சூரிச் டயமண்ட் லீக்கில் யுபுன் அபேகோனுக்கு 5ஆவது இடம்

151

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நேற்று இரவு (08) நடைபெற்ற டயமண்ட் லீக் ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியில் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் 5ஆவது இடத்தைப் பிடித்தார்.

உலக மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரின் கடைசி அத்தியாயம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில உள்ள லெட்ஸ்டிகிரவுன்ட் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆண்டு முழுவதும் 12 கட்டங்களாக நடைபெற்ற டயமண்ட் லீக் மெய்வல்லுனர் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய உலகின் அதிசிறந்த முன்னணி மெய்வல்லுனர்கள் ஆண்களுக்கான 100 மீட்டரில் களமிறங்கியிருந்தனர்.

இதில் இத்தாலியில் அண்மைக்காலமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றவரும், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்தவருமான யுபுன் அபேகோன், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக டயமண்ட் லீக் மெய்வல்லுனர் இறுதிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்டார்.

இதன்படி, அமெரிக்காவின் ட்ரவோன் ப்ரோமெல், ஜமைக்காவின் யொஹான் பிளேக், கனடாவின் அன்ட்ரே டி கிராஸ், தென்னாபிரிக்காவின் அகானி சிம்பினே உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்களுடன் போட்டியிட்ட யுபுன், 10.14 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 5ஆவது இடத்தைப் பிடித்தார்.

எவ்வாறாயினும், காற்றின் வேகம் 0.3 எதிர்த்திசையில் இருந்ததால் அவரது இந்த நேரப்பெறுமதி பெரும் பாராட்டைப் பெற்றது.

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் கடைசி இடத்தைப் பிடித்த யுபுன், இந்த ஆண்டு இறுதிப் போட்டியில் 5ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

அதேபோல, பிரித்தானியாவின் ரீஸ் ப்ரெஸ்கோட் மற்றும் கனடாவின் அன்ட்ரே டி கிராஸ் ஆகிய உலகின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரர்களை யுபுன் அபேகோன் இந்தப் போட்டியில் தோற்கடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, 2022ஆம் ஆண்டுக்கான டயமண்ட் லீக் ஆண்களுக்கான 100 மீட்டர் சம்பியன் பட்டத்தை அமெரிக்காவின் ட்ரவோன் ப்ரோம்மெல் வெற்றி கொண்டார். போட்டியை அவர் 9.94 செக்கன்களில் நிறைவு செய்தார்.

ஜமைக்காவின் யொஹான் (10.05 செக்.) இரண்டாவது இடத்தையும், கனடாவின் அரோன் பிரௌன் (10.06 செக்.) மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<