கோஹ்லியின் சாதனையுடன் இந்திய அணிக்கு வெற்றி

269
Virat kohli
©ICC

இந்திய அணியின் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கான கிரிகெட் சுற்றுத் தொடரின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் டக்வேர்த் லுயிஸ் விதிப்படி 59 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி மழை காரணமாக 13 ஓவர்கள் வீசப்பட்டதன் பின்னர் கைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளராக மெக்கல்லம் நியமனம்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய உதவிப்…

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் வரலாற்று நாயகன் கிறிஸ் கெய்ல் தனது 300ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தது போட்டியின் விஷேட அம்சமாகும். 

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவாண் இரண்டு ஓட்டங்களுடன் முதலாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் 74 ஓட்டங்களை தமக்கிடையே பகிர்ந்திருந்த போது சர்மா 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய ரிஷாப் பான்ட் 20 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

இதன்படி, 101 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணியானது, கோஹ்லி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் நான்காவது விக்கெட்டுக்காக பெறப்பட்ட சத இணைப்பாட்டத்துடன், அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டது. ஒருநாள் சர்வதேச அரங்கில் தனது 42ஆவது சதத்தை பூர்த்தி செய்த கோஹ்லி 120 ஓட்டங்களுடனும், ஐயர் 71 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் கார்லோஸ் ப்ராத்வேட் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். 

இப்போடியில் சதம் கடந்த இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சர்வதேச அரங்கில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் இந்திய அணித்தலைவர் சவ்ரவ் கங்குலி பெற்றிருந்த 11,363 ஓட்டங்களை கடந்து, அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் பட்டியலில் 8ஆம் இடத்துக்கு முன்னேறியிருந்ததுடன் ஒருநாள் அரங்கில் ஒரு அணிக்கு எதிராக குறைந்த இன்னிங்ஸ்களில் 2000 ஓட்டங்களை கடந்த வீரராகவும் சாதனை படைத்திருந்தார். இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 34 இன்னிங்ஸ்களில் 2000 ஓட்டங்களை கடந்திருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் முதலாவது விக்கெட்டாக அவ்வணி 45 ஓட்டங்கள் பெற்றிருந்த போது தனது 300ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய கிறிஸ் கெய்ல் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அதிக ஓட்டங்கள் பெற்ற வீரரான பிரைன் லாரா பெற்றிருந்த 10,405 ஓட்டங்களை கடந்து தனது பெயரை சாதனை ஏட்டில் பதிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் 13ஆவது ஓவர் வீசப்பட்டுக்கொண்டிருந்த போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் போட்டி ஆரம்பிக்கப்பட்ட போது 46 ஓவர்களுக்கு 270 ஓட்டங்கள் என வெற்றியிலக்கு மாற்றப்பட்டிருந்தது. 

ஆப்கான் கிரிக்கெட் ஒப்பந்தத்திலிருந்து மொஹமட் ஷெசாத் அதிரடியாக நீக்கம்

ஆப்கான் கிரிக்கெட் சபையின் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில்…

இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையச் செய்த இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள், அவ்வணியின் சகல விக்கெட்டுகளையும் 210 ஓட்டங்களுக்கு கைப்பற்றியிருந்தனர். இதனால் அவ்வணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 59 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. 

துடுப்பாட்டத்தில் எவின் லூவிஸ் 65 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரண் 42 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் நான்கு விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். போட்டியின் ஆட்ட நாயகனாக சாதனை நாயகன் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார். 

போட்டியின் சுருக்கம்

இந்திய அணி – 279/7 (50) – கோஹ்லி 120, ஐயர் 71, ப்ரத்வேட் 53/3

மேற்கிந்திய தீவுகள் அணி – 210 (42)- லுயிஸ் 65, பூரண் 42, புவனேஷ்வர் குமார் 31/4, மொஹமட் ஷமி 39/2

முடிவு : இந்திய அணி டக்வர்த் லூவிஸ் 59 ஓட்டங்களால் வெற்றி  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<