கோலூன்றிப் பாய்தலில் டக்சிதாவுக்கு தங்கம்; துதிஹர்ஷிதன், அப்பாத்துக்கு முதல் பதக்கம்

Sir John Tarbat Senior Athletics Championship 2022

186

90ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் நேற்று (15) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றன.

இதில் கோலூன்றிப் பாய்தலில் வடக்கு மாகாணத்துக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைக்கப் பெற்றன.

அத்;துடன், போட்டிகளிள் 2ஆவது நாளன்று தமிழ் பேசுகின்ற வீரர்கள் எட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அண்மைக்காலமாக தேசிய மட்ட போட்டிகளில் ஜொலித்து வருகின்ற சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த நேசராசா டக்சிதா, 22 வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 3.10 மீட்டர் உயரத்தைத் தாவியிருந்தார்.

முன்னதாக இவர் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் 23 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மெய்வல்லுனர் சங்கம் சார்பில் பங்குகொண்டு தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் அவர் 3.40 மீட்டர் உயரத்தை பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டக்சிதாவுடன் குறித்த போட்டியில் பங்குபற்றிய தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சரத்குமார் சானுஜா (2.60 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

20 வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் மகாஜான கல்லூரி 2 பதக்கங்களை சுவீகரித்தது. இதில் சந்திரகுமார் தீபிகா, 3.00 மீட்டர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தையும், யாதவராசா எலஸ்ரிகா 2.90 மீட்டர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

அத்துடன், 18 வயதின் கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சந்திரகுமார் துசாந்தன் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். போட்டியில் அவர் 3.80 மீட்டர் உயரத்தைத் தாவியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, 18 வயதின் கீழ் ஆண்களுக்கான 2000 மீட்டர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் மாத்தளை இந்து தேசிய பாடசாலை வீரர் சிவாகரன் துதிஹர்ஷிதன் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். போட்டியை 6 நிமிடங்கள் 22.18 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார்.

தேசிய மட்ட போட்டியொன்றில் பங்குகொண்டு முதல் தடவையாக அவர் பதக்கம் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், 16 வயதின் கீழ் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையைச் சேர்ந்த எம்.ஏ.எம். அப்பாத் 12.72 மீற்றரைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

2007ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குகொண்டுள்ள ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்கு முதல் பதக்கத்தை அப்பாத் வென்று கொடுத்து பெருமையை தேடிக் கொடுத்துள்ளார்.

இது தவிர, 18 வயதின் கீழ் ஆண்களுக்கான 800 மீட்டரில் பதுளை மத்திய கல்லூரியைச் சேர்ந்த இக்பால் பஸ்லுல்லாஹ் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவு செய்ய 2 நிமிடங்கள் 01.31 செக்கன்களை அவர் எடுத்தக் கொண்டார்.

22 வயதின் கீழ் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் இறக்குவானை ரத்னாவோக மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.ஏ.ஐ பர்ஹத் வெண்கலப் பதக்கம் சுவீகரித்தார். போட்டியில் அவர் 32.00 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்தார்.

இது இவ்வாறிருக்க, நேற்று நடைபெற்ற போட்டிகளின் முடிவில் 2 போட்டிச் சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன.

16 வயதின்கீழ் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 1.96 மீட்டர் உயரத்தை தாவியதன் மூலம் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த வீ. மெண்டிஸ் புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டினார்.

அதேபோல, 20 வயதின்கீழ் பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் 12.97 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்த கம்பஹா – ஹொலி க்ரொஸ் கல்லூரி வீராங்கனை என். ஹெட்டியாரச்சி புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டினார்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<