ஆசிய இளையோர் மெய்வல்லுனரில் 8 இலங்கை வீரர்கள்

158

குவைத்தில் நடைபெறும் 18 வயதின் கீழ் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியை இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது.

ஆசிய மெய்வல்லுனர் சங்கம் மற்றும் குவைத் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து நடத்தும் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், குறித்த தொடரில் பங்குபற்றவுள்ள 8 பேர் கொண்ட இலங்கை மெய்வல்லுனர் குழாம் விபரத்தை இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்தது. 8 பேர் கொண்ட இலங்கை அணியில் 5 வீரர்களும் 3 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் அண்மையில் நிறைவடைந்த சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் தொடர் மற்றும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர்களில் திறமைகளை வெளிப்படுத்திய மற்றும் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான அடைவு மட்டங்களைப் பூர்த்தி செய்த வீரர்கள் இம்முறை போட்டித் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பாணந்துறை லைசியம் சர்வதேசப் பாடசாலையைச் சேர்ந்த ரஸ்வின் கரீம், 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டிக்காக தேர்வாகியுள்ளார். இந்தப் போட்டித் தொடருக்காக தேர்வாகிய ஒரேயொரு தமிழ் பேசுகின்ற வீரர் இவர் ஆவார்.

கடந்த மாதம் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 90ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதின் கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட இவர், 7.20 மீட்டர் தூரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக இவர் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 18 வயதின் கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 6.79 மீட்டர் தூரம் பாய்ந்து 2ஆவது இடத்தைப் பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி நாளை (11ஆம் திகதி) இலங்கையிலிருந்து புறப்படும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக இந்தப் போட்டித் தொடர் கடந்த மார்ச் மாதம் குவைத்தில் நடைபெறவிருந்தது. எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆண்கள்

  • பி. எஸ். ஜயதிலக்க – 400 மீட்டர்
  • டி. ராஜபக்ஷ – 400 மீட்டர்
  • எஸ். டி. அனுஹாஸ் – உயரம் பாய்தல்
  • ஜி. எல். அர்தாவிது – உயரம் பாய்தல்
  • ஆர். கரீம் – நீளம் பாய்தல்

பெண்கள்

  • கே. என். விக்கிரமசிங்க – 800 மீட்டர்
  • சிதுலி சதித்யா – உயரம் பாய்தல்
  • மதுஷானி ஹேரத் – நீளம் பாய்தல்

அதிகாரிகள்

  • பாலித ஜயதிலக்க – முகாமையாளர்
  • ஜி. கே. குமார – பயிற்சியாளர்
  • இமல்கா ரணவீர – பெண் பொறுப்பதிகாரி

>>  மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<