்கு அமைய முன்னாள் பயிற்றுவிப்பாளரான திலகா ஜினதாச கடந்த 2017இல் இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வலைப்பந்தாட்ட உலகையே வென்ற யாழ். மங்கை தர்ஜினி சிவலிங்கம்

சிங்கப்பூரில் கடந்தவாரம் நிறைவுக்கு வந்த 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்..

இதனையடுத்து கடந்த 2018இல் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் சம்பியன் பட்டத்தை இலங்கை அணி 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு கைப்பற்றியது.  

இலங்கை அணியின் குறுகிய கால மீள் எழுச்சிக்கும், இந்த வெற்றிக்கும் முக்கிய காரணமாக திலகா ஜினதாச இருந்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

இந்த நிலையில், இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்புக்கு அமைய பயிற்சியாளரது சேவைக்காலம் ஒரு வருடத்துக்கு உட்பட்டதாக வரையறுக்கப்பட்டு இருந்த காரணத்தினால் அவருடைய பதவிக்காலம் 2018இல் நிறைவுக்கு வந்தது

ஆசிய வலைப்பந்தாட்டத்தில் இலங்கை அணியை மீண்டும் வெற்றி பெற வைத்தமை, பிளவுபட்டு இருந்த வீராங்கனைகளை ஓர் அணியாக கட்டியெழுப்பியமை உள்ளிட்ட விடயங்களை எல்லாம் கருத்திற் கொண்டு கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டித் தொடர் வரை அவருக்கான பதவிக்காலத்ததை 2 வருடங்களால் நீட்டிக்க அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

அதுமாத்திரமின்றி, ஆசியாவின் மிகவும் உயர்ந்த வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம், மீண்டும் இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இணைந்து கொள்வதற்கு முக்கிய காரணமாக திலகா ஜினதாச இருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

ஆசியாவில் உள்ள முதல்தர வலைப்பந்தாட்ட பயிற்சியாளர்களில் ஒருவரான திலகா ஜினதாச, 1980 களில் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனைகளில் ஒருவராக திகழ்ந்தார்

அவர்100 மீற்றர் சட்டவேலி ஓட்டம், 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டம், 4×100 அஞ்சலோட்டம் மற்றும் 4×400 அஞ்சலோட்டம் உள்ளிட்ட போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தினார்

மேலும் அவர், 1984இல் கத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழா முதல் 1991 கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழா வரை இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை நாட்டுக்காகப் பெற்றுக் கொடுத்தார்

உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் இலங்கைக்கு முன்னேற்றம்

உலக வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கடந்த ஜுன் மாதம் 30ஆம் திகதி வரையான..

இதில் 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தின் தேசிய சாதனையை தன்னகத்தே வைத்திருந்த திலகா ஜினதாச, 1986 முதல் 1987 வரையான காலப்பகுதியில் 9 தடவைகள் இலங்கை சாதனையை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இதேவேளை, ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட முதலாவது வீராங்கனை என்ற சாதனையும் அவரையே சாரும். இவர் 1988இல் நடைபெற்ற சோல் ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக போட்டியிட்டார்

இதனிடையே, 1993ஆம் ஆண்டு முதல்தடவையாக இலங்கை வலைப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், 1997இல் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணியின் உப தலைவியாகவும் செயற்பட்டார்.  

பிற்காலத்தில் வலைப்பந்தாட்ட பயிற்சியாளராக உருவெடுத்த அவர், 1998இல் மாலைதீவுகள் அணியின் பயிற்சியாளராகவும், 2011 முதல் 2018 வரை புரூனை அணியின் பயிற்சியாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<