பொலிஸ் அணியை வீழ்த்தியது பிரபல கண்டி கழகம்

101
Police SC v Kandy SC

கண்டி நித்தவள மைதானத்தில் நடைப்பெற்ற டயலொக் ரக்பி லீக் தொடரின் 4ஆம் வாரத்திற்கான போட்டியொன்றில் பிரபல கண்டி கழகம்   34 – 09 என்ற புள்ளிகள் அடிப்படையில் பொலிஸ் அணியை வென்றி கொண்டது.

பல நட்சத்திர வீரர்களை தம்வசம் கொண்ட கண்டி கழகம், தனது சொந்த மைதானத்தில் பொலிஸ் அணியை எதிர்கொண்டது. கண்டி அணி பலம் வாய்ந்து காணப்பட்டாலும் பொலிஸ் அணியும் கடும் சவாலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அது போலவே போட்டி ஆரம்பித்ததிலிருந்து இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. பலம் மிக்க கண்டி அணிக்கு அழுத்தம் கொடுத்த பொலிஸ் அணியானது கண்டி அணியின் கோட்டைக்குள் வேகமாக பந்தை நகர்த்தியது.

பொலிஸ் தரப்பு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தமையால் அவ்வணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பினை தவறவிடாத ராஜித சன்சோனி உதையினை வெற்றிகரமாக கம்பங்களின் நடுவே உதைய பொலிஸ் அணி 3 புள்ளிகளால் முன்னிலை பெற்றது. (பொலிஸ் 03 – கண்டி 00)

பொலிஸ் அணி முதல் புள்ளியினை பெற்ற பின் அதிரடியாக செயற்பட்ட கண்டி அணி, தனது முதல் ட்ரையை பெற்றுக்கொள்ள வெகு நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. பொலிஸ் அணிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அவ்வணியின் ட்ரை எல்லையை நெருங்கிய கண்டி அணி, காஞ்சன ராமநாயக மூலமாக தனது முதல் ட்ரையை பெற்றுக்கொண்டது. பொலிஸ் அணியின் கோட்டைக்குள் தமது அணி வீரரால் உதையப்பட்ட பந்தை சிறப்பாக பெற்றுக்கொண்ட காஞ்சன முதல் ட்ரையை வைத்தார். திலின விஜேசிங்க உதையை தவறவிடவில்லை. (பொலிஸ் 03 – கண்டி 07)

போட்டியை விட்டுக் கொடுக்காத பொலிஸ் அணி, கடுமையாக போராடியதால் மற்றொரு பெனால்டி வாய்ப்பையும் பெற்றது. கண்டி அணி வீரர் ஓப் சைட்டில் காணப்பட்டதால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறவிடாத பொலிஸ் அணியின் ராஜித சன்சோனி தமது அணிக்கு மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (பொலிஸ் 06 – கண்டி 07)

தொடர்ந்து பொலிஸ் அணியின் வீரரும் ஓப் சைட் காணப்பட்டதால் கண்டி அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றது. 30 மீட்டர் தூரத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பை தவறவிடாமல் இலகுவாக கம்பங்களின் நடுவே உதைந்து, கண்டி அணி சார்பாக மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார் திலின விஜேசிங்க.  (பொலிஸ் 06 – கண்டி 10)

போட்டி சிறிது நேரம் கடந்த பின்பே கண்டி அணியின் வழமையான விளையாட்டை காணக்கூடியதாக இருந்தது. கண்டி அணியின் முன்னாள் தலைவர் பாசில் மரிஜா, தனது சிறப்பான திறனின் மூலம் பொலிஸ் அணி வீரர்களை தந்திரமாக கடந்து சென்று கம்பங்களின் அருகே ட்ரை வைத்து அசத்தினார். இம்முறையும் திலின விஜேசிங்க உதையை தவறவிடவில்லை. (பொலிஸ் 06 – கண்டி 17)

கண்டி அணி சிறப்பாக விளையாடினாலும் இன்று அதிகமான தவறுகளை செய்து பொலிஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்புகளை வாரி வழங்கியது எனக் கூறலாம். மீண்டும் ஒரு முறை பெனால்டி வாய்ப்பினை பெற்ற பொலிஸ் அணி கம்பங்களை நோக்கி உதைய தீர்மானித்தது. எனினும் உதைந்த பந்து கம்பத்தில் மோதி திரும்ப, அதை பொலிஸ் அணி கைப்பற்றிக்கொண்டது.

எனினும் மீண்டும் ஒரு முறை கண்டி அணியின் தவறான விளையாட்டினால் பொலிஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. கம்பங்களின் அருகே கிடைத்த இலகுவான வாய்ப்பை தவறவிடாத ராஜித சன்சோனி வெற்றிகரமாக உதைந்தார். (பொலிஸ் 09 – கண்டி 17)

முதல் பாதி : பொலிஸ் 09 – 17 கண்டி

இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் சமமாக மோதிக்கொண்டன. இந்தப் பாதியிலும் புள்ளி பெறுவதற்கான முதல் வாய்ப்பு பொலிஸ் அணிக்கே கிடைத்தது. கண்டி அணி வீரரொருவர் அபாயகரமான முறையில் பொலிஸ் அணி வீரரை தடுத்தமைக்காக அவ்வணிக்கு மீண்டும் ஒரு முறை பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதன்போது, 40 மீட்டர் தூரத்தில் இருந்து ராஜித சன்சோனி பந்தை உதைய, பந்து மீண்டும் ஒரு முறை கம்பத்தில் மோதியதால் புள்ளிகளை பெற பொலிஸ் அணி தவறியது.

தொடர்ந்து கண்டி அணியின் கோட்டைக்குள் பொலிஸ் அணிக்கு பல வாய்ப்புக்கள் கிடைத்தாலும் சிறிய தவறுகளினால் புள்ளிகள் பெறக் கூடிய அரிய சந்தர்ப்பங்களை அவ்வணி இழந்தது. அதன் பின்னர் போட்டி முழுவதுமாக கண்டி அணியே ஆதிக்கம் செலுத்தியது.

பொலிஸ் அணியின் 5 மீட்டர் எல்லைக்குள் கிடைத்த பெனால்டி வாய்ப்பை உடனடியாக செயற்படுத்திய கண்டி அணித் தலைவர் ரொஷான் வீரரத்ன தனியாக ஓடி சென்று கம்பங்களின் இடையே ட்ரை வைத்தார். அதற்கான உதையை திலின விஜேசிங்க இலகுவாக உதைந்து புள்ளிகளை உயர்த்தினார். (பொலிஸ் 09 – கண்டி 24)

மீண்டும் ஒரு முறை பொலிஸ் அணியின் எல்லையை தொட்ட கண்டி அணி மேலும் 5 புள்ளிகளை ஷெஹான் பதிரண மூலமாக பெற்றுக்கொண்ட போதும் அர்ஷாத் ஜமால்தீன் உதையை தவறவிட்டார். (பொலிஸ் 09 – கண்டி 29)

முன்பு கூறியது போன்று கண்டி அணி பல தவறுகள் செய்து எதிரணிக்கு பெனால்டி வாய்ப்புகளை வழங்கிய போதும் பொலிஸ் அணி அவற்றின் மூலம் உச்ச பயனை பெற தவறியது. அந்த வகையில் அவ்வணிக்கு கிடைத்த இறுதி வாய்ப்பாக 45 மீட்டர் தூரத்தில் கிடைத்த பெனால்டி உதையை ராஜித சன்சோனி தவறவிட்டார்.

அதன் பின்னர் இறுதியாக ரிச்சர்ட் தர்மபால கண்டி அணி சார்பாக இறுதி ட்ரை வைத்தார். இம்முறையும் அர்ஷாத் ஜமால்தீன் உதையை தவறவிட்டார்.

முழு நேரம்  : பொலிஸ் 09 : 34 கண்டி

புள்ளிகளைப் பெற்றோர்

கண்டி அணி

திலின விஜேசிங்க – 3C, 1P

காஞ்சன ராமநாயக்க – 1T

ரொஷான் வீரரத்ன – 1T

ஷெஹான் பதிறன – 1T

ரிச்சர்ட் தர்மபால – 1T

பாசில் மரிஜா – 1T

பொலிஸ் அணி

ராஜித சன்சோனி – 3P