பயிற்சிகளை ஆரம்பிக்கவிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்

110
Photo - Getty Images

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான பயிற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக, உலகில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டதனால் இங்கிலாந்து உள்ளடங்கலாக உலகின் அனைத்து கிரிக்கெட் வீரர்களதும் பயிற்சிகள் தடைப்பட்டிருந்தன. 

பாகிஸ்தானின் புதிய ஒருநாள் அணித் தலைவராக பாபர் அசாம்

இந்த நிலையிலேயே, கடந்த மார்ச் மாதம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக இலங்கை வந்து பின்னர் அதில் விளையாடாமலேயே தமது தாயகம் திரும்பிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இரண்டு மாத இடைவெளி ஒன்றின் பின்னர் தமது பயிற்சிகளை மீண்டும் ஆரம்பிக்கவிருக்கின்றனர்.

அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகும் இந்த பயிற்சிகளை இங்கிலாந்து கிரிக்கெட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட மற்றும் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்ற 30 வீரர்கள் வரை பெற்றுக்கொள்ளவுள்ளனர். இதன் முதற்கட்டப் பயிற்சிகள் பந்துவீச்சாளர்களுக்காக கொடுக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம், இங்கிலாந்து அணி எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுடனான டெஸ்ட் தொடர்களில் விளையாட எதிர்பார்க்கப்படுவதால், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கே பயிற்சிகளில் ஈடுபட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றதாக இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி இயக்குனர் ஏஷ்லி கிலேஸ் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேவேளை, முதற்கட்டமாக பயிற்சிகளில் ஈடுபடப்போகும் பந்துவீச்சாளர்கள் இரண்டு வாரங்கள் தங்கள் பயிற்சிகளை நிறைவு செய்த பின்னர் துடுப்பாட்ட வீரர்களும், விக்கெட் காப்பாளர்களும் பயிற்சிகளுக்காக அழைக்கப்படவிருக்கின்றனர். ஒவ்வொரு வீரர்களதும் தனிப்பட்ட பயிற்சிகளுக்காக பிரத்தியேக பயிற்சியாளர்கள் கொடுக்கப்படவுள்ளதோடு, இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ஆதரவு உத்தியோகத்தர்களும் வீரர்களுக்கு உதவியாக இருக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் வீரர்களின் பயிற்சிகளுக்காக மொத்தமாக 11 கிரிக்கெட் மைதானங்கள் உபயோகம் செய்யப்படவுள்ளதோடு, அடுத்த வாரம் முதல் வேகப் பந்துவீச்சாளர்கள் தங்களது பயிற்சிகளுக்காக ஏழு மைதானங்களினைப் பயன்படுத்தவிருக்கின்றனர். வீரர்கள், தங்களது பயிற்சிக்காக தங்கள் வதிவிடத்திற்கு மிக அருகிலுள்ள மைதானங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

“முதற்கட்ட நடவடிக்கைகளின் மூலம் தனிப்பட்ட வீரர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவது தெளிவுபடுத்தப்படுகின்றது.” எனக் குறிப்பிட்ட இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் இயக்குனர் ஏஷ்லி கிலேஸ், பயிற்சிகளின் போது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து வீரர்களை பாதுகாக்க அனைத்து சுகாதார அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தார். 

வீரர்களின் பயிற்சிகள் ஒரு புறமிருக்க, இங்கிலாந்து கிரிக்கெட் சபை தமது நாட்டில் கிரிக்கெட் போட்டிகளை பாதுகாப்பான முறையில் மீள நடாத்துவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<