சாதனைகளை குவித்த இஷான் கிஷனின் கன்னி இரட்டைச்சதம்!

India tour of Bangladesh 2022

160
Ishan Kishan's record breaking double century

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கன்னி சதத்தை பதிவுசெய்த ஒருசில நிமிடங்களில் அதனை இரட்டைச்சதமாக மாற்றி இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் அசத்தியிருந்தார்.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தது. தொடர்ந்து உபாதையால் அணித்தலைவர் ரோஹித் சர்மாவை இழந்தது.

>> கிரிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த இஷான் கிஷன்!

இவ்வாறான இழப்புகளுக்கு மத்தியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இஷான் கிஷனின் துடுப்பாட்டம் பங்களாதேஷ் அணிக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

IPL போட்டிகளில் வேகமான ஓட்டக்குவிப்பால் ஏலத்தில் கோடிகளை அள்ளியிருந்த இவர், தேசிய அணியின் கதவை தொடர்ந்தும் தட்டியிருந்தார். இதில் கிடைக்கும் வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொண்ட இவர் தன்னுடைய 9வது ஒருநாள் போட்டியிலேயே இரட்டைச்சதத்தை பதிவுசெய்துள்ளார்.

இஷான் கிஷனின் இந்த கன்னி இரட்டைச்சதம் அவருக்கான மைல்கல்லாக மாத்திரமின்றி பல சாதனைகளுக்கும் சொந்தமாக்கியிருக்கின்றது. சர்வதேச கிரிக்கெட்டில் இரட்டைச்சதங்களை பெறுவது கடினமான சவாலாக இருந்தாலும், இஷான் கிஷன் பெற்றுக்கொடுத்த இந்த வேகமான இரட்டைச்சதத்தின் சாதனைகளை பார்க்கலாம்.

வேகமான ஒருநாள் இரட்டைச்சதம்

சர்வதேச கிரிக்கெட்டில் வேகமான இரட்டைச்சதத்துக்கு சொந்தக்காரார் என்ற கிரிஸ் கெயிலின் சாதனை இஷான் கிஷனால் முறியடிக்கப்பட்டது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டு கென்பராவில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் கிரிஸ் கெயில் 138 பந்துகளுக்கு இரட்டைச்சதத்தை கடந்திருந்தார். குறிப்பிட்ட இந்த சாதனையை 126 பந்துகளில் 200 ஓட்டங்களை கடந்து இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.

இஷான் கிஷன் மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோருக்கு அடுத்தப்படியாக வீரேந்திர செவாக் 140 பந்துகளுக்கும், சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளுக்கும் இரட்டைச்சதங்களை கடந்துள்ளனர்.

குறைந்த இன்னிங்ஸில் இரட்டைச்சதம்

இஷான் கிஷன் பெற்றுக்கொண்ட இந்த இரட்டைச்சதத்தில் மிகவும் சிறப்புவாய்ந்த விடயம் அவர் இந்த மைல்கல்லை எட்டுவதற்காக எடுத்துக்கொண்ட இன்னிங்ஸ்கள்.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் பக்ஹர் சமான் மாத்திரம் 17வது இன்னிங்ஸில் இரட்டைச்சதம் கடந்துள்ள நிலையில், ஏனைய வீரர்கள் எவரும் 100 இன்னிங்ஸ்களுக்குள் தங்களுடைய இரட்டைச்சதத்தை பதிவுசெய்யவில்லை.Ishan Kishan

எனினும் தன்னுடைய 9வது இன்னிங்ஸில் இரட்டைச்சதம் என்ற மைல்கல்லை இஷான் கிஷன் எட்டியுள்ளார். இவர்கள் இருவரையும் தவிர்த்து ரோஹித் சர்மா மற்றும் மார்டின் கப்டில் ஆகியோர் 103வது இன்னிங்ஸ்களிலும் வீரேந்திர செவாக் 234வது இன்னிங்ஸிலும் தங்களுடைய முதல் இரட்டைச்சதத்தை பதிவுசெய்துள்ளனர்.

சதத்தை இரட்டைச்சதமாக மாற்றிய முதல் வீரர்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் எந்தவொரு வீரரும் இதுவரை தங்களுடைய கன்னி சதத்தை இரட்டைச்சதமாக மாற்றியதில்லை. இந்த சாதனையை முதல் வீரராக இஷான் கிஷன் பதிவுசெய்துள்ளார்.

அதுமாத்திரமின்றி முதல் ஒருநாள் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களை (210) பெற்ற வீரர் என்ற மைல்கல்லையும் இவர் எட்டியுள்ளார். இதற்கு முதல் 2009ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே வீரர் சார்ல்ஸ் கெவண்ட்ரி ஆட்டமிழக்காமல் 194* ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பங்களாதேஷில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை

பங்களாதேஷ் மண்ணில் ஒருநாள் போட்டிகளில் இரட்டைச்சதம் பதிவுசெய்த முதல் வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றுள்ளார். இஷான் கிஷனின் இந்த 210 ஓட்டங்களுக்கு முன்னர் கடந்த 2011ஆம் ஆண்டு ஷேர்ன் வொட்சன் டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 185 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதேவேளை இஷான் கிஷன் பெற்றுக்கொண்ட 210 ஓட்டங்கள் பங்களாதேஷ் அணிக்கு எதிராக வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் பதிவாகியுள்ளது.

இளம் வயதில் இரட்டைச்சதம்

ஒருநாள் போட்டிகளில் குறைந்த வயதில் இரட்டைச்சதம் கடந்த வீரர் என்ற மைல்கல்லையும் இஷான் கிஷன் தன்வசப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா 26 வருடம் 186 நாட்களில் இரட்டைச்சதத்தை பதிவுசெய்திருந்த நிலையில், இஷான் கிஷன் 24 வருடம் 145 நாட்களில் இரட்டைச்சதத்தை பதிவுசெய்து சர்வதேச கிரிக்கெட்டில் இரட்டைச்சதம் கடந்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.

சிக்ஸர் மற்றும் பௌண்டரிகளால் 156 ஓட்டங்கள்

சர்வதேச ஒருாநள் கிரிக்கெட்டில் சிக்ஸர் மற்றும் பௌண்டரிகள் மூலமாக அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் இஷான் கிஷன் பெற்றுக்கொண்டார்.

இந்தப்போட்டியில் 10 சிக்ஸர்கள் மற்றும் 24 பௌண்டரிகளால் மாத்திரம் இவர் 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்தப் பட்டியலில் முதலிடத்தை ரோஹித் சர்மா பெற்றுக்கொண்டுள்ளார். ரோஹித் சர்மா 9 சிக்ஸர்கள் மற்றும் 33 பௌண்டரிகள் அடங்கலாக 186 ஓட்டங்களை பெற்று இந்த வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் 11 சிக்ஸர்கள் மற்றும் 24 பௌண்டரிகள் அடங்கலாக 162 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

35 ஓவர்களில் இரட்டைச்சதம்

ஒருநாள் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றின்போது குறைந்த ஓவர்கள் வீசப்பட்டுக்கொண்டிருந்த தருவாயில் பெற்றுக்கொள்ளப்பட்ட இரட்டைச்சதமாக இஷான் கிஷனின் இந்த இரட்டைச்சதம் பதிவாகியது.

இந்தப்போட்டியின் 34வது ஓவரின் இறுதிப் பந்தில் இஷான் கிஷன் இரட்டைச் சதமடித்தார். இதற்கு முதல் 2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வீரேந்திர செவாக் 43.3 ஓவர்கள் வீசப்பட்டபோது இரட்டைச்சதத்தை எட்டியிருந்தார்.

இதேவேளை, இந்திய அணிக்காக இதுவரை ரோஹித் சர்மா (3 இரட்டைச்சதங்கள்), விரேந்திர செவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இரட்டைச்சதம் அடித்துள்ளனர். மொத்தமாக இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9 இரட்டைச்சதங்கள் மாத்திரமே பெறப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<