Ace Capital கழகத்துக்காக சகலதுறையிலும் பிரகாசித்த லசித் குரூஸ்புள்ளே

Major Clubs Limited Over Tournament 2022

114
SLC Major

லசித் குரூஸ்புள்ளேயின் சகலதுறை ஆட்டத்தின் உதவியால் பிரபல SSC கழகத்துக்கு எதிரான முதல்தர கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் Ace Capital கழகம் 39 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் பிரதான கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் தொடரில் இன்று (13) நடைபெற்ற போட்டியில் Ace Capital கழகம் மற்றும் SSC கழகம் மோதின.

தொம்பகொட இராணுவ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற Ace Capital கழகம் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய அந்த அணி, 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அந்த அணியின் ஐந்து வீரர்கள் டக்-அவுட் முறையில் ஆட்டமிழந்தாலும் அணித்தலைவரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான லசித் குரூஸ்புள்ளே (86) மற்றும் சகுன லியனகே (50) அரைச் சதங்களைப் பெற்று வலுச்சேர்த்தனர்.

SSC கழகத்தின் பந்துவீச்சில் கவிஷ்க சேனாதீர 4 விக்கெட்டுகளையும், சம்மு அஷான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து 173 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய SSC அணியால், 34.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், Ace Capital கழகம் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

SSC அணியின் துடுப்பாட்டத்தில் சமிந்து விக்ரமசிங்க 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, Ace Capital கழகத்தின் பந்துவீச்சு சார்பில் நிம்சர அதரகல்ல 4 விக்கெட்டுகளையும், லசித் குரூஸ்புள்ளே 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தனர்.

எனவே, இந்த வெற்றியின் மூலம் குழு A இல் 8 போட்டிகளில் விளையாடியுள்ள Ace Capital கழகம் 7 வெற்றிகளுடன் 19 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.

மறுபுறத்தில் ஷம்மு அஷான் தலைமையிலான SSC கழகம், இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 இல் வெற்றியீட்டி 15 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

Ace Capital கழகம் – 172 (44.1) – லசித் குரூஸ்புள்ளே 86, சகுன லியனகே 50, கவிஷ்க சேனாதீர 4/20, ஷம்மு அஷான் 3/20, ஷசிக டில்ஷான் 2/45

SSC கழகம் – 133 (34.2) – சமிந்து விக்ரமசிங்க 43, நிம்சர அதரகல்ல 4/14, லசித் குரூஸ்புள்ளே 3/37, சானக தேவிந்த 2/25

முடிவு – Ace Capital கழகம் 39 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<