இலங்கை பிரீமியர் லீக் முதல் போட்டியில் கோல்ட்ஸ் அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

349
slc-premiere-league-colts-v-moors-day-2-report

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் பிரீமியர் லீக் 2016/2017 பருவகால சுற்றுத்தொடரின் ‘A’ மட்டத்திற்கான முதல் போட்டியில் சோனகர் விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், இன்னிங்ஸ் மற்றும் 77 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியது.

நேற்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 6 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களை பெற்றிருந்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், இன்றைய நாள் ஆட்டத்தின்போது 367 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் தில்ருவன் பெரேரா 95 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 80 ஓட்டங்கள் விளாசியிருந்தார். அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய காஞ்சன குணவர்தன மற்றும் எஞ்சலோ ஜயசிங்க முறையே 74 மற்றும் 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட கோசல குலசேகர 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய சோனகர் விளையாட்டு கழகம் ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பந்து வீச்சில் அசத்திய பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகள் வீழ்த்த, சோனகர் விளையாட்டு கழகம் 158 ஓட்டங்களுக்கு சுருண்டது. அவ்வணி சார்பில் தரிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இதன்படி 209 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட கோல்ட்ஸ் அணி எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. இம்முறையும் மோசமான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட சோனகர் விளையாட்டு கழகம் 132 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தனித்து போராடிய சச்சித்ர பெரேரா 55 பந்துகளில் 52 ஓட்டங்கள் பெற்றார்.

கோல்ட்ஸ் அணி சார்பில் தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன்படி கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இரண்டே நாட்களிற்குள் போட்டியை முடித்து இலகு வெற்றியை சுவீகரித்துக் கொண்டது. இப்போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் மொத்தமாக 17.835 புள்ளிகளையும் சோனகர் விளையாட்டு கழகம் 2.45 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 367 (101.2) – தில்ருவன் பெரேரா 80, காஞ்சன குணவர்தன 74, ஹஷான் துமிந்து 72, தாரக கமகே 42, கோசல குலசேகர 5/77

சோனகர் விளையாட்டு கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 158 (30.2) – தரிந்து மெண்டிஸ் 35, பிரபாத் ஜயசூரிய 4/40, இஷான் ஜயரத்ன 3/32

சோனகர் விளையாட்டு கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 132 (32.1) – சச்சித்ர பெரேரா 52, தில்ருவன் பெரேரா 4/25, தாரக கமகே 3/29

முடிவு: கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 77 ஓட்டங்களினால் வெற்றி