டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று

Tokyo Olympic - 2020

96
olympic village
@Reuters

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த அதிகாரி ஒருவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

>> இலங்கை ஒலிம்பிக் குழு இன்று டோக்கியோ புறப்படுகிறது

கொரோனா பரவல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் 6 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் வீர வீராங்கனைகள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் அதிகாரி ஒருவருக்கு கொவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதனையடுத்து குறித்த நபர் ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்கவுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

இதன்படி, ஒலிம்பிக் கிராமத்தில் ஏற்பட்ட முதல் கொவிட் 19 பாதிப்பு இதுதான் என்று டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மசா டகாயா தெரிவித்தார். 

>> இலங்கை ஒலிம்பிக் அணிக்கு கொவிட் தடுப்பூசி டிஜிட்டல் அட்டை

இருப்பினும், கொவிட் 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட அதிகாரி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தொடர்பில் எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அறிவிக்காமல் இருக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குக் குழு முடிவு செய்துள்ளது.

எனினும், குறித்த நபர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும், விளையாட்டு வீரர் அல்ல என்றும் ஆனால் விளையாட்டு ஏற்பாட்டுக்காக வந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜூடோ வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் ஒன்றின் ஊழியர்கள் 8 பேர் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<